ப்ரதிஷ்டை : சில குறிப்புகள்

கோவில்களில் செய்யப்படும் தேவதா ப்ரதிஷ்டைகளை குறித்த விவாதம் பல இடங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது . இது தொடர்பாக பலருக்கும் குழப்பங்கள் இருக்கின்றன . அரசியல் சரி நிலைகள் , அரசியல் , மத நம்பிக்கை என்று பல்வேறு தளங்களில் ப்ரதிஷ்டை தொடர்பான கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன. இது தொடர்பாக ஒரு சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன் ,

அ) பொதுவாக கோவில்களை அவற்றின் தோற்றத்தின் அடிப்படையில் வகைப்படுத்துவர். இவை முறையே ஸ்வயம்வியக்தம் / சுயம்பு , தேவ ப்ரதிஷ்டை , ரிஷி ப்ரதிஷ்டை , மனுஷ ப்ரதிஷ்டை ஆகும் . ஸ்வாமி தானாக உருக்கொண்டு எழுந்த இடங்களை ஸ்வயம் வியக்தம் / சுயம்பு என்பார்கள். திருப்பதி ஒரு உதாரணம் . சுயம்பு லிங்கங்களும் அப்படியே . இத்தகைய கோவில்களில் எக்காரணத்தாலும் சைதன்யம் குன்றாது என்பது ஆன்றோர் வாக்கு. பிறகு வரும் தேவ ப்ரதிஷ்டை ரிஷி ப்ரதிஷ்டை ஆகியவை முறையே தேவர்கள் ரிஷிகள் ஆகியவர்களால் செய்யப்பட்டவை. இங்கு அந்தந்த தேவர்களும் ரிஷிகளும் எப்போதும் சூக்ஷ்ம ரூபத்திலாவது ஸ்வாமிக்கு பூஜை செய்து ஏனைய பூஜா லோபங்களை வீரியம் இழக்க செய்வார்கள் .

ஆ) இங்கு ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல வேண்டியிருக்கிறது . மேற்கண்ட கோவில்களில் சைதன்யத்திற்கு ஊறு வராது என்று சொல்வது இஷ்டப்படி கூத்தடிப்பதற்கான அனுமதி சீட்டல்ல . எதையுமே தலைகீழாக புரிந்து கொள்ளும் நபர்கள் அதிகரித்திருப்பதால் சில விஷயங்களை விசேஷ ச்ரத்தை எடுத்து விளக்க வேண்டியிருக்கிறது . ஒரு மாணவன் சுய முயற்சியாலேயே நன்றாக படிக்கிறான் என்றால் அதற்கு பொருள் அவனுக்கு ஆசிரியர்களது கவனம் , கற்பித்தல் தேவையில்லை என்றல்ல . நேர் மாறாக அவனுக்கு இன்னமும் நன்றாக கல்வியை போதிக்க வேண்டும் . அது சவாலான காரியமும் கூட . அதே போலத்தான் தானாகவே ப்ரகாசிக்கும் மேற்கண்ட கோவில்களில் இன்னமும் அதிக கவனம் எடுத்து ஆகமம் பிசகாமல் பூஜைகளை செய்ய வேண்டும் என்பதே நுட்பம் .

இ) இனி இருப்பது மனித ப்ரதிஷ்டை கோவில் . அதாவது மானுடன் ஒருவனது வேண்டுகோளை ஏற்று ஆகமம் வல்ல ஆச்சாரியன் செய்யும் ப்ரதிஷ்டை . யார் இத்தகைய கோவில்களை கட்டலாம் ? இறை பக்தியில் ஊறியவர்களோ , கோவில் கட்டுவதற்கான உத்தரவை ஏதாவது ஒரு விதத்தில் இறைவனிடம் இருந்து பெற்றவர்களோ , தன்னை ஒரு கருவியாக்கி இறைவன் உலகோருக்கு அருள் செய்கிறார் என்ற எண்ணத்துடன் ஆகம ஆச்சாரியனை சரண்டைந்து அவர் வசம் தனக்கு ஏற்பட்டிருக்கும் ப்ரேரணையை சொல்லி , அது சரியானதும் உண்மையானதும் தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு அவர் வழிக்காட்டுதலில் இறைவனை ப்ரதிஷ்டிப்பதற்கான கோவிலை கட்டலாம் . இவ்வாறன்றி ஆணவத்தாலோ , மமகாரத்தாலோ, போட்டிக்காகவோ தெய்வ பிரதிஷ்டையை செய்ய முடிந்தால் அது நல்ல விதத்தில் முடியாது. அத்தகைய தேவாலயங்கள் காலகாலமாக ஒரு தனி மனிதனின் / சமூகத்தின் வீழ்ச்சியின் அடையாளமாக மட்டுமே எஞ்சியிருக்கும். இறைவனை மையப்பொருளாக கொள்ளாத எந்த சமயச்சடங்கும் நன்மை தராது . பகவானுக்கு விதிக்கப்பட்ட நைவேத்யமான பால்பாயசத்தை செய்ய வேண்டும் என்று அடுப்பை பறற வைத்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் . நமக்கு பால் பாயசம் அருந்தும் ஆசை வந்து அதனை நைவேத்யமாகவே செய்துவிடலாமே என்று எண்ணினால் அடியில் பிடிக்கத்தான் செய்யும் . வசூலுக்காக கோவில் கட்டும் வழிமுறைகளை சாணக்ய தந்த்ரம் என்று போற்றத்தொடங்கிய காலத்திலேயே பிரச்சனைகளும் முளைக்கத் தொடங்கின .

ஈ) மேல சொன்னது படி நூதனமாக ஒரு கோவிலைக்கட்டி அதில் ஒரு தெய்வ சக்தியை பிரதிஷ்டை செய்வதற்கு என்றாலும் சரி , பழைய கோவில்களில் புனருத்தாரணம் செய்வது என்றாலும் சரி , அதற்கு தக்க ஆச்சாரியன் தேவை . சைவாகமம் வைணவ ஆகமம் தந்த்ர பத்ததிகள் போன்றவை இந்த ஆச்சாரியனது லக்ஷணத்தை விளக்குகின்றன . சுருக்கமாக சொன்னால் ஆச்சாரியனானவன் தெய்வ பக்தி உடைய , ஆகம ஞானம் உடைய தீக்ஷிக்கப்பட்ட உபாசனையும் அனுஷ்டானமும் உடைய அதி உத்தமமான பிராமணனாக இருக்க வேண்டும் . ஆகம ஞானம் என்றால் ஏதாவது ஒரு அண்ணாவின் பாடசாலையில் பரோட்டா உண்டு நாலு கும்பாபிஷேகங்களுக்கு துணை நடிகர்களாக போய் கூட்டத்தோடு கூட்டமாக சான்றிதழை வாங்கிக் கொண்டு வருவது அல்ல . ஆகமங்கள் உட்பொருள் தெரிய வேண்டும் என்றால் தக்க சக்தி நிபாதம் இருக்க வேண்டும் . ஒவ்வொரு ஆகமத்திற்கும் அதற்கான துறவுகோலான மந்த்ரங்கள் உண்டு. அவறறை நியமத்துடன் உச்சரித்து புரச்சரணம் செய்து தேவதா அனுக்கிரகத்திற்கு பாத்திரமானால் மட்டுமே ஆகமம் திறந்து தனது ரகசியங்களை வெளியிடும் . இதற்கு முதற்படி என்பது இந்த பாதையில் சஞ்சரிக்கும் குருவை பெறுவது என்பதாகும். இல்லாவிட்டால் ஆகமக் கல்வி என்பது ஏட்டுச்சுரைக்காயாகக் கூட தெளியாது . ஆகமத்தை விடுங்கள் , சில மந்த்ர சுவடிகள் கூட அதற்கான மந்த்ர சாவி இல்லாவிட்டால் பொருள் தராது . உங்களுக்கு நன்றாக தெரிந்த லிபியாக இருந்தாலும் வாசிக்க விடாது . ஆகவே இங்கு சொல்லப்படும் ஆகம ஞானம் என்பது எத்தகையது என்பதை புரிந்து கொள்ளுங்கள் . பக்தி , ஞானம் , சக்தி நிபாதம் , ஒழுக்கம் ஆகியவை ஒன்றோடு ஒன்று பிணைந்து பரஸ்பரம் வலுப்படுத்துபவைகளே . அருள் இல்லாதவர்கள் ஆகம ப்ரவேசம் செய்தால் விபரீத ஞானமே ஏற்படும் என்று அறிக

உ) மேலே சொன்ன விஷயங்கள் பலவற்றையும் ஏற்றுக்கொள்ளும் நண்பர்களுக்கு கூட ஆச்சாரியன் உத்தம அந்தணராக இருக்க வேண்டும் என்பது மனக்கசப்பை தரலாம். அந்தணர் என்றால் பிறப்பாலும் வாழ்வாலும் அந்தணர். அந்தண மனநிலையை மட்டும் கொண்டவர் என்றோ அந்தண வாழ்க்கையை மட்டும் வாழ்பவர் என்றோ பூர்வர்கள் யாரும் சொல்லவில்லை . பிறப்பால் அந்தணனாக இருக்க வேண்டும் அதனுடன் அந்தணருக்கு உடைய சாத்வீக தன்மையை கொண்டிருக்க வேண்டும் என்று தெளிவாக நூல்கள் சொல்லுகின்றன . இது தவிர அந்த அந்த பிரிவு சொல்லும் ஆதி சைவர் ஆதி பாஞ்சராத்ரர் , வைகானசர் போன்ற கொடி வழியும் இன்றியமையாததே . இது நவீன மனதிற்கு ஏற்றதாக இல்லை என்று புரிகிறது . குறிப்பிட்ட வாழ்க்கை முறையும் ஆகம அறிவும் மட்டும் போதும் என்றிருந்தால் எங்களைப் போன்ற பலருக்கு வசதியாகவே இருந்திருக்கும் தான் . ஆனால் சாஸ்த்ரம் இந்த விஷயத்தை தெளிவாக நிர்ணயம் செய்திருக்கிறது என்னும் போது அதில் இருக்கும் நியாயத்தையும் நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும். அதை விட்டு நமது விருப்பத்திற்கு ஏற்ப எல்லாவற்றையும் வளைக்கலாம் என்றால் பிறகு அடிப்படைகளே அர்த்தமற்றவையாகிவிடும் . எரிச்சலோ கடுப்போ இல்லாமல் ஆணவம் அஹங்காரம் இல்லாமல் நிதானமாக சிந்தித்தால் உண்மை புலப்படும்.

ஊ) பலருக்கும் வர்ண விஷயத்தில் மனக்குறை ஏற்பட காரணம் அவர்களது அனுபவங்களே. சாக்கடையை எல்லா ஊர்களிலும் கிடைக்கும் . ஆனால் கங்கை நீர் வேண்டும் என்றால் நாம் தான் தீர்த்தாடனம் செல்ல வேண்டும் . ஆச்சரிய அர்ச்சகர்கள் விஷயத்திலும் இப்படித்தான் . தலைக்கு குளிக்காமல் எண்ணெய்யை பூசி சமாளித்துக் கொண்டு இளித்துக் கொண்டு கும்பாபிஷேக ஒப்பந்தம் பிடித்து காசு தேற அலைபவர்களைத்தான் உங்களில் பலர் அதிகமும் கண்டிருக்க கூடும் . அதனால் தான் வெறுப்பு கசப்பு எல்லாம் ||( இனி முற்றுப்புள்ளிக்கு பதிலாக இக்கட்டுரையில் இரு கோடுகளையும் || சில இடங்களில் பயன்படுத்துவேன் ) || கத்திக் கொண்டே இருப்பதால் கழுதையின் இருப்பு எல்லோருக்கும் தெரிகிறது . மெல்ல கனைப்பதால் குதிரைகளின் இருப்பு பலருக்கும் தெரிவதில்லை . ப்ரதிஷ்டையை பணம் சம்பாதிக்கும் வழியாக அல்லாமல் தங்களது மதக் கடமையாக செய்யும் அர்ச்சகர்கள் / ஆச்சாரியர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் . இவர்கள் தளும்பாமல் நிறைகுடமாக அமைதியாக இருக்கிறார்கள் . இவர்களது அணுகுமுறையை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் .

எ) புதிய கோவில் தொடர்பாக பேச வந்தாலும் சரி , ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேகம் என்றாலும் சரி நல்ல ஆச்சாரியன் தனது உபாசனா மூர்த்தியின் அனுமதி இல்லாமல் ஒரு அடியை கூட எடுத்து வைக்கமாட்டான் . உத்தரவு கிடைக்காவிட்டால் வர முடியாது என்று தெளிவாக சொல்லி விடுவான் . ப்ரதிஷ்டைக்கு வர சம்மதிக்க வேண்டும் என்றால் அதற்கான சமிக்ஞை அவருக்கு கிடைத்திருக்க வேண்டும் . இல்லாவிட்டால் இல்லை தான் . அவ்வாறு உத்தரவு கிடைத்த பிறகு ப்ரதிஷ்டை செய்யும் முஹுர்த்தத்திற்கு ஒரு மாதம் முன்பே விரதங்களை தொடங்குவார் . குருவை தரிசித்து ஆசிர்வாதம் பெறுதல், தீர்த்தாடனம் க்ஷேத்ராடனம் ஆகியவை முதல் படிகள் . பிறகு அகப்புற தூய்மைக்கான விரதங்கள். இதில் கடுமையான உண்ணா நோன்புகள் கூட உண்டு . இதற்கு பிறகு ப்ரதான தேவதையின் மந்த்ரத்தை லகு புரச்சரணம் செய்து விடுவார்கள் . விரிவான பூத சுத்தி , தொடர்ந்த நியாசங்கள் ஆகியவையும் இருக்கும் . இதற்கு பிறகு அவரவர் ஆகமம் விதித்த காலத்தில் காப்புக் கட்டிக்கொள்வர். ஒரு விஷயத்தை நன்றாக கவனிக்கவும். காப்புக்கட்டி கொள்வதற்கு ஒரு மாதம் முன்பிருந்தே பூர்வாங்க சுத்தி மற்றும் சாதனா க்ரியைகள் தொடங்கி விடும் . பலர் மௌன விரதத்தையும் கைக்கொள்வது உண்டு . காப்புக்கட்டி விட்டால் பிறகு காப்பை அகற்றும் வரை அந்த ஆச்சாரியனுக்கு எந்த தீட்டுத் தொடக்கும் இல்லை . ஜனன மரணங்கள் அவனை பாதிக்காது . மனதளவில் கூட அவன் அவை குறித்து எண்ணக் கூடாது . ஜனன மரண காரியங்கள் நடக்கும் இடத்திற்கு செல்லவும் கூடாது . காப்புக்கட்டிவிட்டால் கோவில் எல்லைக்குள்ளாவது , கோவில் கோபுரம் நிழல் விழும் எல்லைக்குள்ளாவது , சன்னதி தெருவிலாவது வசிக்க வேண்டும்.

ஏ) ஒரு முக்கிய புள்ளி நமது வீட்டிற்கு வந்தாலே நாம் அவருக்கு இருப்பதிலேயே சிறந்த பானபாத்திரத்தில் குடிநீர் கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறோம் . அதற்கு ஆலாய் பறக்கிறோம் . ப்ரதிஷ்டையில் வந்தருளப் போவது தெய்வம் என்னும் போது அவருக்கு மிகவும் சுத்தமான சிறந்த பொருட்களைத்தான் சமர்பிப்பது என்ற தெளிவு இருக்க வேண்டும் . திரவியங்களும் சரி பரிச்மிகளும் சரி ஆகச்சிறந்தவர்களாகவும் தூய்மையானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் . ஆயிரம் லிட்டர் பதப்படுத்தப்பட்ட பாலைக் கொண்டு அபிஷேகம் செய்வதை விட ஒரு கரண்டி சுத்தமான ஹிம்சையற்ற பாலைக் கொண்டு அபிஷேகம் செய்வது தான் சிறந்தது . தெய்வ அருளை கணக்கில் கொள்பவன் பின்னதை தேர்ந்தெடுப்பான். காணொளிக்காக பூஜை செய்பவன் பின்னதை தேர்ந்தெடுப்பான் . ஒரு ஆச்சாரியனுக்கு இந்த தெளிவு வேண்டும் .

ஐ) இத்தகையை க்ரியைகளை ஆத்ம சுத்தியுடன் செய்யும் பல ஆச்சாரியர்கள் என்னிடம் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர் . பிரதிஷ்டை செய்யும் போது இருக்கும் மிகப்பெரிய சவாலே புத்தியை கைவிட்டு தெய்வ சங்கல்பத்திற்கு ஒப்புக் கொடுப்பது தான் . இதற்கு பொருள் அவன் விட்ட வழி என்று மனச்சோர்வு கொள்ள வேண்டும் என்பதல்ல . கற்ற ஆகமக் கல்வி சாமர்த்தியமாக உருக்கொண்டு எழும் போது அதனை வெட்டி எறிந்து தெய்வ ஹிதம் என்னவென்று சிந்திப்பது தான். விதி மீறலுக்கான பிராயசித்தத்தை எல்லா ஆகமங்களும் கூறுகின்றன . அதில் இருந்து அர்ச்சான் புரிந்து கொள்ள வேண்டியது இவை விலக்கப்பட வேண்டும் என்பது தான் . மேலும் தெரியாமல் ஒரு தவறு நடந்து விட்டால் அதற்கு பிராயசித்தம் செய்து கொள்ள வழி இன்னது என்பதும் தான் . ஆனால் ஆகமக் கல்வி பெற்றதாக கூறிக்கொள்ளும் பலரும் பிராயசித்த க்ரியை தமக்கு தெரியும் என்பதாலேயே விதி மீறல்களை செய்ய ஊக்குவிக்கின்றனர் . ” அது பிரச்சனை இல்லை . துணிந்து செய் . ஒரு லகு சம்ப்ரோக்ஷணம் செய்து நிவர்த்தி செய்துவிடலாம் ” என்று யாராவது ஆலோசனை சொல்வதை கேட்டால் அவர் சக்தி நிபாதம் இன்றி ஆகமத்தை அணுகி இருக்கிறார் என்று அறிக . ஒரு ஆகம அறிஞர் இதனை எளிய முறையில் விளக்கினார் . வீட்டின் மையப்பகுதியில் அசுத்தம் ஏற்பட்டால் கூட தண்ணீர் விட்டு கழுவினால் சுத்தமாகிவிடும் என்பது விதி . இது ஏதாவது சிறு குழற்றை தெரியாமல் அசுத்தம் செய்துவிட்டால் பின்பற்ற வேண்டிய விஷயம் . அது தான் தண்ணி விட்டு கழுவினால் போதுமே என்று யாரும் நடு வீட்டை கழிப்பறையாக பயன்படுத்துவதில்லையே ? இதே தெளிவு ஆகமம் தர்ம சாஸ்த்ரம் எல்லாம் சொல்லும் ப்ராயசித்தங்களை குறித்து சிந்திக்கும் போதும் இருக்க வேண்டும் என்பார் .

ஒ) ஆகம நூல்களில் இடைச்சொருகல்கள் உண்டு. பூர்வ மீமாம்சையின் தாக்கத்தால் ஏற்பட்ட சில குழப்படிகள் உண்டு . இவற்றை எல்லாம் கண்டுபிடிக்க எந்த கையேடும் இல்லை . தரப்படுத்தப்பட்ட செயல்முறை வழிகளும் (SOP) இல்லை . இறையருளால் ஏற்படும் தெளிவைக் கொண்டே ஆச்சாரியன் தனது வழியை தீர்மானிக்க வேண்டியிருக்கிறது . இவற்றில் பலவும் குப்தமான கிரியைகள் என்பதால் இவை விவாதத்திற்கு உள்ளாவதில்லை . தனக்கு வசதியானவற்றை தான் பெற்ற ஞானம் என கருதும் ஆச்சார்யன் அதோ கதியையே அடைவான். கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாளைக்கு ஓடும் . இவர்கள் செய்து வைத்த ப்ரதிஷ்டையின் லக்ஷணம் எட்டே நாழிகைகளில் தெரிந்து விடும் . அனுக்ஞை பெறுவது முதல் பாலிகை வரை பல இடங்களிலும் தெய்வ ஹிதத்தை அறிந்து கொள்ளும் வழிகள் உண்டு . அனுக்ஞை என்பது இயந்திர தனமாக செய்யப்பட வேண்டிய விஷயம் அல்ல . அனுக்ஞா கலசம் என்பதில் அக்ஷரார்த்தத்தில் தெய்வ உத்தரவு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளும் வழிகள் உண்டு. இப்படியாக இறை சித்தத்தையும் அருளையும் ஒவ்வொரு கட்டத்திலும் உறுதி செய்யும் ஆச்சாரியன் மிக கவனத்துடன் பிரதிஷ்டையை செய்வார். இருந்த விரதங்களின் பலமும் ஜபித்த மந்திரங்களின் வீரியமும் தெய்வ கடாக்ஷமும் ப்ரத்யக்ஷமாக கிரியைகளில் தெரிய வரும். எந்த வித முயற்சியும் இல்லாமல் சில காரியங்கள் சித்திக்கும். பிரதிஷ்டை வைபவம் நடக்கும் நாட்களில் எந்த ப்ரயத்தனமும் இல்லாமல் அஹோராத்ரம் விழித்திருக்க முடியும் . பசிக்காது ; தாகம் எடுக்காது. அதனாலேயே கழிப்பறைக்கு அடிக்கடி செல்ல வேண்டிய அவசியம் வராது . மூச்சு தீர்க்கமாக நிதானமாக ஓடும். தியானத்தில் இறைவன் வடிவம் எளிதில் தெளியும் . பூஜை செய்யும் போது எந்த சோர்வம் இருக்காது. ஒரு விதமான ப்ரசாந்ததை இருக்கும் . இவ்வாறான அகப்புற நிலைகளுடன் ஆச்சாரியன் இவ்வுலக மக்களின் நன்மையை பொருட்டு தெய்வத்திடம் திருவுருவிலும் சாநித்யம் கொள்ளுமாறு செய்யும் ப்ரார்த்தனை பலனளிப்பதே பிரதிஷ்டையாகும்.

இதற்கு பயிற்சி இத்யாதிகள் எதுவும் கொடுக்க முடியாது . பூர்வர்கள் செய்த புண்ணியம் , சிறு வயதிலிருந்தே செய்து வரும் பூஜை முதலியவை அனைத்தும் சேர்ந்து தான் நல்ல ஆச்சாரியனை உருவாக்குகிறது . இன்ற பல ஆகம பாடசாலைகளில் டம்மி சிலைகளை வைத்து அலங்காரம் செய்ய ப்ரதிஷ்டை செய்ய எல்லாம் சொல்லிக்கொடுக்கிறார்கள் . இதில் எந்த வித அர்த்தமும் இல்லை . மாதிரிகளை வைத்து பயிற்சி எடுப்பதோ simulation போன்றவைகளோ தெய்வ காரியத்தில் எடுபடாது . சிறு வயதில் இருந்து செய்து வரும் ஆத்ம பூஜை தொடங்கி படிப்படியாக ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு விதமான பூஜைகளை க்ரியைகளை செய்து அதன் வாயிலாக அடையும் ஞானமே பலன் தரும் . வீட்டு சுவாமிக்கு இரண்டு பூ இடுவது என்பதில் தொடங்கி அப்பா ஊரில் இல்லாத போது சுவாமிக்கு தண்ணீர்விட்டு பொட்டு வைத்து நைவேத்யம் காட்டுவது (காட்டுவதுதான் 🙂 ) என்று படிப்படியாக ஒரு அர்ச்சகனுக்கு தெய்வத்துடனான உறவு ஏற்படுகிறது . இந்த பாதையில் ஒரு எல்லை வரைக்கும் நம்மில் சிலரும் பயணிக்கவே செய்கிறோம் . அர்ச்சக குலங்களை சார்ந்தவர்கள் இயல்பாகவே ஆத்மார்த்த பூஜையைத் தாண்டி பரார்த்த பூஜையையும் செய்யத் தொடங்குகிறார்கள். ஆகையால் தான் ஆகமங்கள் விதித்தப்படி அவர்களே கோவில் ஆராதனையை செய்ய வேண்டும் என்று நம்புகிறேன் .

இதில் இன்னமும் இரண்டு விஷயங்கள் உள்ளன . அவர் அப்படி பூஜை செய்து அருள் பெறவில்லையா இவர் இப்படி பூஜை செய்து அருள் பெறவில்லையா , எல்லா அருளாளர்களும் ஆகமப்படித்தான் பூஜை செய்தார்களா ? என்று பலர் கேட்பார்கள் . அபூர்வ பிறவிகள் விதிவிலக்குகள் எல்லாம் விதியாக மாட்டார்கள் . தெரு விளக்கு ஒளியில் படித்து இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆனவர்கள் உண்டு . அதற்கு என்று நம் குழந்தைகளிடம் தெருவில் இருந்து படி. அதுவே போதும் என்று சொல்வோமா ? கட்டாயமாக இல்லை . நமக்க மேற்படி இஅபக்கள் அபூர்வமானவர்கள் என்று தெரியும். அவர்கள் வாழ்க்கையை பொது உதாரணமாக்க முடியாது என்பதும் தெரியும் . ஆகம விஷயத்திலும் இது பொருந்துமே .

இந்த இடத்தில் இன்னொரு கேள்வி வருகிறது . மனித வாழ்வில் இருந்து ஏராளமான உதாரணங்களை தருகிறோம் . ஆனால் பேசுவது தெய்வ விஷயமாயிற்றே . தெய்வத்திற்கு இப்படிப்பட்ட அற்பத்தனங்கள் எல்லாம் உண்டா ? கலப்பட சந்தனத்தை பூசினால் கடுப்பாகிறவர் கடவளாக இருக்க முடியுமா ? என்றெல்லாம் கேள்வி வரும் . தெய்வத்திற்கு அற்பத்தனங்கள் கிடையாது . மனிதர்களை போன்ற விகாரங்களும் இல்லை . ஸ்ரீ க்ருஷ்ணர் கீதையில் இலையோ பூவோ வெறும் நீரோ போன்ற எளிமையான விஷயங்களை தந்தாலும் கூட ஏற்றுக்கொள்கிறேன் என்கிறார் . கீதையில் அவர் காட்டும் வழி அது. பக்குவமான பக்தன் செய்யும் ஆத்மாராதனை குறித்த விஷயம் அது. ஆனால் பரார்த்த பூஜை என்று வந்தால் அதே பகவான் சொன்ன பாஞ்சராத்ர மார்க்கத்தைத்தான் கடைபிடிக்க வேண்டும் . என் இஷ்டபடி கோவிலில் பூஜை செய்வேன் என்று நாம் சொல்ல முடியாது . இதில் எந்த விரோதமும் இல்லை . நீங்கள் எவ்வாறு ஒரு தேவதையை அணுகுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமான விஷயம் .

ஓ) விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறேன். ஒரு சிறிய விளக்கம் கூட . ப்ரதிஷ்டை என்பது திஷ்ட அதாவது இருந்துதல் என்ற அடிப்படையில் அமைந்த சொல் என்பர் . இங்கே இருத்துதல் என்பது பிம்பத்தை பீடத்தில் ஏற்றி வைத்தல் மட்டும் தான் என்று பலரும் எண்ணுகின்றனர் . அதுவும் முக்கியமான சடங்கு தான் . ஆனால் முக்கியமாக கூறப்படும் இருத்துதல் என்பது பிம்பத்தில் இறைசக்தியை இருந்துதலே / நிலைநிறுத்துவே . பிரதிஷ்டை / கும்பாபிஷேகம் முடிநது விட்டால் எல்லாம் வெற்றிகரமாக முடிந்து விட்டது . பஞ்சப்படி பயணப்படி பெற்று ஊருக்கு கிளம்ப வேண்டியது தான் பாக்கி என்று பலரும் எண்ணக்கூடும் . அப்படி அல்ல. பூர்வாங்க க்ரியைகள் இருப்பது போலவே நாட்கணக்கில் நடக்கும் உத்ராங்க க்ரியைகளும் உண்டு . அதை விட முக்கியமான விஷயம் பிரதிஷ்டிக்கப்பட்ட தெய்வ சக்தியை நித்தமும் கவனத்துடனும் பக்தியுடனும் பூஜை செய்வதற்கான அர்ச்சுகளை கண்டுபிடித்தல் . மலையாள தேச வழக்கு ஒன்று உண்டு . தந்திரியை ( பிரதிஷ்டை செய்த ஆச்சாரியனை ) ஒரு கோவிலுக்கு தந்தை ஸ்தானம் உடையவர் என்பார்கள் . தாய் ஸ்தானம் மேல்சாந்திக்கு ( நித்ய பூஜை செய்யும் அர்ச்சகனுக்கு) , தாய் தான் நித்யப்படி கவனிக்க வேண்டும் ; போஷிக்க வேண்டும் . ஆகவே நித்ய பூஜைக்கு தக்க அர்ச்சகனை கண்டு பிடிப்பதும் மிகவும் முக்கியமானது.

சிலர் தங்களுக்கு ராசியான பேனாவை பிறருக்கு எழுதக் கொடுக்க மாட்டார்கள் . சிலருக்கு தங்கள் இரு சக்கர வாகனத்தை பிறரிடம் ஓட்டக்கொடுக்க பயம். ஜட பொருட்கள் விஷயத்தில் இவ்வளவு கவனமாக இருக்கும் நாம் தெய்வ விஷயத்தில் எத்தனை கவனமாக இருக்க வேண்டும். தெய்வ அருளுடன் கூடி தான் செய்த கிரியைகளின் பலனால் தெய்வ சாநித்யம் பிம்பத்தல் வந்து விட்டது என்று நம்பும் ஒருவனால் அந்த சாநித்யத்திற்கான நித்ய ஆராதனையை யார் வேண்டுமானாலும் செய்யட்டும் என்று விட்டுப் போகவே முடியாது . தக்க அர்ச்சகன் வசம் தான் ஒப்படைக்க மனம் வரும். ப்ரதிஷ்டை செய்ய தீர்மானித்த நாளில் இருந்தே அர்ச்சகனையும் ஆச்சாரியன் தேடிக் கொண்டுதான் இருப்பார் . சரியான விதத்தில் ப்ரதிஷ்டை நடக்கப் போகிறது / நடந்து விட்டது என்றால் தக்க அர்ச்சகன் கிடைக்காமல் இருக்க மாட்டார் . ஒரு கோவில் சாநித்தியத்துடன் இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிக்க எளிமையான வழி அக்கோவிலில் தலைமுறை தலைமுறையாக ஒரே அர்ச்சக குடும்பம் தான் இருக்கிறதா ? அல்லது குறைந்த பட்சம் ஆண்டு கணக்கில் ஒரே அர்ச்சகர் த்ருப்தியாக கைங்கர்யம் செய்கிறாரா என்பது தான் . அர்ச்சகனும் ஆச்சாரியனும் கோவில் பணியாளர்களும் திருப்தியாக சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதே அக்கோவிலில் நல்ல சாநித்யம் இருக்கிறது என்பதற்கு அடையாளம் . ப்ரதிஷ்டை / கும்பாபிஷேகம் முடிந்த உடனேயே இடத்தில் காலி செய்து சக்ஸஸ் பார்ட்டியில் ஈடுபடும் கல்நெஞ்சம் எல்லாம் தொழில்முறை கும்பாபிஷேக ஒப்பந்த கோஷ்டிக்கே சாத்தியம் .

ஓள் ) தெய்வத்தை வருந்தி விளித்து இறைஞ்சி அங்கு உறையுமாறு பிரார்த்தித்த அந்த ஆச்சாரியனுக்கே அந்த தெய்வ சைதன்யத்தை காக்கும் பொறுப்பும் உள்ளது . தேவதைகளுக்கு நம் காவலோ உதவியோ தேவையில்லை . ஆனால் நம் பிரார்த்தனையின் பெயரில் ஒரு இடத்தில் வந்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கான முறையான பூஜையையும் ஆராதனையையும் செய்வது நமது பொறுப்பாகிறது . அது தான் அறம், அதனாலேயே ஆச்சாரியன் மிகக் கவனமாக பூஜைகள் ஒழுங்காக நடப்பதை உறுதி செய்ய வேண்டும் . அதெல்லாம் நடக்கிற காரியமா என்று சிலர் எண்ணக்கூடும் . நடக்கும் காரியம் தான் என்ற அர்ச்சக குடிகளை சார்ந்த பெரியவர்கள் கூறுகிறார்கள். எங்கள் ஊரில் ஒரு கோவில் உண்டு . அதன் தந்திரி 200 மைல்களுக்கு அப்பால் கேரளத்தில் வசிக்கிறார் . ஆனால் இங்குள்ள பூஜைகளில் ஏதாவது குறைகள் ஏற்பட்டால் அவருக்கு தெரிந்து விடும் . யாரோ ஒற்று வேலை பார்க்கிறார்கள் என்று எண்ண வேண்டாம் . இரண்டாம் நபருக்கு தெரியாத விஷயங்கள் கூட அவருக்கு தெரியும் . திடீரென்று அவர் வருகிறார் என்றால் அது ப்ராயசித்த பூஜைக்காகத்தான் இருக்கும் . யாரிடமும் எதுவும் கேட்க மாட்டார் ; இறைந்தும் பேச மாட்டார் . வந்து கிரியைகளை அவர் பாட்டிற்கு செய்வார் . சில நேரங்களில் தவறு செய்த ஆலயக்குடியை சார்ந்தவருக்கே கூட இவர் குறிப்பிட்ட ப்ராயசித்த க்ரியைகளை செய்யும் போது தான் அது உறைக்கும் . மன்னிப்பு கேட்டு இனி செய்ய மாட்டேன் என்று உறுதி கூறுவார்கள் . எனது நண்பர் தந்திரியிடம் இது எப்படி சாத்தியம் என்று கேட்ட போது அத்திருத்தலத்து உறையும் ஸ்வாமியின் கணங்களுள் ஒருவர் தனது நித்திய தேவார வேளையில் ( ஆத்ம பூஜையின் போது ) கோவிலில் ஏதாவது குறைபாடு இருந்தால் அதனை சூக்ஷ்மமாக உணர்த்திவிடுவார் என்றார் .

தமிழ்நாட்டில் ஒரு அர்ச்சகருடன் பேசிக்கொண்டிருந்தேன் . அவர் யாரிடமும் பூஜைப்பொருள் உபயம் கூட கேட்பதில்லை. ஆனால் கோவிலில் எதற்கும் குறைவில்லை . அவரும் த்ருப்தியாக வாழ்ந்தார் . எப்படி சாத்தியம் என்று விசாரித்தேன் . பூஜைகளை முடிந்த மட்டும் ஒழுங்காக செய்துவிட்டு தேவைகளை நிர்மால்யதாரியிடம் தெரிவித்தால் போதும் . அவர் ஏற்பாடு செய்து விடுவார் என்றார் . எத்தனைக்க எத்தனை நமக்கு சரியாக பூஜையை செய்ய வேண்டும் என்று எண்ணம் இருக்கிறதோ அத்தனைக்கு அத்தனை கடவுளும் வழி காண்பிப்பார் . வேறு ஒரு கோவிலில் திருவீதி உலாவிற்கு பிரச்சனை வந்தது . காவல் நிலையம் வழக்காடு மன்றம் என்று அலைந்தும் காரியம் நடப்பது போலத் தெரியவில்லை . பட்டாச்சாரியர் கவலையே படவில்லை . விஷ்வக்சேனரிடம் சொல்லியிருக்கிறேன் . அவர் பார்த்துக்கொள்வார் . அவர் நகர் சோதனைக்கு கிளம்புவதற்கு முன் எல்லாப் பிரச்சனைகளையும் சரி செய்து விடுவார் என்று ஆணித்தரமாக சொன்னார் . அவ்வண்ணமே நடக்கவும் செய்தது. பட்டாச்சாரியருக்கு ஸ்வாமி மேலும் விஸ்வக்சேனர் மீதும் அவ்வளவு நம்பிக்கை . மேலும் எதற்காக விஸ்வக்ஸேன ப்ரதிஷ்டை இருக்கிறது என்றும் தெரியும் . அதனால் லகுவாக காரியத்தை நடத்தி விட்டார் . ஆனால் பல பெரிய கோவில்களிலேயே கூட விஷ்வக்சேனர் க்ஷேத்ர பாலர் தீர்த்த பாலர் எல்லாம் கவனிப்பு இன்றி இருப்பர். விளைவாக முன்சீஃப் நீதிமன்றம் தொடங்கி உச்சநீதமன்றம் வரை ஆண்டு கணக்கில் வழக்குகள் நடந்துகொண்டிருக்கும். நல்ல விதத்தில் பூஜை நடந்தால் , சாநித்யம் இருந்தால் அக்கோவிலை யாராலும் எதுவும் செய்ய முடியாது . கோவில் எல்லைக்குள் அனிஷ்ட சம்பவங்கள் நடக்காது .

ஃ) மேலே எழுதியிருப்பது எல்லாம் நடைமுறையில் சாத்தியம் தானா என்று பலருக்கு கேள்வி ஏற்படலாம். நடைமுறையில் சில இடங்களிலாவது நடக்கிறது என்பதில் தான் நமது நம்பிக்கையின் ஆணி வேர் இருக்கிறது . இதெல்லாம் கனவில் தான் சாத்தியம் என்றால் கூட கனவிலாவது நடக்கட்டும் . அதற்கும் புண்ணியம் உண்டே என்பது தான் என் பதில். இப்படி எல்லாம் நடக்கிறது என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் . ஒவ்வொரு விஷயமாக சரி செய்ய முயல வேண்டும் . நல்லபடியாக விஷயங்கள் நடக்க இறைவனிடம் ப்ரார்த்திக்க வேண்டும் . நம் எண்ணம் போலத்தான் இறைவன் அருள் புரிவார் . பிரதிஷ்டை , கும்பாபிஷேகம் எல்லாம் கண்கட்டு வித்தையும் அல்ல ; தொழிற்நுட்பமும் அல்ல . இறைவன் தனது கருணாகடாக்ஷத்தால் நமக்கு காட்டிய வழி . இதனை நாம் உணர வேண்டும்.

இனி இன்னொரு கேள்வியும் வரும். ஆக ஆச்சாரியனும் அர்ச்சகனும் சரி இல்லாததால் தான் எல்லா பிரச்சனைகளுமா ? என்பதே அக்கேள்வி . யதா ராஜா ததா ப்ரஜா என்னும் வாக்கியத்தை கேட்டிருப்பீர்கள் . அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி . அதே போல யதா ப்ரஜா ததா ராஜா என்பதும் உண்மை தானே ? மக்களின் தன்மைக்கு ஏற்பத்தானே அரசனும் அமைவான் ? பூனைக் கூட்டத்திற்கு புலியா தலமை தாங்க முடியும் ? அதே விஷயம் தான் இங்கும் . பக்தர்கள் எத்தனைக்கு எத்தனை யோக்கியமாக ஒழுங்காக நேர்மையாக பக்தியுடன் இருக்கிறார்களோ அத்தனைக்கு அத்தனை தான் அவர்களுக்கான அர்ச்சகன் ஆச்சாரியன் எல்லாம் அமைவார்கள். பக்தியுடனான சாத்வீகர்கள் கோவில் எழுப்ப முயலும் போது அவர்களுக்கு அருள் புரிய இறைவன் உத்தமமான ஆச்சாரியனை அர்ச்சகனை அனுப்புகிறார் . உத்தமமான ஆச்சாரியனால் ப்ரதிஷ்டிக்கப்பட்டு உத்தமமான அர்ச்சகர்களால் பூஜிக்கப்படும் தெய்வ சைதன்யம் இன்னும் பல சாத்வீகர்களை ஈர்க்கிறது . அயோக்கியர்களை அவ்விடத்திற்கு வர விடாமல் செய்கிறது . இவ்வாறு ஒன்றன் பின் மற்றொன்றாக நிகழ்வுகள் நடக்கின்றன . முதல் புள்ளி நாம் நம்மை சரி செய்து கொள்வதே. மிச்சம் எல்லாம் தானாக அமையும் , நமக்கு எது வசதியாக இருக்கிறது என்று யோசிக்காமல் சாஸ்திரம் எது என்று யோசித்தாலே போதும் ; போலிகளை விலக்கி சாத்வீகர்களை அடையாளம் காண முடியும் .

அமிர்தத்தை பொழியும் ஆமை


அ)

தாயம்மா பாட்டியின் 4 1 கதைகள் புத்தகத்தை பத்து / பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு பின் மதிய பொழுதில் சுதர்சன் புத்தகக் கடையில் கண்டெடுத்தேன் . கைவசம் அதிகம் பணம் இல்லாத ஒரு மாதக் கடைசி அது .வழக்கமாக அப்படிப்பட்ட வரண்ட நாட்களில் தான் தீவிரமான இலக்கிய தாகம் ஏற்படும் .அதன் விளைவாக சுதர்சனிற்கு சென்று கையிருப்பைக் கொண்டு ஏதாவது புத்தகம் வாங்க முடியுமா என்று குடைவது உண்டு . அன்று தாயம்மா பாட்டி சொன்ன கதைகள் புத்தகத்தின் பழைய பதிப்பு ஒன்று கிடைத்தது . புத்தகத்தை புரட்டி பார்த்தேன் ; ஒரு பத்தியை வாசிப்பதற்குள் இவர் நம்மவர் என்ற எண்ணம் வந்துவிட்டது . அன்று தொடங்கி இன்றி யுவனது படைப்புகளை குறிப்பாக நாவல்களை தொடர்ந்து வாசிக்கிறேன். யுவனது நாவல்கள் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. அவர் எழுதிய நாவல்களில் நான் ஆகச்சிறந்ததாக கருதுவது ” நினைவுதிர்.காலம் ” என்னும் நாவலைத்தான் . இந்த நூலை குறித்து ஒரு வாசிப்பு அனுபவத்தையாவது எழுதி விட வேண்டும் என்று பல முறை எண்ணியிருக்கிறேன் . இருப்பினும் அதனை செய்ய சிறிய தயக்கம் இருந்தது . ஒரு படைப்பு நமக்கு ஏன் அணுக்கமாக இருக்கிறது என்று விவரிப்பது எளிதான காரியம் அல்ல . நான் விளக்குவதை குறித்து சிந்திக்கவே இல்லை ; விவரிப்பதை குறித்து தான் சிந்திக்கிறேன் . இருப்பினும் அப்படியான ஒரு விவரிப்பு கூட நேரங்களில் வாசிப்பு அனுபவத்தை கெடுத்து விடுமோ என்ற பயமும் இருக்கிறது. சித்ரசலபத்தை பிடித்து உற்று பார்ப்பது போன்ற விஷயம் அது. சலீம் அலியின் வழிமுறைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை . ஆராய்கிறேன் என்ற பெயரில் ஹிம்சை செய்வதை ஆன மட்டும் விட்டு விட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன் . இந்த பின்னணியில் தான் மிகுந்த தயக்கத்துடன் நினைவுதிர் காலத்தை மறுபடியும் வாசிக்கத் தொடங்கினேன் . அடிக்கோடிட பேனாவுடன் படைப்பை அணுகும் போது அது மனதிற்கு இணக்கமான வாசிப்பாக இருப்பதிலை. எனவே அத்தகைய சன்னத்துக்கள எதுவும் இல்லாமலேயே மீண்டும் வாசித்தேன் . நினைவுதிர் காலம் தொட்டதும் உடைந்து போகும் நீர் குமிழி அல்ல என்று தெளிவாக புரிந்தது .

ஆ)

“நினைவுதிர் காலம் ” இசை தொடர்பான , குறிப்பாக ஹிந்துஸ்தானி இசை தொடர்பான இசைக்கலைஞர்கள் தொடர்பான நாவல். எனக்கு இசை தொடர்பாக எதுவும் தெரியாது . திரையிசை பிடிக்கும். ஆனால் அதில் கூட இசையமைப்பாளர் யார் , பாடகர் யார் போன்ற தகவல்களை ஐயம் இல்லாமல் சொல்ல வராது. நினைவுதிர் காலத்தில் சொல்லப்பட்ட பல ஹிந்துஸ்தானி ராகங்களை இணையத்தில் தேடிக் கேட்டேன் . இசை பிடித்திருந்தது . ஆனால் அது மனதிற்கு நெருக்கமாக இருக்கவில்லை . திரையிசை பாடல்களில் கூட மனதிற்கு அணுக்கமான மொழிகளில் பாடல் வரிகளும் இசையும் சேரும் போது தான் என்னால் ரசிக்க முடிகிறது என்பது புரிந்தது . இதைத்தவிர எனக்கு இன்றைய செவ்வியல் இந்திய இசை சார்ந்த உலகு மீது மேடைக்கலைஞர்கள் மீது எல்லாம் எதிர்மறையான எண்ணமும் கடும் விமர்சனங்களும் உண்டு . ( ஒரு சுதந்திர நாட்டில் இருப்பதில் இருக்கும் வசதி என்னவென்றால் ஒரு துறையின் அடிப்படைகள் குறித்து எதுவும் தெரியாவிட்டாலும் அத்துறை தொடர்பாக கருத்து சொல்லலாம் என்பது தான் ) . எனது விமர்சனங்கள் எனது சமயப் பின்னணியில் இருந்து வந்தவை . தாசர்களாகட்டும் , தமிழகத்தில் வாழ்ந்த தியாகையர் போன்றவர்களாகட்டும் சங்கீதத்தை சாதனா மார்க்கமாக கொண்டவர்கள் . தங்கள் ஆன்ம சாதனைக்காக உருகி பாடியவர்கள் . இவர்கள் நிகழத்து கலைஞர்கள் அல்ல . இவர்களது ஆன்மீக உணர்வினால் எழுதியவற்றையும் பாடியவற்றையும் மேடைகளில் சிலர் விற்பனை செய்து பிழைப்பதில் எனக்கு என்றுமே ஒவ்வாமை உண்டு . அடிப்படையில் வணிக நோக்கில் உருவாக்கப்பட்ட திரையிசை பாடல்களை மெல்லிசை குழுவினரை முழுதும் ரசிக்கும் எனக்கு கர்நாடக சங்கீத இசைக்கச்சேரி என்றாலே குமட்டல் வரும். இத்தகைய கச்சேரிகளையும் திருத்தல சுற்றுலாக்களையும் ஆன்மீக வீழ்ச்சியாகவே பார்க்கிறேன் . இது போன்ற பழமைவாத கருத்து கொண்ட எனக்கு எப்படி இசையை சுற்றி ஓடும் இந்த நாவல் பிடித்தது என்று யோசித்து பார்த்தேன் . இரண்டு காரணங்கள் உள்ளன என்று தோன்றியது . நாவலின் கதாநாயகரான நிகழ்த்து வாத்திய கலைஞனான ஹரிசங்கர் தீக்ஷித்தும் கலையை கூறுபோட்டு விற்பதை எதிர்கிறார் என்பது ஒரு காரணம் . எல்லா நல்ல படைப்புகளையும் போல இந்த நாவலும் அதன் அடிப்படை தளத்தை தாண்டிய புரிதல்களை தரும் ஆற்றலோடு இருக்கிறது என்பது மற்றொரு காரணம் . இரண்டாம் உலகப் போரை குறித்து எழுதப்பட்டிருக்கும் பல நல்ல படைப்புகள் ஒரு புள்ளியில் காலாதீத ஆற்றலை பெற்ற போர் என்பதை குறித்த விசாரமாக மாறி பிறகு அதையும் தாண்டி தத்துவ விசாரத்திற்கு வரும் . அது போலத்தான் நினைவுதிர் காலமும் , இந்த நாவல் முன்வைக்கும் கோட்பாடுகள் இசைக்கு மட்டும் அல்ல , எந்த கலைக்கும் பொருந்தும். ஒரு புள்ளியில் கலைக் கோட்பாடு வாழ்க்கை சார்ந்த பார்வையாக மாறவும் செய்கிறது . இக்கட்டுரையில் இதனை ஓரளவிற்கு விரித்து கூற முயல்கிறேன் ,

இ)

நினைவுதிர் காலத்தின் வடிவம் குறித்து முதலில் சொல்ல வேண்டும் . பல நேரங்களில் நாவலாசிரியர் தனது கருத்துக்களை நேரடியாகவோ அல்லது கதாபாத்திரங்கள் வாயிலாகவோ சொல்லும் போது அது காதை அடைக்கும் பரப்புரையாக மாறுவது உண்டு . பல நேரங்களில் ஜெயகாந்தனது நாவல்களை வாசிக்கும் போது ஒருவர் ஒலிபெருக்கி இருப்பதை உணராமல் மேடையில் உரத்து பேசிக்க கொண்டிருப்பதை கேட்க நேருவது போலத் தோன்றும். பரப்புரை என்றல்ல , நாவலாசிரியர் தனது பார்வையை முன்வைப்பதே கூட கயிற்றின் மீது நடக்கும் வித்தையை போன்றது தான். மாந்த்ரீகன் யக்ஷியுடன் இணையும் போது யக்ஷிக்கு சற்றேனும் அசுவாரசியம் ஏற்பட்டால் அந்த நபரை அடித்து கொன்று விடும் என்பார்கள் . இலக்கியமும் சித்தாந்த பார்வையும் இணையும் போதும் அப்படித்தான் . ஒரு துளி அளவு பரப்புரையின் தொனி வந்துவிட்டாலும் வாசிப்பில் அசுவாரசியம் ஏற்பட்டுபடைப்பு இல்லாமல் போய்விடும் ; படைப்பாளி பரப்புரையாளனாக மாறிவிடுவான் . ஒரு நெடிய பேட்டியாக இரு நபர்களது உரையாடலாக இந்த புதினம் அமைந்திருப்பது கச்சிதமான விஷயம் . இந்த வடிவம் தான் படைப்பின் மைய ஓட்டத்திற்கு ஏற்றது . இங்கே இந்த வடிவத் தேர்வு என்பது பரிசோதனை முயற்சி அல்ல ; பறவை கூடடைவதைப் போல அக்கதை அதற்கான சரியான வடிவத்தில் அமர்ந்து விட்டது என்றே தோன்றுகிறது . இந்த வடிவம் தான் சரி என்ற எண்ணம் ஏற்பட்டதை குறித்து யுவன் விளக்கி எழுதியிருக்கிறார் . மற்றொரு விஷயம் , இந்நூலை ஒரு நாவலாகவும் வாசிக்கலாம் ; பல்வேறு குறுங்கதைகளது தொகுப்பாகவும் வாசிக்கலாம் என்பது தான் . யுவன் இயல்பிலேயே சங்கிலி போன்ற வடிவில் கதைகளை சொல்வதில் ஆர்வம் உடையவர். ஒரு சங்கிலியின் ஒவ்வொரு கண்ணிக்கும் தனித்த வடிவமும் இருப்பும் உண்டு . அதே போல அக்கண்ணிகள் இணைந்து மற்றொரு வடிவமும் கொள்கின்றன . இது போல இந்த புதினத்தின் ஒவ்வொரு கதை அத்தியாயமும் அதனளவில் தனி இருப்பை கொண்டது . அவற்றை தனியாக வாசித்தால் கூட முழுமையான இலக்கிய அனுபவத்தை அளிக்க வல்லது. அதே நேரம் அவற்றை சேர்த்து / தொகுத்து வாசிக்கும் போதும் இசைவுடன் இருக்கும் . இது செவ்வியல் தன்மை . இத்தன்மை இருப்பதால் காவியங்களின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு புதுப்படைப்பாக மாற்ற முடிகிறது.
மற்றொரு விஷயம் , இந்நாவலில் தொடக்கம் முதல் இறுதி வரை வரும் இருமைகள். சிவ சங்கர் தீக்ஷித் – ஹரிசங்கர் தீக்ஷித்(பெயர் தொடங்கி குணம் வரை) , இந்திய வாத்தியம்- ஐரோப்பிய வாத்தியம் என்று கணிசமான துருவங்கள் தொடர்ந்து வருகின்றன. ஆனால் இந்த இருமைகள் எல்லா நேரத்திலும் ஒன்றிற்கு ஒன்று எதிரானதாக இருப்பதில்லை . சிவசங்களுக்கும் ஹரிசங்கருக்கும் இடையே இருக்கும் ambivalence அனைத்திலும் இருக்கிறது . சில நேரங்களில் இணைந்தும் , சில நேரங்களில் பிரிந்தும் செயல்பட்டும் சில நேரங்களில் முரணியக்கமாக செயல்பட்டும் கதாபாத்திரங்களும் கருத்துக்களும் இங்கு தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள் . தனது மூத்த சகோதரனது மரணத்திற்கு பிறகு ஹரிசங்கர் வெறுமையை உணர்வதும் இதனால் தான் . பல நேரங்களில் இத்தகைய இருமைகளை பயன்படுத்தி கதை சொல்லும் படைப்பாளிகள் அவற்றை இயந்திரத்தனமாக பயன்படுத்தி “இலக்கிய உற்பத்தியில் ” ஈடுபடுவர் . யுவன் அப்படி எதுவும் செய்யவில்லை . ஒரு வேளை நான் சுட்டிக்காட்டும் இருமைகளை (binaries) கூட அவர் பிரக்ஞை பூர்வமாக எழுதியிருக்க மாட்டார் . கதையின் போக்கில் அவை உருவாகி வந்திருக்கும் . இந்த வடிவமும் நீர் ஒழுக்கு போன்ற உரையாடலும் தத்துவ விசாரத்தின் அடர்த்தியை லகுவாக்குகின்றன .

ஈ)

கலைக்கும் கலைஞனுக்கும் இடையே உள்ள உறவை குறித்த உரையாடல் இந்நூல் முழுவதும் நிரம்பி இருக்கிறது . ஹரிசங்கர் தனது பூர்வீகர்களை குறித்து கூறும் போது தீபக் ராகம் பாடி விளக்கை எரிய வைக்க வற்புறுத்தப்பட்ட தனது மூதாதையரை குறித்து சொல்கிறார் . அரசவையில், தனக்கு எதிரான சதியை முறியடிக்க , கற்ற வித்தை அனைத்தையும் பயன்படுத்தி பல மணி நேரம் அந்த ராகத்தை பாடுகிறார் . ஒரு கட்டத்தில் எதிரில் இருக்கும் விளக்கை தொடுப்பார்க்கும் போது தான் வித்வானுக்கு ஒரு விஷயம் புலனாகிறது . அவரது எதிரிகளுக்கு அவர் மீது அதீத நம்பிக்கை போல . ஆகவே கவனமாக விளக்கில் எண்ணெய்க்கு பதிலாக நீரை நிரப்பி இருந்தார்கள் . அது வரையில் தானது அப்யாச பலத்தாலும் , சங்கீத ஞானத்தாலும் விளக்கை எரிய வைக்கலாம் என்று எண்ணியவர் , அவற்றை எல்லாம் விட்டு சங்கீதத்தில் சரணாகதி அடைகிறார் . தன்னால் முடியும் முடியாது என்பதை எல்லாம் கடந்து சங்கீத சாகரத்தில் அமிழ்கிறார். உபந்யாசகர்கள் சரணாகதியை குறித்து விளக்க திரெளபதி வஸ்த்ராபஹரணத்தை குறித்து சொல்வார்கள் . முதலில் எல்லாம் ஒரு கையால் வஸ்திரத்தை பிடித்துக்கொண்டே க்ருஷ்ணரை பிரார்த்தித்த பாஞ்சாலி ஒரு கட்டத்தில் துச்சாதனனுடனான போராட்டத்தை நிறுத்தி தனது இரு கைகளையும் கூப்பி பகவானை வேண்டினா என்பார்கள் .இனி என்னால் ஆவது எதுவும் இல்லை உன்னால் ஆனால் உண்டு என்னும் கட்டம் வரும் போது பிரச்சனை தீர்ந்து விடும் . இங்கேயும் அதுவே நடக்கிறது . கலைஞனுக்கு ஆணவம் தேவையான விஷயம் . ஞான செருக்கு / கலை செருக்கு இல்லாவிட்டால் சாமானியர்கள் அவனை இழுத்து இறக்கி பிச்சையெடுக்க வைப்பார்கள் .அதனை தவிர்க்க தான் அசாதாரணன் என்னும் எண்ணம் தேவை . ஆனால் கவசமே சுமையாகி விழ வைத்து விடக்கூடாதே . தான் அசாதாரணன் என்று எண்ணும் அதே நேரத்தில் தனது கலை அமானுஷ்யமானது என்று தெளிவும் வேண்டும் என்று ஹரி சங்கர் சொல்கிறார் . தான் இதை செய்கிறேன் என்ற எண்ணம் மாறி தனக்கு மீறிய ஒரு சக்தி தன் வழியாக இதை எல்லாம் செய்கிறது என்ற புரிதல் வரும் நொடியில் இருத்தலிய மூச்சுத்திணறல்கள் எல்லாம் குணமாகிவிடுகிறது .

கலை என்பது கழைக்கூத்து அல்ல ; அது உத்திகளை தெரிந்து கொள்வதாலோ பயிற்சியாலோ மட்டும் வருவதல்ல . தனது சகோதரனது வாசிப்பிற்கும் ஹிமான்ஷுவின் வாசிப்பிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை குறித்து கூறும் போது ஹரிசங்கர் இதனை விளக்குகிறார் . முன்னது அலங்காரங்கள் நிறைந்தது .பின்னது கலைஞனது உள்ளுக்குள் அடங்காமல் இருக்கும் கொந்தளிப்பின் விளைவாக ஏற்படுவது . முன்னதில் இருக்கும் கவனமும் புத்திசாலித்தனமும் எல்லாம் பின்னதில் இருப்பது இல்லை . எளிமையாக சொன்னால் முன்னது நிகழ்த்து கலை ; அதனை அரங்கில் பார்வையாளர்கள் முன்னால் அவர்களை வசப்படுத்தும் நோக்கில் தான் செய்ய முடியும். பின்னது ஆத்ம சஞ்சாரம் , அது எங்கு நிகழும் எவ்வாறு நிகழும் என்பது அந்த கலைஞனுக்கே தெரியாது . நல்லூழ் கொண்டவர்கள் சில நேரங்களில் கலை நிகழும் அத்தருணத்தில் அங்கிருந்து அதனை அனுபவிக்க முடியும் . புத்திசாலியான தொழில்நுட்ப வல்லுனருக்கும் கலைஞனுக்கும் இடையே உள்ள வேறுபாடு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்படுகிறது . ஹிமான்ஷு சிவசங்கரை குறித்து சொல்கிறார் :
” கைக்கு களிமண் கிடைத்தால் இஷ்டம் போல பொம்மை செய்ய கிளம்புகிறவன் தானே கலைஞன் ? சக்கரத்தையும் கழியையும் தேடிப் போகிற குயவன் – எத்தனை கச்சிதமாக செய்யட்டுமே , அது பானை தான் . பயன்பாட்டிற்கு அனுகூலமாக இருக்கும் ; ஒரு போதும் கலை பொருள் ஆகாது”

பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய வரிகள் இவை. இவ்வரிகளை இலக்கியத்துடனும் பொருத்தி பார்க்கலாம். எது இலக்கியம், யார் இலக்கியவாதி என்று புரிந்து கொள்ள முயலும் போது சில இடர்கள் வருவதுண்டு . மொழியாளுமையோ , கூர்மையான வாக்கிய அமைப்புகளோ , கச்சிதமான வடிவமோ மட்டும் இருப்பதாலேயே ஒரு படைப்பு இலக்கியம் ஆவதில்லை . இவற்றை செய்ய முடியும் என்பதாலேயே ஒருவர் இலக்கிய படைப்பாளி என்று எண்ணுவதும் தவறு . இஷ்டம் போல பொம்மை செய்யக் கிளம்பும் பித்தர்களால் தான் பேரிலிக்கியம் பிழைத்திருக்கிறது . இந்த படைப்பை வாசகர்கள் / பிற இலக்கியவாதிகள் எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்று எண்ணம் உதித்தால் பித்து நிலை நீங்கி கலைஞன் நிகழ்த்து கலைஞனாகிவிடுவான் . பிறகு நடப்பது எல்லாம் கைத்தட்டலுக்காக காட்டப்படும் வித்தைகளே .

கலைஞன் மீது செய்யப்படும் மிகப்பெரிய சித்ரவதைகளில் ஒன்று அவனை போராளியாக பரப்புரையாளனாக மாற்ற முயல்வது . சமூக அக்கரையுடன் இருக்கும் படைப்பு என்ற அளவுகோல் பயன்படுத்தப்பட தொடங்கி நூறு வருடங்களாவது ஆகியிருக்கிறது . ஆனால் தன்னை குறித்த பிரக்ஞையே இல்லாத கலைஞனிடம் சமூக பிரக்ஞையை கேட்டு உலுக்குவதில் உள்ள மூடத்தனத்தை ஹரிசங்கர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் நிகழ்த்து கலைஞனுக்கு இதில் எல்லாம் எந்த பிரச்சனையும் இருப்பது இல்லை. அவ்வப்போது நாடி பிடித்து அந்த அந்த காலக்கட்டத்திற்கு ஏற்ற அரசியல் சரிகளை கூவி பிழைப்பை நடத்திக்கொள்வது தனது திறமை என்றே எண்ணுவான்.

ஒரு கலைபடைப்பு என்பது எப்போதும் ராஜ வீதியில் நடமாடும் பட்டத்து யானையாக இருக்க வேண்டியதில்லை . அதற்கு நேர் மாறாக மிக மிக நுட்பமாகவும் இருக்கலாம் . “பூச்சி மிரளாத வண்ணம் மணியை அதிர்விக்க முடியுமா என்பது தான் இசைக்கலைஞன் முன்பு உள்ள பெரிய சவால் ” என்கிறார் ஹரிசங்கர். பூச்சி மிரளாத வண்ணம் எழுப்பட்ட மணியோசை என இந்த புதினத்தை சொல்வேன் .


கலை அந்தரங்கமானது என திடமாக நம்பும் கலைஞனால் எவ்வாறு அக்கலையுலகிற்குள் ரசிகர்களையோ / வாசகர்களையோ விட முடியும் என்ற கேள்வி எழுகிறது . ஹரி சங்கர் சொல்கிறார் : ” எதிர்பார்த்ததை விட வாசிப்பு பிரமாதமாக அமைந்துவிட்டது என்று நானே உணரும் நாட்களில் பொது மேடையில் அம்மணமாக நின்று திரும்பிய மாதிரி ஒரு கூச்சம் நிரம்பியிருக்கும் மனதில். அடுத்த நாலைந்து நாட்களுக்கு யாரும் வந்து சந்திக்காதிருந்தால் நன்றாய் இருக்குமே என்று தோன்றும் “. நல்ல கலைஞர்கள் / எழுத்தாளர்கள் தங்களது ரசிகர்களை எதிர்கொள்ளும் போது தப்பி ஓடத்தயாரான மானைப் போல நிற்பார்கள் . அதற்கு காரணம் இது தான் . தனது கலையுலகிற்குள் ஒருவரை விடுவது என்பது அவர் முன் நிர்வாணமாக நிற்பது போன்றது தான்.

நாவலின் நாயகனான ஹரிசங்கர் பல்வேறு துரோகங்களை சந்தித்தவர் . ஏராளமான மூடிய கதவுகளை பார்த்தவர் . அவரது திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை . சொந்த சகோதரனாலேயே அவரது வாய்ப்புகள் பறிபோயின . இத்தனையும் இருந்தும் அவருக்கு யார் மீதும் எந்த கோபமும் இல்லை . க்ரோதமும் இல்லை . எந்த புகார்களும் இல்லை. இது விரத்தியால் ஏற்பட்ட விட்டேத்தியான மனநிலை அல்ல . புரிதலால் ஏற்பட்ட பேரமைதி . இலங்கையில் வாழ்ந்த யோக சுவாமிகள் என்பவரது ஆப்த வாக்கியம் ஒன்று உண்டு . ” ஒரு பொல்லாப்பும் இல்லை “. இந்த வாக்கியத்தின் வெவ்வேறு வடிவங்களை இந்த நாவல் எங்கும் காண முடிகிறது . ” இசை கேட்பவருக்கு அமிர்தம் ; ஆனால் வழங்கிறவர்களுக்கு அமிலம் ” என்று வரி நினைவுதிர்காலத்தில் வருகிறது . இசை என்றல்ல ; எல்லா கலையும் அப்படித்தான். நமக்கு அமிர்தம். கலைஞனுக்கு அமிலம் . அமிலத்தை தினசரி கையாண்டாலும் ஆன்மா அரித்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான் சவால். ஹரிசங்கருக்கு அது கை கூடியிருக்கிறது . அமிர்தத்தை அளிப்பது தான் அல்ல என்று எணணத் தொடங்கினால் அமிலத்தை தேக்கிவைக்க வேண்டிய கட்டாயமும் வராது . இதைத் தாண்டி ” ஆமைகள் வெல்லும் பந்தயங்களும் உண்டு ” என்ற தெளிவு . இவையே கசப்பின்றி ஹரிசங்கரை வாழவைக்கிறது .

உ)

ஹரிசங்கரது தெளிவு ஒட்டுமொத்த படைப்பிற்கும் சாந்த ரசத்தை தருகிறது . சுக துக்கம் என்னும் இருமைகளைத் தாண்டி , காமக்ரோதங்களால் பாதிக்கப்படாமல் அதிருப்தியில்லாமல் கொந்தளிப்பு இல்லாமல் தத்துவ ஞானத்தால் ஏற்படும் பேரமைதியை ஒரு படைப்பில் பிரதிபலிக்க செய்வதே சாந்த ரசத்தை ப்ரதர்சிக்க வைக்கும் முறை என்பார்கள் . அது மிகவும் கடினமான விஷயம் .அது இந்த படைப்பில் நடந்திருக்கிறது,

இந்த இறுதி பத்தியில் ஹரிசங்களுக்கும் யுவன் சந்த்ரசேகருக்கும் இருக்கும் ஒற்றுமைகளை பட்டியலிட கை துறுதுறுக்கிறது . ஆனால் அதற்கான அவசியம் இல்லை என்றும் தோன்றுகிறது . யுவனால் “பூச்சி மிரளாத வண்ணம் ” மணியை அதிர்விக்க முடிகிறது. அமிலத்தை தேக்கிக் கொள்ளாமல் அமிர்த்தத்தை வழங்கும் ஆமையாக இருக்க முடிகிறது . அந்த வித்யையை சொல்லும் படைப்பு என்பதால் நினைவுதிர் காலம் யுவன் என்னும் பெருங்கலைஞனது உச்ச படைப்புகளில் ஒன்றாக சுடரென ஒளிர்கிறது .

சமணத்தில் வராகர் ?

//கடலூர் சீனு எழுதிய “விமலரும் வராகரும்” (https://www.jeyamohan.in/122176/) கடிதத்திற்கு எதிர்வினை. ஜெ தளத்தில் பிரசுகரிக்கப்பட்டது //

அன்புள்ள ஜெ

சீனுவின் கடிதத்தையும் உங்கள் பதிலையும் வாசித்தேன் . சமணர்களின் இறையியல் / தந்திர சடங்குகள் தொடர்பாக பலருக்கும் இருக்கும் தவறான புரிதல்தான் சீனுவிற்கும் இருக்கிறது . மூலநூல்களையோ சம்பந்தபட்டவர்களையோ நேரில் அணுகாமல் வெளிநாட்டு ஆய்வாளர்களின் நூல்கள் வழியாக இந்திய சமயங்களை புரிந்து கொள்ள முயல்பவர்கள் சில பொறிகளில் சிக்கி விடுவார்கள் .

சமணர்கள் காலம் காலமாக ஹிந்து தாந்ரீக நூல்களை பிரதி செய்து அவர்கள் பாணியில் பயன் படுத்தி வருகின்றனர் .சித்தாந்தங்களை எளிதில் உருவாக்கலாம் .ஆனால் பலன் தரும் தேவதைகளை புதிதாக உருவாக்க முடியாது .எனவே எப்போதும் இத்தகைய வேலைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன . இஸ்லாமிய மாந்த்ரீகர்கள் சிலர் காளியையும் ஆஞ்சநேயரையும் வழிபடுவதை கண்டிருக்கக் கூடும் .அது போலத்தான் சமணர்கள் விஷயமும் .அவர்கள் வசம் பத்மாவதி கல்பம் போன்ற பல நூறு நூல்கள் தந்திர மந்திர சாதனைகளுக்காகவே உண்டு .ஜைனர்கள் மஹாலக்ஷ்மி , சரஸ்வதி , காளி , அஷ்ட / தச திக் பாலர்கள் , இந்திரன், விநாயகர் , பைரவர் , நவக்ரஹங்கள் போன்ற தேவதைகளை பல காலமாக வழிபடுகின்றனர் .பூஜை முறையும் பிரதிஷ்டையும் எல்லாம் ஹிந்து மத பத்ததிகளின் பிரதிபலிப்பு தான் .இத்தனை தேவதைகளும் சமணர்கள் ஹிந்து மதத்திற்கு தந்த கொடை என்று ஒரு ஆய்வாளர் வாதிடுவார் எனில் ஹிந்து மதத்தை சமணத்தின் உள் பிரிவாக கருதி நமக்கும் சிறுபான்மை சான்றிதழ் தருமாறு தான் கேட்க வேண்டும் .

சமணர்கள் ஹிந்து மத தேவதைகளை தங்கள் கோவிலுக்குள் இணைத்து வழிபட தொடங்குவதற்கான ஒரு வித grammar ஐ அவர்கள் தற்போது வழிபடும் கண்டாகர்ணன் வழிபாட்டை கொண்டு அறியலாம் .நமது மஹாபாரத , ஹரிவம்ச கண்டாகர்ணன்தான்.அநாதி காலமாக சில பூஜைகளின் போது இவருக்கான மந்திரம் / தோத்திரம் கூறப்படுவது உண்டு .சுமார் 150 வருடங்களுக்கு முன் ஒரு ஜைன மடாலய தலைவர் கண்டாகர்ண வழிபாடு செய்யுமாறு ஜைனர்களை ஊக்குவித்தார் .இன்று கண்டாகர்ணனுக்கு ஆஹா ஒஹோ என்று சமண கோவில்களில் வழிபாடு நடக்கிறது .சிலர் சொல்வது போல சமண தெய்வங்கள் ஆயுதம் தரித்திருக்கா என்பதெல்லாம் தவறு .



இனி கடலூர் சீனு கண்டது யாரை என்று பார்க்கலாம் .நான்கு கரங்களுடனும் கோல முகத்துடனும் நான்கு துதிக்கை மீது அமர்ந்து இருக்கும் இந்த மூர்த்தியை ஜைனர்கள் மணிபத்ர வீரன் என்கிறார்கள் .ஒரு காலத்தில் இந்த மூர்த்தியை தபா கச்சா மடாலயத்தை சார்ந்தவர்கள் மட்டுமே வழிபட்டு வந்தனர் .இப்போது பலரும் வழிபடுகின்றனர் .இவர் மடத்தின் ரக்ஷா மூர்த்தியாக கருதபட்டார் .மடத்தை பாதுகாப்பதற்காக போரிட்டு இறந்த ஒரு சாதாரணன் பிறகு இவ்வடிவத்தை அடைந்தான் என்பது அவர்கள் நம்பிக்கை .இவரையும் வராஹ விஷ்ணுவையும் ஜைன நூல்கள் குழப்பிக்கொள்வது இல்லை.கொஞ்சம் மந்திரங்களுக்கு உள்ளே போய் பார்த்தால் குபேர புத்ரனான மணிபத்ரன் என்னும் யக்ஷனின் சாயை இருப்பது தெரியும் .ஹிந்து மதத்தில் உள்ள மூல மந்திரங்களை போலத்தான் அங்கேயும் இருக்கிறது .பெளத்தத்திலும் மணிபத்ரன் வழிபாடு உண்டு .மற்றபடி சமணர்கள் இப்போது பயன்படுத்தும் துதிகளில் நான் முன்னர் குறிப்பிட்ட மடாலய தொடர்பு காணப்படுகிறது .

உம் : ” இஷ்ட ஸித்திம், மஹா ஸித்திம் ஜய லக்ஷ்மிவிவர்த்தய/ தபா கச்ச நாயகம் …..மணி பத்ரம் வீரம் ” .இதில் தபா கச்ச நாயகம் என்னும் பதம் இருப்பதை பார்க்கலாம் .மற்றபடி தீர்த்தரங்கர் வழிபாடு அல்ல இது .பத்து தீர்த்தரங்கர்கள் தசாவதாரமாக மாற்றப்பட்டதாக கூறுவது எந்த வித அடிப்படை ஆதாரமும் அற்ற முதல் குரங்கு தமிழ் குரங்கு பாணி கோஷம் தான் . சமணர்களுக்கும் அத்தகைய கோஷம் இட உரிமை உள்ளதை நாம் மறுக்க முடியாது 🙂

சீனுவைப் போன்று இந்திய சமயங்கள் மீது ஆர்வம் உடையவர்களுக்கு நான் வைக்கும் தாழ்மையான விண்ணப்பம் ஒன்று தான் .இந்திய சமயங்கள் பல இழைகளால் ஆனது .அனைத்தையும் பொதுமைபடுத்தும் ,ஒன்றாக்கும் , தரப்படுத்தும் மேற்கத்திய அறிதல் முறையை கொண்டு நாம் அவற்றை அணுக முடியாது ( இது நீங்கள் பல முறை அழுத்தமாக எழுதி உள்ள விஷயம் தான் ) . ஏதாவது வினோதமான சடங்கை கண்டால் நூலகத்திற்கு சென்று அதைக் குறித்து தேடுவதை விட , நம் ” ஆய்வாள பெருந்தகைகளை ” கேட்பதை விட அங்கிருக்கும் பூசாரியிடமோ , ஏதாவது முதியவர் இடமோ கேட்பது அதிக பலன் தரும் .

நன்றி
அனீஷ் க்ருஷ்ணன் நாயர் .

***

இதற்கு ஜெ எழுதிய பதில் :

சமணத்தில் வராகர்

சாரு நிவேதிதா ஏன் இப்படி எழுதுகிறார் ?

(சாரு நிவேதிதாவிற்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்ட தருணத்தில் எழுதப்பட்ட கட்டுரை )

(அ)

சில நாட்கள் முன்பு “பிரியாணி” என்ற மலையாள திரைப்படத்தை பார்த்தேன். The Great Indian kitchen அளவிற்கு ஊடக வெளிச்சத்தை பெறாத திரைப்படம். திரைப்படத்தின் கருப்பொருள் மற்றும் கதாபாத்திரங்களின் பின்னணி ஆகியவை நமது அறிவு ஜீவிகள் பலருக்கும் ஒவ்வாமையை தருவதாக இருந்ததால் இத்திரைப்படத்தை குறித்து சமூக ஊடகங்களிலும் பெரிதாக உரையாடல் எதுவும் நிகழவில்லை. எனது வட்டத்தில் உள்ள ஹிந்துத்துவ நண்பர் ஒருவரது பதிவினால் கவனம் பெற்று இத்திரைப்படத்தை பார்த்தேன். படத்தின் உச்சக்கட்ட காட்சி கதாநாயகி பிரியாணி விருந்து தயார் செய்யும் காட்சி தான். அக்காட்சியை பார்த்ததும் இதே போன்ற ஒன்றை எங்கோ வாசித்திருக்கிறோமே என்ற எண்ணம் எழுந்தது. சில நிமிடங்களில் பிடிபட்டு விட்டது. சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரீ நாவலில் இதே போன்ற ஒரு பகுதி வரும், பிரியாணி திரைப்படத்தின் இயக்குனரான சஜின் பாபு ஜீரோ டிகிரீ நாவலை வாசித்திருப்பாரா என்ற கேள்வி எழுந்தது. கேரள அறிவு ஜீவி வட்டங்களில் சாருவின் படைப்புகள் கொண்டாடப்படுகின்றன. சஜின் பாபுவின் முந்தைய திரைப்படங்கள் குறித்து வாசித்த போது ஒரு விஷயம் தெளிவானது. சாரு வழியாகவோ அல்லது வேறு வகையிலோ Transgressive கூறுகளை சஜின் உள்வாங்கியிருக்கிறார். இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் விருதுகளை பெற்ற பிரியாணி திரைப்படம் பலான படமாக கருதப்பட்டு அதன் துண்டுகள் இணையும் எங்கும் சிதறி இருக்கிறது. சாருவின் நாவல்கள் மீது வைக்கப்படும் அதே விமர்சனம் தான் இந்த இயக்குநர் மீதும் பலரால் வைக்கப்படுகிறது. இருவரது படைப்புகள் மீதும் ஒரே வகையான குற்றச்சாட்டுகள்; பாலியல் என்ற ஒரே வார்த்தையில் அவற்றை சுருக்குதல் நடக்கிறது. ஆனால் சஜினின் தரப்பை உடனடியாக புரிந்து கொள்ளக் கூடிய அளவு விரிந்த பார்வை உடைய திறனாய்வாளர்கள் பலர் உண்டு. சாரு எழுதத்தொடங்கிய காலக்கட்டத்தில் அத்தகைய பார்வை தமிழ் இலக்கிய சூழலில் மிக அபூர்வமான விஷயமாகவே இருந்தது. இப்போதும் பெரிய அளவு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியாது.

(ஆ)

சாரு நிவேதிதாவின் படைப்புகளை குறித்து உரையாடும் போதும் பின் நவீனத்துவம் Transgressive எழுத்து போன்ற சொற்களை பயன்படுத்தியே விளக்க வேண்டி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் பல திறனாய்வாளர்கள் மேற்கண்ட பதப்பிரயோகங்களைக் கொண்டு தான் சாருவின் நாவல்களை விளக்க மட்டும் அல்ல நியாயப்படுத்தவும் முயல்கிறார்கள். அவற்றின் இலக்கிய தன்மையை நிறுவுவதற்கு கூட ஐரோப்பிய மாதிரிகளை சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது. சாருவும் இந்த வகைப்படுத்துதல்களை ஆதரிக்கிறார். ஆனால் இத்தகைய பன்னாட்டு / கோட்பாட்டு நிலைப்புள்ளிகள் எதுவும் இல்லாமலே சாருவின் நாவல்களுக்கு நியாயம் கற்பிக்க முடியும் என்பது எனது நம்பிக்கை. அதற்கான முயற்சியாகவே இக்கட்டுரையை எழுதுகிறேன்.



(இ)

சாரு நிவேதிதாவின் எக்ஸிஸ்டன்ஷியலிஸமும் ஃபேன்சி பனியனும் நாவல் 1989 ஆம் வருடம் வெளிவந்தது. பெருநகரத்தில் தனிப்பட்ட பிரச்சனைகளாலும், தத்துவ சிக்கல்களாலும் அலைகழிக்கப்படும் வந்தேறி இளைஞனது நினைவு குறிப்புகள் என்று ஒரு தளத்தில் சொல்லலாம். நான் சில வகை நாவல்களை குமாஸ்தா நாவல்கள் என்று விவரிப்பதுண்டு. மேலை நாட்டுக்கல்வி அறிவு பெற்று தலைநகர்களில் குமாஸ்தாக்களாக பணிபுரியும் இந்திய இளைஞர்களுக்கு ஏற்படும் குழப்பங்கள் தனி வகையை சார்ந்தது. ஆதவனது நாவல்களிலும் இக் கூறுகள் உள்ளன. இத்தகைய இளைஞர்களது இருத்தலிய சிக்கல்களை இந்நாவல்கள் காட்சிப்படுத்துகின்றன. எக்ஸிஸ்டன்ஷியலிஸம்… நாவலின் குறிப்பிடத்தக்க தன்மை என்னவென்றால் கதைச் சொல்லி இரு வேறு தன்மைகளை தன்னுள் கொண்டிருக்கிறான் என்பது தான், அவன் பூரணமாக அந்நகர ஜோதியில் கலக்கவுமில்லை. அதே நேரம் அந்நகரின் அறிவு சூழல் மீதான மயக்கம் அவனுக்கு தெளியவும் இல்லை. ஆதவனிடம் காணப்படும் கசப்போ அல்லது கரிச்சான் குஞ்சிடம் (அவர்கள் ஒரு மாதிரியானவர்கள் குறு நாவல்) காணப்படும் வெறுப்பேர மட்டும் அல்ல இக்கதைச்சொல்லியிடம் எஞ்சுவது. அதனையும் தாண்டிய எவ்விதத்திலும் யாருடனும் தன்னை பொருத்திக்கொள்ள முடியாத, இரட்டை வேடங்களை எதிர்கொண்டு எதிர்கொண்டு மனம் வெதும்பிய ஒரு தன்மையை நாம் சூர்யாவிடம் காணலாம். ஒரு பக்கம் நாகூர், குடும்பம் எல்லாவற்றையும் தொலைத்து தலை முழுகி விட்டு டெல்லியில் ஹிந்துஸ்தானி இசை, தூதரக விருந்துக்கள் என்று வாழவும் முடியவில்லை. இன்னொரு பக்கம் டெல்லியை உதறித்தள்ளி விட்டு காவிரி க்ரையில் அக்கடாவென்று இருக்கவும் முடியவில்லை. இவ்வுலகிலம் இருக்கும் போது அவ்வுலகின் நினைவாலும் அவ்வுலகில் இருக்கும் போது இவ்வுலகின் நினைவாலும் சூர்யா அலைக்கழிக்கப்படுகிறான். டெல்லியோ நாகூரோ சக மனிதர்களது வேடங்கள் மட்டுமே மாறாதவையாக இருக்கின்றன. இந்த வேடதாரிகள் மீது ஏற்படும் அருவருப்பே கதைச் சொல்லியின் கச்சாப்பொருள். கதைச்சொல்லி தன்னை ஆதர்ச நாயகனாக முன்வைக்கவில்லை. தன்னிடம் இருக்கும் குறைகளை அவன் உணர்ந்தே இருக்கிறான், அவனுடைய பிரச்சனை என்னவென்றால் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை உதாரண நாயான் யாரும் காணக்கிடைக்கவில்லை என்பது தான்.

இந்த நாவலில் சாரு நிவேதிதா ஆவணப்படுத்தியிருக்கும் / சொல்லியிருக்கும் ஒரு சில விஷயங்கள் வியப்பானவை. சூர்யாவின் ஊரில் நிகழ்ந்த ஆர் எஸ் எஸ் செயல்பாடுகளை குறித்த சில வரிகள் ஒரு உதாரணம், எனக்கு தெரிந்து ஆர்எஸ்எஸ் அமைப்பு முதல் முறையாக ஒரு நாவலில் வருவது இங்கு தான், இத்தனைக்கும் மண்டைக்காடு பிரச்சனைகள் நடந்து சில வருடங்களான பிறகு எழுதப்பட்ட நாவல் இது. ஐக்கிய அமெரிக்க அரசு/ கல்வி நிறுவனங்களிடம் இருந்து இடதுசாரி போக்கிற்கு எதிராக இலக்கியம் படைப்பதற்கு மற்றும்உதவித்தொகையை கூசாமல் பெற்றுக்கொண்டவர்கள் கூட ஆர் எஸ் எஸ் குறித்து மூச்சு விட்டதில்லை. ஆனால் சாரு இதைக் குறித்து எல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. சாருவின் படைப்புகள் அனைத்திலும் இந்த சொல்லாதன சொல்ல துணிவதை பார்க்கலாம்.

(ஈ)

சாருவின் அடுத்த நாவலான ஜீரோ டிகிரீ இந்திய இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க படைப்பு. எண்ணற்ற பரிசோதனை முயற்சிகளை தன்னுள் கொண்ட நாவல் என்பதைத் தாண்டி எந்த கோட்பாட்டு அடவுகளும் தெரியாத வாசகனுக்கும் வாசிக்கத்தக்கதாக இருக்கும் படைப்பு. இப்பிரதியை எதிர்கொள்ளும் வாசகன் இதனை ஒரு புதிர் பெட்டியாகவும் கருதலாம்; அல்லது ஒரு விந்தை விளையாட்டாகவும் கருதலாம். மரபான கதை சொல்லலை எதிர்பார்க்கும் வாசகன் ஏமாந்து விடுவான் என்று எண்ணுவதற்கு எந்த அவசியமும் இல்லை. வாசித்தல் என்பது வாசகனும் எழுத்தாளனும் இணைந்து நிகழ்த்தும் நிகழ்கலை தான். பழங்குடி கதை சொல்லிகள் கூட இடை இடையே நிறுத்தி கதை கேட்பவர்களை பங்கு பெற வைப்பது உண்டு. காத்திரமான பிரதியை வாசிக்கும் வாசகனும் இடை இடையே நிறுத்தி கதையின் போக்கை குறித்தோ அதற்கும் தன் வாழ்க்கைக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள்/ வேற்றுமைகள் குறித்தும் சிந்திப்பது உண்டு. ஜீரோ டிகிரியில் சாரு இதனை இன்னும் வெளிப்படையான ஒரு விளையாட்டாக மாற்றுகிறார். சில இடங்களில் குவி மையத்தை வாசகனை நோக்கி திருப்புகிறார். சில்லு சில்லாக சிதறி கிடக்கும் ஆடி அல்ல இந்த படைப்பு. மாறாக நுட்பமாக திட்டமிடப்பட்டு வாசகனை சீண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வினோத கோலம் இது. “There is a method in his madness” என்ற வரி தான் நினைவிற்கு வருகிறது.

இந்த நாவலிலும் மத்யமரின் எலி வாழ்க்கையுடனோ மேல்தட்டு வர்க்கத்தின் பூனை வாழ்க்கையுடனோ ஒத்திசைய முடியாத இந்த இருமைகள் இடையில் சிக்கி மூச்சு திணரும் சிதைந்த மனதின் இருப்பை காண முடியும், இந்த நாவல் போகிற போக்கில் தொட்டு செல்லும் விஷயங்கள் ஏராளம். அவற்றை மட்டும் கொண்டே செறிவான உரையாடல்களை நிகழ்த்த முடியும். பொன்பரப்பி நிகழ்வு ஒரு உதாரணம். பகடிக்குள் பொதிந்து இருக்கும் வெடிகுண்டு திரிகள் எண்ணற்றவை. பொன்பரப்பி நிகழ்வை குறித்து எதுவும் தெரியாத வாசகனுக்கு கூட விவாதப்பொருள் என்னவென்று புரியும். “லால் சலாம்” அத்தியாயம் குறிப்பிடத்தக்க மற்றொரு பகுதி. அரசு, அதிகாரம், அதிகாரிகள், கருத்து சுதந்திரம் ஆகியவற்றை குறித்து விவாதித்திக் கொண்டே இருக்கிறோம். அவ்வாறு விவாதிப்பவர்கள் இந்த பகுதியை வாசிக்க வேண்டும்.

சாரு நிவேதிதா ஜீரோ டிகிரியை எழுதிய காலத்தில் கருத்திற்காக கம்பி எண்ண வேண்டிய துர்பாக்கியம் எல்லாம் எழுத்தாளர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் மட்டுமே விதிக்கபட்ட விஷயமாக இருந்தது, இன்று சமூக ஊடகத்தில் இருக்கும் எந்த குடிமகனும் இந்த தீக்கனவில் இருந்து தப்ப முடியாது. அதனால் அதிகாரத்தின் நகர்வுகளை படம் பிடித்துக்காட்டும் இந்த அத்தியாயம் தவிர்க்க முடியாததாகுகிறது. ஒரு புறம் புரட்சி வேட்கை, இன்னொரு பக்கம் நடுக்கம் என்னும் அவஸ்தை நாவல் முழுக்க நக்கல் செய்யப்படுகிறது. 31 ஆம் அத்தியாயத்தில் வரும் வரிகள் // அவன் பயந்தாங்கொள்ளி. அவன் சொல்வது போல அவனது எழுத்துக்கள் எதுவும் தடை செய்யப்பட போவதில்லை…. உண்மையில் அவன் பஸ் கண்டக்டர்களுக்கும் போலீஸ்காரர்களுக்கும் பெண் எழுத்தாளர்களுக்கும் சிறு பத்திரிக்கைகாரர்களுக்கும்… பிச்சைக்காரர்களுக்கும் ரயில் தண்டவாளங்களுக்கும் வாகனங்களுக்கும் பயப்படுபவன்” இவ்வாறாக நாவல் முழுவதும் முரணனான இரட்டைகள் வருகின்றன.

சாரு நிவேதிதா இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கும் உத்திகளுக்கு மேற்குலகில் தான் முன்மாதிரிகளை தேட வேண்டும் என்றில்லை. அவற்றில் பலவற்றை அவரது முன்னோடிகளே பயன்படுத்தியுள்ளனர். உதாரணத்திற்கு கதையின் இடையில் மாந்த்ரீக குறிப்பை தருவதை பாரதியார் செய்திருக்கிறார். ஜயந்த பட்டரின் வடமொழி நாடகமான ஆகமடம்பனத்தில் சூத்ரதாரன் (இயக்குநர்) அந்த நாடக ஆசிரியரையே நக்கல் செய்யும் பகுதி உண்டு. இவன் எழுதிய நாடகத்தை எல்லாம் அரங்கேற்ற வேண்டியிருக்கிறதே என்று புலம்புவதாக ஒரு காட்சி இருக்கும். சாரு நிவேதிதா தனது கதையாடலுக்கான கருவிகளை மேல் நாட்டு படைப்புகளில் கண்டடைந்திருக்கலாம். ஆனால் அவை எல்லாம் இம்மண்ணில் இருந்தவையே. இம்மண்ணிற்கு அந்தியமானவை அல்ல. பின்னாட்களில் இதனை உணர்ந்த சாரு பழுப்பு நிற பக்கங்கள் நூலில் ஒரு எல்லை வரையிலும் இதனை ஏற்றுக்கொண்டு ஆவணப்படுத்தினார்.

(உ)

சாரு நிவேதிதாவின் நாவல்களை வசிக்காதவர்கள் எதிலிருந்து தொடங்கலாம் என்று கேட்டால் அவர்களுக்கு நான் ராசலீலாவை பரிந்துரைப்பது வழக்கம். சாதாரணனுக்கு அதிகார மையங்களின் வீணை வாசிப்பையும் தங்களது பிராண வேதனையும் புரிந்து கொள்ள ஃபூகோவின் உதவி தேவை இராது. அவர்களது வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி ஒன்றை அவர்கள் முன்பு வைத்தாலே போதும். சட்டென்று புரிந்து கொள்வார்கள். (கோட்பாடு சடுகுடுகள் எல்லாம் கல்வியாளர்களுக்குத்தான் தேவை). ராசலீலை அத்தகைய ஒரு கண்ணாடி. வகையான வகையான வதைகளை குறித்தும் வதை முகாம்களை குறித்தும் சாரு நிவேதிதாவின் நாவல்களில் ஏராளமான சித்தரிப்புகள் உண்டு. அவற்றுள் ஆகச்சிறந்தது இதில் வரும் கீழ் நடுத்தர வர்க்க ஊழியனின் வாழ்க்கை சித்தரிப்பு தான். நரகத்தில் இருக்கிறோம் என்பதையே உணராத நரக வாசிகள்; அல்லது நரகத்திலாவது இடம் கிடைத்ததே என்று ஆறுதலடையும் நரகவாசிகள். இவர்களுடன் வாழ்வது தான் பிரக்ஞை உடையவனுக்கு மிகப்பெரிய சோர்வைத்தரும் விஷயமாக இருக்கும்.

வேதாந்த கதை ஒன்று உண்டு. ஒருவனை புலி துரத்தியதால் கண் மண் தெரியாமல் ஓடி பாழுங் கிணற்றில் விழப்போனான். சட்டென்று விழுது ஒன்றை பிடித்து தொங்கினான். புலி கிணற்றை சுற்றி வருகிறது. பிடித்திருக்கும் விழுதை ஒரு குரங்கு உலுக்குகிறது. ஒரு பாம்பு ஊர்ந்து வந்து கொண்டு இருக்கிறது . கீழே விழுந்தால் அதோ கதி. இத்தனைக்கும் இடையே மரத்தில் இருந்த தேன் கூட்டில் இருந்து ஒரு துளி தேன் நாவில் வந்து விழுகிறது. பிராண அவஸ்தைக்கு இடையேயும் அந்த ருசியை அம்மனிதன் அனுபவிக்கிறான். அதே போலத்தான் ராசலீலையில் வரும் சில கதாபாத்திரங்களின் வாழ்வும் போகிறது. வதை முகாமில் பத்து வருடங்கள் வசித்தால் அங்குள்ள வாழ்விலும் இன்பம் காண முடியும். இத்தகைய வாழ்க்கையை உயிர் வாழ்வதற்கான ஆதார விசையின் வெற்றி என்று சொல்வதா அல்லது மாபெரும் வீழ்ச்சி என்று சொல்வதா என்பது தான் கேள்வி. பல நேரங்களில் அந்த ஒரு சொட்டு தேன் தான் பிடியை விடாமல் இருப்பதற்கான ஊக்கத்தை தருகிறது, வாழ்க்கைக்கு ஏதோ ஒரு பொருளை தருகிறது என்பதையும் மறுக்க முடியாது.

(ஊ)

காமரூப கதைகள் நாவலை 108 குறுங்கதைகளின் தொகுப்பு எனலாம். இத்தகைய வடிவை யுவன் பயன்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு கதையும் தன்னளவில் முழுமையானது. அதே நேரத்தில் இக்கதைகளை இணைத்து ஒரே பெரும்படைப்பாகவும் பார்க்கலாம். கதைகளை இணைக்கும் சரடாக ஒரு கதாபாத்திரமோ ஒன்றிற்கு மேற்பட்ட கதாபாத்திரங்களோ இருப்பார்கள். இந்த நாவல் இணைய தொடராக வெளிவந்தது. இதனை இன்டர்நெட் நாவல் என்கிறார் சாரு நிவேதிதா. இந்த நாவலின் Hypertextuality காரணமாக அதாவது ஒன்றைத் தொட்டு இன்னொன்றாக ஒரு சுட்டியில் இருந்து இன்னொரு சுட்டிக்கு போவது போல இருப்பது காரணமாகவும் இதனை சாரு அவ்வாறு அழைத்திருக்கலாம். ஆனால் hypertextuality digital humanities எல்லாம் தெரியாத இந்திய வாசகன் கூட இந்த படைப்பை எளிதாக வாசிக்க முடியும்; ரசிக்க முடியும், தன்னளவில் முழுமையான ஒரு கதையை சொல்லும் தனித்தனி அத்தியாயங்கள், அதே நேரம் ஒட்டு மொத்தமாக ஒரு மற்றொரு வகையில் படைப்பாக விளங்கும் பாணி மிகத் தொன்மையானது. வேதாள பஞ்சாசத் அதன் முன்னோடி. விக்கிரமாதித்தன் கதைகள் என்ற பெயரில் நாம் அதை தமிழில் வாசித்திருப்போம். பிறகு இதே வடிவம் 1001 அரேபிய இரவுகளிலும் பயன்படுத்தப்பட்டது. க்ஷண சித்தம் க்ஷண பித்தம் என்பது இயல்பாகி போன ஒரு சமூகத்தின்/காலகட்டத்தின் ஆவணம் என இவற்றை கூறலாம்.

(எ)

சாரு தனது நாவல்களில் ஆகச்சிறந்ததாக எக்ஸைலை சொல்வதுண்டு. இந்நாவல் இரண்டாவது (திருத்தப்பட்ட) பதிப்பு புதிய எக்சைல் என்னும் பெயரில் வெளி வந்தது. குருவாயூர் கேசவனில் தொடங்கி ப்ளாக்கியில் முடியும் இந்நாவல் ஒரு வித ஆவணமும் கூட. அபுனைவாக ஆவணப்படுத்த முடியாது பல விஷயங்கள் புனைவில் வாழும், மாட்டுக்கறியை தின்ன முடியாமல் குப்பையில் மொத்தமாக கொட்டும் மாற்று கலாச்சார பூர்ஷவாக்கள் மாட்டுகறி விருந்து நடத்துவது தொடங்கி ஏராளமான வேடிக்கை வினோதங்கள் நிறைந்த படைப்பு இது.

இந்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் ஊழலுக்கு எதிரான பெரிய எழுச்சி இந்தியாவில் ஏற்பட்டது. ப்ரும்மாண்ட ஊழல்களை குறித்த செய்திகள் இந்தியாவையே உலுக்கியது. பல வழக்குகள் தொடுக்கப்பட்டன (அவற்றில் பலதும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாத காரணத்தால் தள்ளுபடி ஆயின / குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்). ஊழல்கள் நடந்தனவோ இல்லையோ, இச்செய்திகளை ஒட்டி ஏற்பட்ட மக்கள் எழுச்சியும், நிகழ்ந்த போராட்டங்கள் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானவை. இலக்கியத்தை அரசியல் கருவியாக காண்பதாகவும் எழுத்து என்பதே ஒரு அரசியல் செயல்பாடு தான் என்று கூறுபவர்கள் பலருடைய படைப்புலகில் மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளின் தாக்கம் ஏதும் இல்லை. எனக்கு தெரிந்து இந்த கொந்தளிப்புகளுக்கு தமிழ் எழுத்துலகில் எதிர்வினையாற்றியது இருவர் தான். ஒரு ஜெயமோகன். இரண்டாவது நபர் சாரு நிவேதிதா. ஜெயமோகன் தனது அறம் தொகுப்பின் முன்னுரையில் எவ்வாறு அக்காலக்கட்டத்தில் அவருக்கு ஏற்பட்ட மனச்சோர்வில் இருந்து வெளியே வர அச்சிறுகதை தொகுப்பில் உள்ள கதாநாயகர்களின் நிஜ வாழ்க்கை உதவி புரிந்தது என்று கூறியுள்ளார். அவர்களை குறித்த கதைகளை எழுதுவதின் வாயிலாக தனது நம்பிக்கையை மீட்டு எடுத்ததாக கூறியுள்ளார். சாரு நிவேதிதா இதைப் போன்ற எந்த பிரகடனத்தையும் செய்ததாக நினைவில்லை. ஆனால் எழுத வேண்டியவை அனைத்தையும் எக்ஸைலின் முதல் பதிப்பிலே எழுதி விட்டார். சமூகத்தின் கூட்டு நனவிலியிலிருந்து மறைந்து போனலையும் கூட அந்த இலக்கிய பிரதி வழியாக பிழைத்து இருக்கும். இன்று அந்நாவலை வாசிக்கும் பொது வாசகனுக்கு கூட ஒரு காலகட்டத்தின் குறுக்கு வெட்டு தோற்றம் கிடைக்கும். Rohinion Mistry இரா.முருகன் போன்ற எழுத்தாளர்கள் அவசர கால நிலையையும் தனி மனித வாழ்வையும் இணைத்து எழுதிய நாவலுக்கு ஒப்பானது இது. Mistry இரா.முருகன் போன்றோர் அவ்வாறான முயற்சிகளை தசாப்தங்களுக்கு பிறகே செய்தனர். எந்த ஒரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து பொறுமையாக எதிர்வினையாற்றுவது தான் புத்திசாலித்தனமானது. ஆனால் புத்திசாலிகள் நல்ல எழுத்தாளர்களாக மாறுவது இல்லை. அந்த நிதானம் அவர்களை கட்டுரை ஆசிரியர்களாக, ஏன் சிந்தனையாளர்களாக கூட உருவாக்குமே தவிர படைப்பாளியாக பரிணமிக்க உதவாது. ஒரு அராஜகம் நடக்கிறது என்று கேள்விப்பட்டதும் கொந்தளித்து குமறுவது பாமரத்தனமான விஷயம் என்று தோன்றலாம். ஆனால் அந்த பாமரத்தனம் தான் படைப்பிலக்கியத்தின் அருகில் இருக்கிறது .

(ஏ)

சாரு நிவேதிதாவின் நாவல்களில் சித்ர வதைக் கட்சிகள் கணிசமாக வரும் என்று இக்கட்டுரையின் பத்தி ஒன்றில் முன்னரே சொல்லியிருந்தேன். வதையை, வதைப்பவனை, வதைக்கான நியாயத்தை சுற்றி எழுதப்பட்டிருக்கும் நாவல் தேகம். நாவல் எழுத தூண்டுதலாக இருக்கும் விஷயம் என்னவென்பதை நாவலை வாசிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். சித்ரவதை செய்வதின் வல்லவனான கதாநாயகனின் பெயர் “தர்மா”. தர்மா என்பதும் சூர்யா போன்று சாரு அடிக்கடி பயன்படுத்தும் பெயர் தான். ஆனால் இந்த நாவலின் நாயகனுக்கு ஏன் தர்மா என்று பெயர் வைத்தார் என்பதில் பெரிய மர்மம் ஒன்றும் இல்லை. எக்ஸைல் போல இந்நாவலும் ஒருவகை எதிர்வினை தான். சாதாரண மனிதனால் ஒரு சில சூழல்களில் சில சாபச் சொற்களையே உதிர்க்க முடியும். எழுத்தாளனால் அதை படைப்பாக மாற்ற முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அவன் செய்யும் நியாயம் அது.

(ஐ)

ஒவ்வொரு நாளும் ஏராளமான அராஜகங்களை அநியாயங்களை எதிர்கொள்கிறோம்; குறைந்த பட்சம் காண்கிறோம். இவற்றிற்கு எல்லாம் ஏதாவது ஒரு விதத்தில் எதிர்வினையாற்றிய தீர வேண்டும். துணிந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து போராடுகிறார்கள், சாதாரணர் வெளியில் கேட்காத அளவிற்கு வசைகளையோ சாபங்களையோ முணு முணுத்து அவற்றை கடைந்து வர பார்க்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு பிறகு நம்மில் பலருக்கு அற உணர்ச்சி மரத்து விடும். யாருக்கு என்ன ஆனாலும் சரி, நேரத்தோடு வீடு போய் சேர வேண்டும் என்று மனநிலை வந்துவிடும். இது வரமா சாபமா என்று தெரியாது. ஆனால் ஒரு படைப்பாளிக்கு இந்த வரமோ சாபமோ வாய்ப்பதில்லை. அவனது அற உணர்ச்சி மரத்து போவதில்லை. போதாக்குறைக்கு அவன் நுண்ணுணர்வும் அதிகம். அவன் வெளிச்சத்தை காண்பதை விட இருளையே அதிகம் காண்கிறான். ஆகவே இறுதி வரையிலும் கொந்தளித்தும் குமறியும் வாழும் நிர்பந்தத்தில் இருக்கிறான், அவனது குறைந்த பட்ச எதிர்வினை வகைகளை முணு முணுப்பதாக இருக்காது. அது ஒரு கலைப்படைப்பாகத்தான் இருக்கும். ஒரு படைப்பாளி உதாரண புருஷனாக இருப்பான் என்று உறுதி கூற முடியாது. அவனது தனி மனித அறமே ஆரோக்கியமற்று இருக்கக் கூடும். ஆனாலும் பிறரிடம் காணும் அறமின்மை அவனை இம்சிக்கும். பாவம் செய்யாதவர்கள் மட்டும் கல் எறியட்டும் என்பது எல்லா இடத்திலும் சரியான விஷயமாக இருக்காது. சில நேரங்களில் ஒரு தெருநாயின் குரைப் பொலி கூட நியாயத்தை சொல்லும். காத்திரமான படைப்பாளிகள் அனைவரும் இதனை உணர்ந்திருந்தனர். தங்கள் எழுத்து வழியாகத்தான் எதிர்வினையாற்ற வேண்டும், தங்களை சமநிலைப்படுத்திக் கொள்ள என்று உறுதியாக இருந்தனர். அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியை கைக் கொண்டனர். டால்ஸ்டாய் ஜெயகாந்தன் போன்றவர்கள் பிரசங்கிகளின் உடுப்பை தரித்தனர் (இதை சொல்லும் தகுதி தனக்கு இருக்கிறதா என்று டால்டாய் யோசிக்க தொடங்கியிருந்தால் என்ன மிஞ்சியிருக்கும் என்று தெரியவில்லை). புதுமைப்பித்தன் போன்றவர்கள் கசப்பான பகடிகளை ஆயுதமாக கொண்டனர். கரிச்சான் குஞ்சு இருட்டான மூலைகளில் வெளிச்சம் பாய்ச்சினாலே போதும்; கரப்பான் பூச்சிகள் ஒடிவிடும் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார். இந்த வரிசையில் சாரு தேர்ந்தெடுத்தது இன்னொரு வினோதமான முறையை. தன்னை சுற்றி இருப்பவர்கள் தனக்கு இழைக்கும் அநீதிகளை பொறுக்கவும் முடியாமல் அதற்கு எதிராக வினையாற்ற வலுவும் இல்லாதவன் சில நேரங்களில் தனது நிர்வாணத்தையே எதிர்ப்பாக வைப்பது உண்டு. அத்தகைய ஒரு பதிலடியே சாருவின் எழுத்து வகை . இதனை பிறழ்வு எழுத்து என்று வகைப்படுத்தி தான் விளக்க வேண்டும் என்பதில்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளில் எதிர்வினையாற்றினாலும் அவர்களை தூண்டிய விசை ஒன்று தான். சாரு நிவேதிதா கதாநாயகனா, வில்லனா இல்லை கோமாளியா என்றெல்லாம் விவாதிக்கலாம். ஆனால் தமிழ் இலக்கிய உலகில் அவர் இருப்பையும் பங்களிப்பையும் எவ்விதத்திலும் மறுக்க முடியாது

கோமரத்தாடி

ஜெ – 60 தொகுப்பில் வெளிவந்த கட்டுரை

பள்ளி இறுதித் தேர்வு எழுதி முடித்ததும் அடுத்தது என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. எனது குடும்பம் ஒரு வழியாக வரும் பொருளாதார சிக்கல்களிலிருந்து ஓரளவு மீண்டு எழுந்திருந்தது. மருத்துவக் கல்வி உட்பட எதற்கும் செல்லமுடியும் என்ற அளவிற்கு பொருளாதார பலம் மீண்டிருந்தது. ஆனால் எனக்கு ஒருவிதமான சலிப்புதட்டிபோயிருந்தது. பதினேழு வயதிற்குள் வாழ்க்கையில் நான் சந்தித்த பிரச்சனைகளும் அலைக்கழிப்புகளும் என்னை மரத்துப்போகச் செய்திருந்தன. பொதுவாக அனைவருக்கும் கல்லூரி வாழ்க்கை என்பது கனவுகளுடன்தான் தொடங்கும். ஆனால் எனக்கு அது நடந்த விஷயங்களை அசைபோடும் ஓய்வெடுக்கும் காலமாகத்தான் தோன்றியது. அதனால் எந்த தொழிற்கல்விக்கும் செல்ல நான் விரும்பவில்லை. ஏதாவது கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்து முடிந்த அளவிற்கு வாசிப்பு, ஜபம், இத்யாதிகளைச் செய்துகொண்டு எளிமையான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன். இளங்கலை வேதியியல், வரலாறு, ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானித்தேன். அதிகம் சிரமப்படுத்திக்கொள்ளக் கூடாது என்று தீர்மானித்த பிறகு வேதியியலுடன் எதற்கு மல்லுக்கட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எனது வீட்டிற்கு அருகே உள்ளே கல்லூரியில் இளங்கலை வரலாறு தமிழ் வழியில்தான் இருந்தது. தமிழில் ஏராளமாக வாசித்திருந்தேன். ஓரளவு எழுதவும் செய்திருந்தேன். ஆனால் தமிழில் வரலாறு தொடர்பான கலைச்சொற்களை எல்லாம் இனிமேல் புரிந்துகொண்டு தேர்வுகளைத் தமிழில் எழுதமுடியுமா என்ற கேள்வி எழுந்தது. அதனால் இளங்கலை ஆங்கில இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்தேன். பள்ளியில் நான் விரும்பிப் படித்த வெகுசில பாடங்களுள் ஆங்கிலமும் ஒன்று. (பிற பாடங்கள் வரலாறும் வேதியியலும்). எனது பள்ளி ஆசிரியருள் இன்றளவும் நான் மதிப்பவர் எனது ஆங்கில ஆசிரியை ஒருவரை மட்டும்தான். கையில் கிடைத்ததை எல்லாம் நான்கு / ஐந்து வயதிலிருந்து வாசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் இலக்கியம் தரும் நுண்ணுணர்வு என்பதற்கு ஓரளவாவது அருகில் வரும் ஒரு அனுபவத்தை நான் அடைந்தது ஆறாம் வகுப்பில் ஆங்கிலத் துணைப்பாட நூலான ‘A Tale of Two Cities’ வாசித்த பிறகுதான். அந்த நாவலில் கதாநாயகனின் தியாகமும் Martyr என்ற சொல்லும் என்னைப் பாதித்தன. வாழ்க்கையில் முதல் முறையாக இலக்கின்றி, காரணமுமின்றி அந்த நாவல் சுருக்கத்தைக் குறித்து சிந்தித்தாவாறே ஒருமணிநேரம் நடந்தேன். அதனால் ஆங்கில இலக்கியத்தைத் தேர்ந்தெடுப்பதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை.

 

கல்லூரி தொடங்கி ஒரு வாரம் முடிவதற்குள்ளேயே நான் எனது முடிவை மறுபரீசிலனை செய்யத் தொடங்கியிருந்தேன். அந்த அளவிற்கு ஏமாற்றம். Spencer-ன் Prothalamion-ஐ வைத்து சாத்தத் தொடங்கியிருந்தார்கள். பேராசிரியர் வின்ஸ்டன் சாமர்வெல் Dr. Faustus-ன் chorus பகுதியையே ஒரு வாரம் எடுத்தார். அதன் ஆழத்தைப் புரிந்துகொள்ளும் திறன் எங்களுக்கு இல்லை. பேரா. ஜனார்த்தனனின் மொழியியல் விரிவுரைகள் மட்டும்தான் ஆறுதலாக இருந்தன. எந்த விதத்திலும் எனக்கு உணர்வு ரீதியான இணைப்பையோ அறிவெழுச்சியையோ தராத இந்த வகுப்புகளில் இருந்து என்ன பயன் என்ற எண்ணம் வந்தது. எல்லாம் இப்படி வறட்சியாகத்தான் இருக்கும் என்றால் ஏதாவது தொழிற்கல்விக்குச் சென்றால் என்ன என்ற எண்ணமும் வந்தது. அந்த நேரம் சென்னை செல்லவேண்டிய அவசியமும் ஏற்பட்டதால் நான் ஒரு வாரம் சொல்லாமல் கொள்ளாமல் கல்லூரியிலிருந்து தலைமறைவானேன். ஒரு வார விடுமுறை எந்த தெளிவையும் ஏற்படுத்தவில்லை. ஒரு வாரத்திற்குப் பிறகு கல்லூரிக்கு சென்றபோதும் மனதிருப்தி இல்லாமல்தான் சென்றேன். எனது பேராசிரியர்கள் யாவரும் நான் உருப்படியான வேறு ஏதோ ஒரு படிப்பில் சேர்ந்திருப்பேன் என்று நம்பியிருந்தார்கள். திரும்பி வந்ததும் என்னவாயிற்று என்று கேட்டார்கள். நான் அரைமனதாக ஏதோ கூறி சமாளித்தேன். அன்று மதியம் ஏகப்பட்ட அதிருப்தியுடன் இந்திய ஆங்கில இலக்கிய விரிவுரை வகுப்பில் அமர்ந்திருந்தேன். அதுவரை நான் பார்த்திராத எட்வின் சிங் ஜெயச்சந்திரா என்னும் பேராசிரியர் விரிவுரையாற்ற வந்தார். நான் விடுப்பில் இருந்த நாட்களில் ஒரு நாடகத்தை நடத்தத் தொடங்கியிருந்திருக்கிறார். பூர்வாங்க அறிமுகங்கள் முடிந்து அந்த நாடகத்தின் ஆரம்பக் காட்சிகளை விளக்கத் தொடங்கினார். கல்லூரிக்கு வந்த பிறகு முதல் முறையாக நான் மெய்மறந்து கேட்ட வகுப்பு அது. நாடகத்தின் பெயரோ அதன் ஆசிரியர் பெயரோ எதுவும் தெரியாது. ஆனால் அதில் வந்த கதாபாத்திரங்களின் குணங்களும் குணக்கேடுகளும் ஈர்த்தன. வகுப்பு முடிந்ததும் அருகில் அமர்ந்திருந்த நண்பனிடம் பாடநூலை கடன் வாங்கிப் புரட்டினேன். மராட்டியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட விஜய் டெண்டுல்கரின் ‘Silence! The Court is in session’ என்னும் நாடகம் அது. அன்று இரவே அந்த இருப்பில் வாசித்து முடித்தேன். மறுநாள் காலையில் மீண்டும் வாசித்தேன். ஓர் இரவிற்குள் அந்நாடகத்தில் உள்ளடக்கம் மற்றும் கதாபாத்திரங்கள் தொடர்பான பார்வை மாறியிருந்தது. நீதி x அநீதி, சரி x தவறு இவற்றை எல்லாம் கறுப்பு வெள்ளையாக எப்போதும் சுருக்கிவிட முடியாது என்று புரிந்தது. அலாதியான வாசிப்பின்பமும் கிடைத்தது. பேராசிரியர் அந்த நாடகத்தை எடுக்கத் தொடங்கிய நிமிடத்திலேயே இப்படிப்பட்ட புத்தகங்களை வாசிப்பதுதான் இந்தக் கல்வி எனில் இதிலே இருந்துவிடுவது, இத்துறையிலேயே வாழ்க்கையை அமைத்துவிடுவது என்று தீர்மானித்திருந்தேன். அந்தத் தீர்மானம் மறுநாள் இன்னும் உறுதியானது. பின்னாட்களில், “எனது வாழ்க்கை உருப்படியானத்திற்கு பேராசிரியர் எட்வின் சிங் ஜெயசந்திராதான் காரணம்” என்று நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. ‘Tale of Two Cities’-ஐ வாசித்து முடித்த தருணத்திற்கும் ‘Silence, The Court is in Session’ நாடகம் தொடர்பான முதல் விரிவுரையைக் கேட்ட தருணத்திற்கும் இணையானது ஜெயமோகனின் படைப்புகளை வாசிக்கத் தொடங்கிய தருணம்.

 

||

 

ஜெயமோகனின் படைப்புலகில் நான் நுழைந்தது மற்ற பலரைப்போல ‘சங்கச் சித்திரங்கள்’ வழியாக அல்ல. குமுதம் தீராநதி இதழில் அவரது சிறுகதை ஒன்றை வாசித்தேன். உடல் ஊனமுற்ற நபர் ஒரு ரெளடியை அடித்து வீழ்த்துவதை மையமாகக் கொண்ட கதை அது. அதில் வந்த நுட்பமான வர்ணனைகளால் கவரப்பட்டேன். குறிப்பாக அடிமுறை ஆசானின் உபதேங்கள் இவ்வளவு நுட்பமாக கவனித்து எழுதியிருக்கிறாரே என்ற வியப்பு ஏற்பட்டது. ஆனால் அவரது தீவிர வாசகனாக மாறியதற்கு காசிரங்கா காட்டு தத்துவ விவாதப் பகடிகள்தான் காரணம். தீராநதி இதழில் ‘உட்கார்ந்து யோசிக்கும்போது’ என்பது போன்ற தலைப்பில் இந்தியத் தத்துவப் பிரதிநிதிகளை பகடி செய்து சில கட்டுரைகள் எழுதினார். அக்கட்டுரைகள் இப்போது ‘அபிப்ராய சிந்தாமணி’ தொகுப்பில் வாசிக்கக் கிடைக்கின்றன. அந்த வரிசையில் நான் முதலில் வாசித்தது ‘சைவ சித்தாந்தம்: ஒரு விவாதம்’ என்னும் கட்டுரையை. தச்சநல்லூர் சங்கர நயினார் பிள்ளை படும் பாடுகளை எளிதில் விவரிக்க முடியாது. நக்கலும் நையாண்டியும் நிறைந்த பகடிக் கட்டுரை. வெடித்துச் சிரித்துக்கொண்டிருந்தேன். வரிக்கு வரி கிண்டல். வாசித்துச் சிரிக்கும்போதே ஒரு விஷயத்தை உணர்ந்தேன். மேற்படி பகடிக்கட்டுரை / கதை வெறுமே நக்கல் செய்ய எழுதப்பட்டதல்ல, சைவ சித்தாந்தம் என்னும் மதப்பிரிவின் நுட்பங்களும் அச்சமயத்தைப் பின்பற்றுபவர்கள் இடையே உள்ள விவாதங்களும் எல்லாம் தெரிந்த நபர் ஒருவரால் எழுதப்பட்ட பகடி அது என்று புரிந்துகொண்டேன். சைவ சித்தாந்தத்தத்தின் அடிப்படைகள் தெரியாதவர்களுக்கு அந்தப் படைப்பை ரசிக்க முடியாது. அத்தனை நுட்பமானது. ‘மாலை முரசு’ மாலை இதழினை விரித்து தூங்கும் தொழிலாளியை சுரா ‘மோசக்கீரனார்’ என்று அழைத்ததை ஜெ வேறொரு கட்டுரையில் எழுதியிருப்பார். சங்க இலக்கியம் தெரியாதவர்களுக்கு சுரா ஏன் அப்படிச் சொன்னார் என்று புரியாது. அது போன்ற விஷயம் இது. மேலும் இனவரைவியலிலும் ஜெக்கு நல்ல பரிச்சயம் இருப்பது புரிந்தது. அம்மாவும் தம்பியும்கூட அக்கட்டுரையை ரசித்து வாசித்தார்கள். அதிலிருந்துதான் ஜெயமோகன் என்னும் பெயர் மனதில் தங்கியது. இந்த அளவிற்கு நுட்பமாக எழுதியிருக்கிறாரே யார் இவர் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

 

பிற்காலங்களில் ஒருவேளை நாம் வேறு சமயப்பிரிவைச் சார்ந்தவர் என்பதால்தான் அப்படி நகைத்து மகிழ்ந்தோமோ? ஒருவேளை சைவர் ஒருவர் இதை வாசித்தார் எனில் அவர் இதனால் புண்பட்டிருப்பாரோ என்ற எண்ணம் எழுந்தது. சித்தாந்த சைவப் பிரிவைச் சார்ந்த, ஆனால் இலக்கிய வாசிப்புப் பழக்கம் இல்லாத இரண்டு நண்பர்களுக்கு அந்தக் கட்டுரையை அனுப்பி வைத்தேன். இருவரும் தொலைப்பேசியில் அழைத்து, “யாருய்யா இது? புட்டு புட்டு வச்சிருக்கான். சிரிப்பு தாங்கல” என்றே சொன்னார்கள். உண்மையில் நம் ஊரில் கிடைக்கும் தத்துவப் பாடப்புத்தகங்களில் உள்ளதைவிட அதிகம் தகவல் அந்தப் பகடிப் படைப்புகளில் இருந்தது.

 

அதன் பிறகு ‘விஷ்ணுபுரம்’ கையில் கிடைத்தது. AVS என்றொரு தனியார் நூலகத்தில் கோட்டயம் புஷ்பநாத் நாவல்களிடையே இருந்து எடுத்தேன். ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காகப் படித்துக்கொண்டிருந்த நாட்கள் என்று எண்ணுகிறேன். ஒரே இருப்பில் ஒன்றரை நாட்களில் அந்த நாவலை வாசித்து முடித்தேன். இன்றளவும் ‘விஷ்ணுபுரம்’ ஏன் பலருக்கும் வாலி ஏறா மலையாக இருக்கிறது என்று புரியவில்லை. எனக்கு அதனை வாசிப்பதில் எந்தத் தடையும் இருக்கவில்லை. ஒருவேளை எனக்குப் பழக்கமான தளம் என்பதாலாகக்கூட இருக்கலாம். வாசித்து முடித்ததும் நூலாசிரியரைச் சந்தித்துப் பல விஷயங்கள் பேசவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஏற்றுக்கொள்ளவும் முரண்படவும் விவாதிக்கவும் ஆயிரம் விஷயங்கள் அதில் இருந்தன. ஜெயமோகன் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அவரை நேரில் சென்று சந்திப்பதில் எனக்குப் பல மனத்தடைகள் இருந்தன. இத்தனைக்கும் குறுக்கு வழியில் நடந்தால் என் வீட்டிற்கும் அவர் வீட்டிற்கும் இடையே அரை மைல் தொலைவுகூட இருக்காது. மனத்தடைக்கு முக்கியக் காரணம் சிற்றிதழ் இலக்கியச் சூழல் குறித்து எனக்கு இருந்த பிம்பம். குடிகாரர்களாக, கலகக்காறார்களாக ஒரு வார்த்தைக்கு மறுவார்த்தை அடிக்கப் பாய்கிறவர்களாக இருக்கும் ஒரு குழுவினர்தான் இலக்கியத்தையும் பேணிக் காக்கிறார்கள் என்ற எண்ணம் இருந்தது. மேற்படி குணாதிசயங்கள் உள்ள நபர்களுடன் நித்ய ஜீவனம் நடத்திய எனக்கு அத்தகையவர்களைத் தேடிச்சென்று பார்க்கும் எண்ணம் வரவில்லை. ஆனால் ஜெயமோகனது படைப்புகளைத் தொடர்ந்து தேடிப்பிடித்து வாசிக்க ஆரம்பித்தேன். ரப்பர், ஏழாம் உலகம் என அந்த வாசிப்பு தொடர்ந்தது. ஒரு புத்தகக் கண்காட்சியில் அவரது சிறுகதைத் தொகுப்புகளும் கிடைத்தன. இவை எல்லாம் நடந்துகொண்டிருந்த காலத்திலும் நான் அவரது இணையதளத்தைக் குறித்து அறிந்திருக்கவில்லை. 2008-லோ 2009-ன் ஆரம்பித்திலோதான் அவரது இணையதளத்தை வாசிக்கத் தொடங்கினேன். இணையதளம் ஜெயமோகனின் ஏனைய பரிமாணங்களையும் புரியவைத்தது.

 

III

 

ஓரளவிற்கு அவரது படைப்புகளை எல்லாம் வாசித்து பிறகுதான் அவரைச் சந்தித்தேன். ஆனால் எங்கள் நண்பர்கள் வட்டத்தில் ஏறத்தாழ ஒவ்வொரு வாரமும் ஜெயைக் குறித்த பேச்சோ அவரது படைப்புகளைக் குறித்த விவாதங்களோ நடக்கும். எனது நண்பர்கள் லக்ஷ்மி நாராயணனும் (வெங்கடேஷ்) பிரதீப்பும் சிறந்த வாசகர்கள். எங்களிடையே புத்தகப் பரிமாற்றம் உண்டு. புத்தகங்களைக் குறித்து விவாதிப்பதும் உண்டு. இதில் பிரதீப்பிற்கு பல வருடங்களாக ஜெயமோகனை நன்றாகத் தெரியும். ஆனால் வாசகர் என்ற முறையில் அல்ல. பிரதீப் வன்பொருள் விற்பனை மற்றும் பழுது நீக்குதல் செய்யும் நிறுவனத்தை நடத்திவந்தார். ஜெயமோகன் அவரது நெடுநாள் வாடிக்கையாளர். வாரம் ஒருமுறையாவது ஜெயின் கணினிக்கு சிகிச்சை செய்ய ஜெ வீட்டிற்கு அவர் செல்வதுண்டு. அவர் வாயிலாக ஜெயின் தினசரி வாழ்க்கை, வாடிக்கை, செயல்பாடுகள் குறித்த தகவல்கள் வந்துகொண்டே இருக்கும். ஆனாலும் நேரடியாகச் சந்திக்க ஒரு தயக்கம் இருந்தது.

 

நேரடியான சந்திப்பு என்பது 2012/13 இல் நடந்தது. ஓர் உயர்கல்வி நிறுவனத்தின் தமிழ்ச் சங்கத் தொடக்க விழாவிற்காக எழுத்தாளர் ஒருவரை அழைக்க வேண்டும் என்று அந்தச் சங்கத்தின் பொறுப்பில் இருந்த மாணவர்கள் விரும்பினார்கள். புத்தகங்களை வாசிப்பவன் என்ற அடிப்படையில் என்னிடம் தலைசிறந்த எழுத்தாளர் ஒருவரை அடையாளம் காட்டுமாறு கேட்டுக்கொண்டார்கள் இலக்கியவாதிகளை கல்வி நிறுவனங்களுக்குக் கொண்டுவருவது என்பது யானையைப் பூங்காவிற்குள் நடைபயிற்சிக்குக் கொண்டுவருவதைப் போன்றது. நேரங்களில் மக்கள் இம்சை செய்வார்கள். நேரங்களில் யானை கடுப்பாகி நாலு பேரைத் தூக்கிப்போட்டு மிதிக்கும். அபூர்வமாக யானைக்கும் மக்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படும். எதற்கும் தயாராக இருக்கவேண்டும். சரி, நடப்பது நடக்கட்டும் என்று எண்ணி ஜெயமோகனது வீட்டு விலாசத்தைக் கொடுத்தேன். அதனை வாங்கிச்சென்ற மாணவர்கள் 30 நிமிடங்களுக்குள் திரும்பி வந்துவிட்டார்கள். டோரா விரட்டிவிட்டிருக்கும் என்றுதான் எண்ணினேன். ஆனால் மாணவர்கள் வெற்றிப் பெருமிதத்துடன் திரும்பி இருந்தார்கள். ஜெயைச் சந்தித்துவிட்டதாகவும் எந்தவிதமான பிகுவும் செய்யாமல் தமிழ் மன்றத் தொடக்க விழாவிற்கு வரச் சம்மதித்துவிட்டார் என்றும் சொன்னார்கள். மொய் வைத்து அழைத்தாலே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வர சுணக்கம் காட்டும் சில பேராசிரியப் பெருந்தகைகளையே பார்த்துச் சலித்துப்போயிருந்த எனக்கு ஜெயின் அணுகுமுறை மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது. அவர் மீதான மதிப்பு இன்னமும் அதிகரித்தது. அந்த விழா மேடையில் வைத்துதான் ஜெயை முதலில் சந்தித்தேன். புத்தகங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டேன். நாமம் அணிந்த நாயர் என்னும் அபூர்வ ஜீவியாக என்னை அவர் அன்று கண்டிருக்க கூடும். அந்த நிகழ்ச்சி நடந்த அன்று மாலையில் முதன்முதலாக தமிழில் தட்டச்சு செய்தேன். கூகுள் விசைப்பலகையைப் பயன்படுத்தினேன். ஜெக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். உடனடியாக பதில் வந்தது. அன்றுமுதல் அடிக்கடி அவருக்கு மின்னஞ்சல் அனுப்பத் தொடங்கினேன். சாலையில் வைத்துச் சந்தித்தால் அவரது நடைபயிற்சியைப் பாதிக்காத அளவிற்கு ஓரிரு நிமிடங்கள் பேசவும் தொடங்கினேன்.

இக்காலக்கட்டத்தில் நடந்த மற்றொரு முக்கியமான விஷயம் அவர் எழுதிய ‘பின்தொடரும் நிழலின் குரல்’ புத்தகத்தை வாசித்தது. ஜெயின் இணையதளம் வாயிலாகவே சக்தி நூலகமும் கவிஞர் பாலா கருப்புசாமியும் அறிமுகமானார்கள். அது ‘பின்தொடரும் நிழலின் குரல்’ அச்சில் இல்லாத காலம். எனக்கோ அதனை வாசித்தே ஆகவேண்டும் என்ற அபார ஆவல். சக்தி நூலத்திலும் அந்த நூலின் பிரதி இல்லை. ஆனால் எனது ஆர்வத்தைப் புரிந்துகொண்ட பாலா அவர் பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்த அவரது தனிப்பட்ட சேகரிப்பில் உள்ள பிரதியைத் தந்தார்.

 

எங்கள் பராபர குருவின் ஆராதனைக்கு கும்பகோணம் செல்லும் வழியில் நெல்லையில் இறங்கி பாலாவிடமிருந்து புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு சென்றேன். நாகர்கோவிலிலிருந்து நெல்லை, நெல்லையிலிருந்து மதுரை என்று கையில் கிட்டிய பேருந்துகளில் பயணித்து கும்பகோணம் செல்வதுதான் அந்நாட்களில் என்னுடைய வழக்கம். நெல்லை – மதுரை பேருந்தில் ஏறியதும் லேசாகப் புரட்டிப் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். பேருந்துகளிலும் பேருந்து நிலையங்களிலுமாக மறுநாள் கும்பகோணத்தைச் சென்றடைவதற்குள் நாவலை வாசித்து முடித்தேன். மனதிற்குள் ஏராளமான கேள்விகளை, உணர்வுக் கொந்தளிப்புக்களை ஏற்படுத்திய படைப்பு அது. இன்றளவும் ஜெயின் ஆகச்சிறந்த நாவலாக நான் கருதுவது ‘பின்தொடரும் நிழலின் குர’லைத்தான். உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் சொல்பொருளிலும் நிகரற்ற படைப்பு என இதனைக் கருதுகிறேன். என்றாவது ஒருநாள் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ தந்த வரசிப்பு அனுபவத்தைக் குறித்து விரியாக எழுதுவேன் என்று நம்புகிறேன். அறமும் அரசியலும் விழுமியங்களும் மோதி முரணியங்கி மானுடம் எழும் களமாக அந்நூலைக் காண்கிறேன். ‘பின்தொடரும் நிழலின் குர’லை வாசித்த பிறகு ஜெ காலாதீதமான படைப்பாளி என்ற எண்ணம் உறுதியானது.

 

IV

 

இத்தனையும் ஆனபிறகும் ஜெயை அடிக்கடி சந்திக்கத் தொடங்கவில்லை. அவரது நேரத்தை வீணாக்கிவிடக்கூடாது என்பதிலும் மிகக்கவனமாக இருந்தேன். ஜெயுடன் சகஜமாகப் பேசுவதற்கு ஒரு சிறிய தயக்கம் இன்றளவும் இருக்கிறது.

 

அக்காலக்கட்டத்தில் சக்தி நூலகம் பாலா வாயிலாக எனக்கு அறிமுகமான மற்றொரு படைப்பாளி போகன். அவர் குடியிருந்ததும் பார்வதிபுரத்தில்தான். எனது நண்பரான வைத்தியர் ஒருவரால் போகனது உடல்நலச் சிக்கல்களைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் முகநூல் உள் டப்பியில் பேசி நேரில் சந்தித்தேன். எனக்குக் கவிதை எழுதுவது, கதை எழுதுவது போன்ற கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை என்று உறுதிபடுத்தியதும் நண்பரானார் (“நீங்க வேணா கதை, கவிதை எல்லாம் எழுதிக்கிடுங்க நாயர். ஆனா ஏன் கண்ணில் படாம பாத்திகிடுங்க” என்று சில நாட்களுக்குப் பிறகு சிறப்புச் சலுகை அளித்தார்).

 

போகனுடன் உலாவத் தொடங்கிய பிறகுதான் ஜெயமோகனுடன் அதிகமாக உரையாடத் தொடங்கினேன். ஜெயமோகனும் போகனும் உரையாடுவதைக் கேட்டதே ஒரு அறிவுச் செயல்பாடுதான். போகன் உடனிருக்கும்போது ஜெயுடன் இன்னமும் சுதந்திரமாகப் பேச முடிந்தது என்று உணர்ந்தேன். எனக்கும் போகனுக்கும் இலக்கியம் தாண்டி சில விஷயங்களில் பொதுவான ஆர்வம் இருந்தது. அதனால் போகனுடன் இயல்பாகப் பழக முடிந்தது. போகனுக்கும் ஜெயமோகனுக்கும் இடையில் படைப்பாளிகள் என்ற அடிப்படையில் பரஸ்பர மரியாதை இருந்தது. அதனால் போகனுடன் ஜெயைச் சந்திப்பது என்பது எளிதாக இருந்தது. (“நான் என்ன கும்கி யானையா?” என்று போகன் கேட்பார்) இக்காலக்கட்டங்களை ஒரு பொற்காலம் என்று கூறலாம். ஏறத்தாழ ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒருநாள் மாலை நடையின்போது சாலையில் வைத்து சந்திப்பதுண்டு. நலம் விசாரித்துவிட்டு ஏதாவது ஒரு விஷயத்தைக் குறித்து பேசத் தொடங்குவோம். பேச்சு குறைந்தது இரண்டு மணிநேரமாவது ஓடும். இந்த நடுத்தெரு விவாதங்களின்போது அடிபடும் புத்தகங்களின் பெயர்களைக் குறித்துக்கொள்வேன். அடுத்த வாரத்திற்குள் அவற்றில் வாசிக்க முடிந்தவற்றை வாசித்துவிடுவேன். அந்தக் காலக்கட்டத்தில் போகனுக்கும் ஜெயமோகனுக்கும் இடையே கடுமையான முரண்கள் இருந்தன. இருந்தாலும் விவாதங்கள் அனைத்தும் ஆக்கப்பூர்வமாகதான் நடந்தன.

 

IV

 

2010 முதலே உயர்கல்வி நிறுவங்களில் நடைபெறும் ஊழல் குழுச்செயல்பாடுகள் ஆகியவற்றிக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தேன். பல நேரங்களில் இப்போராட்டங்களால் புதிய பகைவர்களை உருவாக்குவது தவிர எந்தப் பலனும் இருந்ததில்லை. கல்விப்புலத்தில் (Academic) இருந்து உருப்படியாக எதுவும் செய்ய முடியாதோ என்ற எண்ணம் ஏற்படும். ஒருநாள் இது தொடர்பான பேச்சு வந்தபோது ஜெ அ. கா. பெருமாளின் சாதனைகளைச் சுட்டிக்காட்டினார். “அ. கா. பெருமாள் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனம் எதிலும் பணிபுரிந்தவர் அல்ல. கல்வி நிறுவனங்களிலிருந்து எந்தப் பெரிய அங்கீகாரமும் அவருக்குக் கிடைக்கவில்லை. பேராசிரியராகவோ, துறைத் தலைவராகவோ, முதல்வராகவோ அ. கா. பெருமாள் பொறுப்பு வகிக்கவில்லை. ஆனால் நூற்றுக்கணக்கான புத்தங்களையும் ஆயிரகணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவரது பல ஆய்வுக் கட்டுரைகளும் புத்தகங்களும் முன்னோடிப் படைப்புகள். வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கான ஆணித்தரமான தரவுகளைத் தருபவை. அவரது பெயரைக் குறிப்பிடாமல் தமிழக வரலாறு, நாட்டார் இயல் போன்றவற்றில் யாரும் எதுவும் எழுத முடியாது.” இதனை எல்லாம் ஜெ உணர்வெழுச்சியுடன் சொன்னார். இறுதியாக, “கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் அரசியல் செய்து பணி உயர்வையும் பதவியையும் கைப்பற்றிக்கொண்டவர்கள் எல்லாம் ஓய்வு பெற்ற பிறகு சீந்துவார் இன்றி நடைப்பிணங்களாக இருக்கிறார்கள். ஆனால் அ. கா. பெருமாள் ஓய்வு பெற்று பத்து வருடங்கள் ஆன பிறகும் அவரைத் தேட உலகெங்கிலிருந்தும் ஆய்வாளர்களும் ஆய்வு மாணவர்களும் வருகிறார்கள். நிருவனங்களைத்தாண்டிய அறிவு செயல்பாடு இருக்கிறது. காலவெளியில் அது மட்டும்தான் எஞ்சி நிற்கும். மற்றவை மட்கிப் போகும்” என்றார். இந்த வார்த்தைகள் இன்றளவும் எனக்கு மிகுந்த ஊக்கத்தைத் தருபவை. அதன் பிறகும் ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடினாலும் உயர்கல்வி நிறுவனச் சூழல் எனது கல்விச்செயல்பாடுகளைப் பாதிக்காதவாறு கவனமாக இருந்தேன்.

 

ஜெயுடனான விவாதங்கள் வழியாக அழகியல் திறனாய்வு, செவ்வியல் தன்மைத் திறனாய்வு போன்றவற்றின்பால் திருப்பப்பட்டேன். நவீன இலக்கியக் கோட்பாடுகளில்தான் வல்லவனாக இருந்தேன். எனது கல்விப்புல ஆய்வுகளும் அவற்றை மையமாகக் கொண்டவையே. முதுகலை மாணவர்களுக்கு நான் கற்பித்ததும் கோட்பாடுகள் சார்ந்த திறனாய்வுகளைத்தான். கோட்பாடு சார்ந்து திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதில் ஒரு வசதி உண்டு. கோட்பாட்டில் ஒருவருக்கு நல்ல பாண்டித்தியம் இருந்தால் எந்தப் படைப்பை வாசித்தாலும் அதில் கோட்பாட்டைப் பிரயோகப்படுத்தி ஒரு ஆய்வுக்கட்டுரையை எழுதிவிடலாம். ஜெ இதற்கு நேர் மாறான திறனாய்வு முறையில் ஆர்வம் கொண்டவர். ஒரு படைப்பாளியின் படைப்புகள் அனைத்தையும் வாசித்து அவர் எந்த மரபின் நீட்சியாக வந்திருக்கிறார். அதே நேரம் அந்த மரபிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறார் என்று நிறுவும் திறனாய்வு முறையை ஜெ முன்னெடுத்தார். இது Harold Bloom போன்றவர்களது பாணி. இந்த வகையிலான திறனாய்வுக் கட்டுரைகளை வாசிக்க வாசிக்க எல்லாவற்றையும் கோட்பாடுகளைக்கொண்டு சுருக்குவது அராஜகமானது என்று புரிந்துகொண்டேன். அழகியல் விமர்சனம் கடும் உழைப்பையும் ரசனையையும் கோரும் செயல்பாடு. ஆயிரக்கணக்கான புத்தகங்களை வாசித்திருந்தால்தான் ஒரு படைப்பாளியின் இடம் என்று வாதிட முடியும். ஒரு சிறுகதைத் தொகுப்பை திறனாய்வு செய்கிறோம் என்றால் அது எந்த மரபின் நீட்சி / நீட்சி அல்ல என்று வகைப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு மரபு தெரியவேண்டும். மரபு தெரியவேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஆயிரம் சிறுகதைகளையாவது வாசித்திருக்க வேண்டும். குறுக்கு வழிகள் ஏதும் இல்லை. இதற்குச் சோம்பியே பலரும் கோட்பாடுகளின் உலகிற்குள் சரணடைகிறார்கள் என்று புரிந்தது. இன்றும் திறனாய்வு செய்ய கோட்பாடுகளை பயன்படுத்தத்தான் செய்கிறேன். ஆனால் அவற்றின் போதாமைகளை உணர்ந்துகொண்டு பயன்படுத்துகிறேன். இலக்கியக் கோட்பாடுகளின் மாய உலகிலிருந்து அழகியல் மற்றும் செவ்வியல் மரபு சார்ந்த திறனாய்வு நோக்கி வந்தேன். ஜெக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுவது வாயிலாக எழுத்துச் சோம்பலிலிருந்து வெளியே வந்தேன்.

 

ஜெயுடன் முரண்பட்டதே இல்லையா? என்று கேட்டால் ஏராளமான நேரங்களில் எக்கச்சக்கமான விஷயங்களில் முரண்பட்டிருக்கிறேன் என்பதே பதில். அவர் அத்வைதி. நான் த்வைதி. இதில் தொடங்கி நூற்றுக்கணக்கான விஷயங்களில் அவருக்கு நேர் எதிரான தரப்பைச் சார்ந்தவனாக இருக்கிறேன். ‘விஷ்ணுபுரம்’ நாவலிலும், ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலிலும் அவரது படைப்புகள் பலவற்றிலும் எனக்குச் சற்றும் பிடிக்காத, நான் கடுமையாக எதிர்க்கும் விஷயங்கள் உள்ளன. இவ்வளவு ஏன், ‘அறம்’ சிறுகதையில் வரும் அந்த வசைச்சொல் என்னை ஆத்திரமடையச் செய்தது. அது கதாபாத்திரத்தின் குரல், அத்தகைய கையறு நிலையில் ஏமாளியாக நிற்கும் எழுத்தாளன் அப்படிப் பேச வாய்ப்பு உண்டு என்றெல்லாம் எனது போதமனது சொன்னாலும் அதையும் தாண்டி அந்த வசை என்னை அமைதியிழக்கச் செய்கிறது.

 

இத்தகைய ஒவ்வாமைகளைத் தாண்டி அவரது வாசகராக எப்படி நீடிக்க முடிகிறது? 100% நாம் நினைப்பதை, நம்புவதைத்தான் ஒரு படைப்பாளி எழுதவேண்டும் என்று நினைத்தால் அது நடக்கவே நடக்காது என்று எனக்குத் தெரியும். ஓர் இலக்கியப் பிரதி என்பது வாசகனுக்காகத் ‘தயாரிக்கப்படும்’ நுகர்வுப் பொருள் அல்ல என்று நம்புகிறேன். அவ்வாறு சொல்லித் தைக்கப்படும் சட்டையைப் போன்ற பிரதிகள் பரப்புரை கோஷமாகவே எஞ்சும். படைப்பு என்பது எழுத்தாளனின் அந்தரங்கச் செயல்பாடு. தேக்கி வைத்த விஷத்தை நாகமணியாக மாற்றி அரவம் துப்பும்போது அதனைப் பிறரும் காண்கிறார்கள். பிறருக்கும் அது வெளிச்சம் தருகிறது. அரவத்திற்கு ஆசுவாசம் உபரி பலன். பிறருக்கு வெளிச்சம் உபரி பலன். அதுபோலத்தான் ஓர் இலக்கியப் படைப்பும். வந்ததை வந்தது போலத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற புரிதல் எனக்கு உண்டு.

 

தவிரவும் படைப்பாளியின் உயிர்நாடியே படைப்புச் சுதந்திரம்தான். இப்படி எழுது, இப்படி எழுதாதே என்றால் வலுவற்ற படைப்பாளி எழுதுவதை நிறுத்துவான். வலுவான படைப்பாளி அதனால் சீண்டப்பட்டு எதை செய்யக்கூடாது என்று சொன்னோமோ அதனை அதிகமாகச் செய்யத் தொடங்குவான். இது பாலபாடம்.

 

ஜெ ‘வெண்முரசு’ எழுதத் தொடங்கியபோது எனக்கு இரண்டு விதமான கவலைகள் ஏற்பட்டன. முதல் விஷயம் ஜெ எழுதும் ‘வெண்முரசு’ வேறு மஹாபாரதம் வேறு என்று புரிந்துகொள்ள முடியாமல் பலருக்கு ஏற்படும் குழப்பங்களைக் குறித்தது.

 

அந்தப் பிரதியை எழுதுவது வாயிலாக அவர் செய்யப்போகும் செயல் தெய்வ நிந்தனையை ஒத்தது. தெய்வங்களை தெய்வங்களாகச் சித்திரிக்க வேண்டும் என்றால் புராணங்கள்தான் எழுதவேண்டும். தெய்வங்களை மானிடர் நிலைக்கு இறக்கினால்தான் இலக்கியம், காவியம் எல்லாம் படைக்க முடியும். வால்மீகி காலத்திலிருந்தே இதுதான் வழமை.

 

இரண்டாவது கவலை ஜெயின் படைப்பாளுமை தொடர்பானது. இவ்வாறான ப்ரும்மாண்ட முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் பலரும் அதனை முடித்தது இல்லை. ஒருவேளை முடித்திருந்தாலும் அத்துடன் அவர்களது பேனா முனையின் கூர் மழுங்கிப்போயிருக்கும். ஆனால் கொஞ்சமாவது படைப்பாற்றல் உள்ள நபரால் மஹாபாரதத்தை வாசித்த பிறகு சும்மா இருக்கமுடியாது. நல்ல பாட்டைக் கேட்டால் முணுமுணுக்கத் தோன்றாமல் இருக்குமா? அதனால் ஜெயின் எண்ணம் புரிந்தது.

 

முதல் விஷயம் நினைத்தது போலத்தான் நடந்தது. ஆனால் எதிர்பாராத ஒரு விஷயமும் நடந்தது. ஜெ ‘வெண்முரசு’ எழுதத் தொடங்கியதும் மஹாபாரதம் மீது பலருக்கும் ஆர்வம் வந்து வியாச பாரதத்தின் மொழிபெயர்ப்புகளைத் தேடத் தொடங்கினர். பழைய கும்பகோணம் பதிப்பின் மென் பிரதி உலவத் தொடங்கியது. பிறகு அது புதிதாக அச்சிடப்பட்டது. அருட்செல்வப் பேரரசனின் மொழிபெயர்ப்பும் பலரைச் சென்றடைந்தது. இந்த அலையை பயன்படுத்தி மூல நூலை அனைவரிடமும் எடுத்துச் செல்வது ஆத்திகர் வேலை.

 

மற்றொரு பதற்றம் அர்த்தமற்றதானது. ‘வெண்முர’சை முழுமையாக எழுதி முடித்ததும் அல்லாமல் தனது எழுத்தாற்றலுக்கு எந்தப் பாதிப்பும் வரவில்லை என்று அதற்குப் பிறகு நூற்றுக்கணக்காக படைப்புகளை எழுதி ஜெ நிறுவிவிட்டார். ஜெ எழுதிக்கொண்டிருந்த காலத்தில் அப்படைப்பை முழுமையாக மறுதலிக்கும், அதன் அபாயங்களை உரத்துச் சொல்லும் நான் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். எனது மத நம்பிக்கையின் அடிப்படையில் ‘வெண்முர’சை நான் முழுதாக நிராகரிக்கிறேன் என்பதும் அதற்கு எதிராக பரப்புரை செய்கிறேன் என்பதும் ஜெக்கு நன்றாகவே தெரியும். இக்காலகட்டத்தில் அவர் சிறிது பாராமுகமாக இருந்திருந்தால்கூட நான் அவரைச் சந்திப்பதைத் தவிர்த்திருப்பேன். ஆனால் ஜெ அதனைச் செய்யவில்லை. ‘வெண்முர’சைத் தவிர்த்து பிற விஷயங்களைக் குறித்து என்னுடன் தொடர்ந்து உரையாடினார்.

 

மேலும் மதத்தை மார்க்சியச் சட்டகத்தில் வைத்துப் பார்ப்பவர் ஜெ. ஆனால் மதத்தை மத நூல்கள், சடங்குகள் மற்றும் ஆப்த வாக்கியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் புரிந்துகொள்பவன் நான். அவரது பல கட்டுரைகளுக்கு பேச்சிலும் எழுத்திலும் எதிர்வினையாற்றியிருக்கிறேன். சிறிதும் தயக்கம் இல்லாமல் அவற்றை ஜெ ஆவணப்படுத்தியுள்ளார். Alexi Sanderson என்னும் ஆய்வாளர் சண்டிகேச்வரர் வழிபாடு என்பது முன்னர் தனி மதமாக இருந்து பிறகு சைவத்துடன் இணைந்தது என்ற வாதத்தை ஒரு கட்டுரையில் வைத்திருப்பார். அந்த வாதத்தின் அடிப்படையில் ஜெ ஒரு பதிவு / பதில் எழுதியிருந்தார். அதனை மறுத்து தரவுகளுடன் நான் எழுதிய கடிதத்தை அவரே தட்டச்சு செய்து தனது இணையதளத்தில் வெளியிட்டார். இன்றளவும் Sanderson கருத்தை இந்த விஷயத்தில் மறுக்கும் ஒரே கட்டுரை ஜெ வெளியிட்ட அந்தக் கடிதம்தான். எதிர் தரப்புகளை சார்ந்தவர்கள்கூட பகையின்றி உரையாடலாம் என ஜெ நிரூபித்தார்.

 

சமூக ஊடகங்களுக்குள் நுழைந்த உடனே ஜெ மீது கடும் கசப்பு இருக்கும் நபர்கள் பலர் இருப்பதைக் கண்டேன். அவர்களில் பலர் ஒரு காலத்தில் அவரை குருவே, தந்தையே என்றேல்லாம் அழைத்தவர்கள். கூத்தாடிக் கூத்தாடி இட்டு உடைப்பது என்பதுதானே நம்மவர்கள் வழக்கம். அதற்கு ஜெ மட்டும் விதிவிலக்காக முடியுமா. “ஜெயன் என்பவர் எழுதிய ‘வெற்றித்திருநகர்’ என்னும் தொடரின் தாக்கத்தால்தான் எனது வாழ்க்கையை இந்த அரசியல் இயக்கத்திற்கு அர்ப்பணித்தேன்” என்று சொல்லியவர்கள்தான் ஜெ கசப்பான சில உண்மைகளைச் சொன்னதும் அவரைத் துரோகி என்று முத்திரை குத்தி தங்களது இயக்க விசுவாசத்தை நிரூபித்துக்கொண்டனர் அதிகம் ஏசுபவர்கள் ஒரு காலத்தில் அவரைப் போற்றிப் புகழ்ந்தவர்கள்தான்.

 

இது, ஜெ என்றில்லை, அனைத்து காத்திரமான படைப்பாளிகளும் எதிர்கொள்ளும் பிரச்சனைதான். ஒரு நல்ல படைப்பாளி என்பவன் சன்னதம் கொண்டாடும் மருளாடியை ஒத்தவன்.

 

சன்னதம் கொள்ளும் வேளையைத்தவிர பிற நேரங்களில் கோமரம் சாதாரண மனிதன்தான். ஆனாலும் அவரை மரியாதையுடன் நடத்துவதே பழங்குடிப் பண்பு. படைப்பு விசை என்பது சன்னதத்தை ஒத்தது. எழுத்தில் இருக்கும் நபர் வேறு என்ற புரிதல் வாசகர்களுக்கு இருக்கவேண்டும். சாதாரண வேளைகளிலும் கோமரத்தாடிக்குச் சில சலுகைகளைக் கொடுப்பது போல எழுத்தாளனுக்கும் கொடுத்தே ஆகவேண்டும். தந்தையை / குருவை / உற்ற தோழனைப்போல எல்லாம் ஓர் எழுத்தாளனை உருமாற்றி வித்தை காட்டச் சொன்னால் கால ஓட்டத்தில் கசப்புதான் எஞ்சும். இப்படித்தான் பதில் வரவேண்டும் என்று சொல்லிச் சொல்ல வைத்தால் அது அருள்வாக்காக இருக்காது. அதே விஷயம் படைப்பிற்கும் பொருந்தும்.

 

இதுவரை பிறர் ஆடாத அளவிற்குச் சன்னதம் கொண்டு ஆடும் ஜெக்கு வாழ்த்துக்கள்

அநாபயனின் தந்தைக்கு நடந்த பிரிவுபசார விழாவில் பேச திட்டமிட்டது ……

நண்பர்களே , இந்த தருணத்தில எனது நண்பரான அநாபயனின் தந்தையை குறித்து நிறைய விஷயங்கள் உண்டு . ஆனால் எதுவுமே பேசக் கூடாது என்கிறார் நண்பர் .அவருக்கு உத்தமர்களுக்கே உரிய கூச்சம் . பிறருக்கு , ஏன் எனக்கே கூட அவரது அருஞ்செயல்களை உரக்க சொல்வதில் தயக்கம் இருக்கிறது . ஏன் எனில் அவற்றை சொல்லும் போது எங்கள் கீழ்மைகளையும் இயலாமைகளையும் சேர்த்தே சொல்ல வேண்டியிருக்கும் .இருந்தாலும் இத்தகைய ஆசிரியர்களும் இருந்தார்கள் என்று ஆவணப்படுத்துவதற்காவது இதனை எழுத வேண்டும் .அவரது உண்மையான பெயரை வெளிப்படுத்தாமல் இப்படியாவது எழுத வேண்டும் .

அநாபயனது தந்தையுடன் சுமார் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் ஏற்பட்டது . அவர் பணிபுரிந்த உயர் கல்வி நிறுவனம் தான் எங்கள் இருவருக்கும் பொதுப்புள்ளி. அறிமுகமான சில நாட்களிலேயே நெருக்கமான நண்பர்களாகி விட்டோம் . வாசிப்பு பழக்கம் , சைவ உணவு , வரலாறு மற்றும் ஆன்மீகத்தில் உள்ள ஈடுபாடு ஆகியவை இதற்கான காரணங்களாக இருக்கலாம் .அநாபயனுது தந்தை எனக்கு நண்பர் மட்டுமல்ல , பல விதங்களில் ஆதர்ச ஆளுமையும் கூட.

உயர் கல்வி நிறுவனங்களில் அரசியல் சரித்தன்மைகளை பேசும் , தங்களை செயற்பாட்டாளர்களாக காட்டிக் கொள்ளும் ஆசிரியர்கள் கணிசமான எண்ணிக்கையில் உண்டு . ஆனால் இவர்களில் பலர் கூச்சல் இடுவதில் 10% ஊக்கத்தை கூட கல்வி / ஆய்வு பணிகளில் காட்டமாட்டார்கள். நண்பர் அப்படிப்பட்டவர் அல்ல , சத்தமே இல்லாமல் நூற்றுக்கணக்கான மாணவர்களது வாழ்க்கையை தனது கல்விப் பணி மற்றும் ஆய்வுகள் வழியாகவே மேம்படுத்தியவர். வெற்றுக் கூச்சல்ல்களால் அல்ல , தனது செயல்களால் மாணவர்களுக்கு முன் மாதிரியாக இருந்தவர் .

ஆசிரியர்கள் பலருக்கு நிர்வாக பணிகள் / பதவிகள் மீது மிகுந்து ஈடுபாடு உண்டு . இவற்றில் பல நிர்வாக பதவிகள் தலைமை குமாஸ்தாக்களுக்கு ஏற்றவை . பள்ளி இறுதி படித்த ஓரளவு அனுபவம் உள்ள ஒரு நபரே கூட இப்பதவிகளில் அமர்ந்து மிகத் திறமையாக நிர்வாகம் செய்ய முடியும் . இன்றளவும் பல மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களே பதிவாளர் போன்ற பதவிகளில் உள்ளனர் . வெளி நாடுகளில் திறமையற்ற ஆசிரியர்களைத்தான் நிர்வாகப் பணிகளுக்கு தள்ளி விடுவார்கள் . இங்கு நிலவரம் வேறு மாதிரி. முது முனைவர் பட்டம் பெற்ற பலரும் கூட வகுப்பும் எடுக்காமல் ஆய்வும் செய்யாமல் காய்கறி கணக்கை எழுதிக் கொண்டு இருப்பார்கள் .நம்மவர்களின அதிகார ருசி அப்படிப்பட்டது . பேராசிரியராக இருந்து கற்றுக்கொள்வதிலும் கற்பிப்பவதிலும் கிடைக்காத பரமானந்தம் பத்து பேர் மீது அதிகாரம் செலுத்துவதின் வாயிலாக இவர்களுக்கு கிடைக்கிறது .

அநாபயனது தந்தை ஒரு நாளும் இந்த மாய வலையில் சிக்கிக்கொண்டதில்லை .அதிகாரத்தின் பின்னால் ஓடியதில்லை . தனது வகுப்பறைக்குள் கூட அதிகாரத் தொனியில் பேசியதில்லை . அவரது நிதானம் பண்பட்ட ஒன்று ; பயத்தின் / நமக்கேள் வம்பு என்ற மனநிலையின் விளைவு அல்ல .அதனால் தான் சில நேரங்களில் மாணவர்கள் நலனுக்காக , வேறு வழியில்லாத போது , நிர்வாகியாகவும் செயல்பட்டார் . அவ்வாறு செயல்பட்ட காலத்தில் அவர் செய்த சீர்திருத்தங்கள் ஏராளம் .பணிக்கு சென்ற ஒராண்டுக்கு உள்ளாகவே விடுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் . அக்காலக்கட்டத்தில் மாணவர் விடுதியில் ஏராளமான பிரச்சனைகள் இருந்தன . அதிகார பலம் மிக்க ஒப்பந்ததாரர்கள் வைத்ததே சட்டமாக இருந்தது . மாணவர்கள் உணவில் புழுவும் பூச்சியும் நெளிவது சாதாரணமான விஷயமாக இருந்தது . உள்ளூர் ஆசிரியர்கள் யாருக்கும் அதை தட்டிக் கேட்கும் துணிவு இருக்கவில்லை . எதற்கு தேவையில்லாத வம்பு என்ற எண்ணமும் பொதுவாகவே அதிகாரத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டால பல்லைக்காட்டும் குணமும் தான் காரணம். பிரச்சனை உச்சக்கட்டத்திற்கு சென்ற நேரத்தில் ஒரு பலியாடை அனுப்புவது போலத்தான் அநாபயனது தந்தையை காப்பாளராக நியமித்தனர் . வந்து ஒரு வாரத்திற்குள் துணிந்து உணவு ஒப்பந்தம் முதலியவற்றில் இருக்கும் கொடூர மோசடிகளை ஆவணப்படுத்தி அந்த ஒப்பந்தங்களை ரத்து செய்தார் .அதன் விளைவாக அவர் சந்தித்த்த எதிர்ப்புகள் ஏராளம் .வீடு புகுந்து தாக்குவோம் என்று மிரட்டினார்கள் . பிணையில் வர முடியாத வழக்கில் உள்ளே தள்ளுவோம் என்றார்கள். எந்த பின்னணியும் இல்லாமல் சிறு குழந்தையான அநாபயனுடனும் மனைவியுடனும் முன் பின் தெரியாத ஊரில் வாழ்ந்த நண்பர் இந்த மிரட்டல்களை பொருட்டுத்தாமல் நடவடிக்கைகளை தொடர்ந்தார் .சக பணியாளர்களில் ஓரிருவர் மட்டுமே அவருக்கு ரகசியமாகவேனும் ஆறுதல் சொன்னார்கள் . பழைய ஒப்பந்தம் துண்டிக்கப்படு புதிய ஒப்பந்ததாரர் பொறுப்பு எடுப்பதற்கு இடையில் உள்ள காலத்தில் தனது சொந்த சம்பளத்தில் இருந்து மாணவர்களுக்கு உணவு வழங்கினார் . ஒரு வழியாக விடுதி நிலை சீர்பட்டது . முதல் தலைமுறையாக கல்லூரிக்கு வந்த மாணவர்களும் ஒடுக்கப்படட சமூகங்களில் இருந்த வந்த மாணவர்கள் பலரும் வெற்றிகரமாக தங்களது கல்லூரிக் கல்வியை படித்து முடிக்க நண்பரது செயல் காரணமாக இருந்தது . அவர் பொறுப்பில் இருந்த காலம் வரை விடுதியில் வசித்த மாணவர்கள் நிம்மதியாக இருந்தனர்

Computatmal Fluid Dynamics துறையில் தான் அதாபயனது தந்தை ஆய்வு செய்து வந்தார் . கணித அறிவு , நிரலி எழுதும் ஆற்றல் ஆகியவற்றுடன் துறை சார்ந்த ஆறிவும் கடும் உழைப்பும் தேவைப்படும் ஆய்வினை மேற்கொண்டார் . உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியப்பணியை செய்து கொண்டே முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடும் சிலர் சாமர்த்தியமாக செயல்படுவதாக நினைத்துக்கொண்டு ஒரு அற்ப செயலை செய்வார்கள் அவர்கள் ஆய்வினை துண்டு துண்டாக பிரித்து இளங்கலை/முதுகலை மாணவர்களுக்க project ஆக கொடுப்பார்கள். அவர்களால் செய்யப்பட்ட வேலையை தொகுத்து தங்கள் ஆய்வேடாக மாற்றி விடுவார்கள் .இந்த அறிவு திருட்டை smart work என்று கருதுகிறவர்கள் இடையே தான் கடும் பணிப்பளு மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு இடையிலும் அநாபயனது தந்தை மிக முக்கியமான ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார் .

No good things unpunished என்பது தானே நிதர்சனம். அதிலிருந்து அநாபயனது தந்தை மட்டும் தப்ப முடியுமா என்ன ? அவரும் சிக்கி சீரழிந்தார் . எழுத்துத் தேர்விலும் நேர்முகத்தேர்விலும் முதலிடம் பெற்று பணியில் சேர்ந்தவர் பதிமூன்று வருடங்கள் எந்த ஊதிய உயர்வும் கொடுக்கப்படாமல் ஏறத்தாழ தற்காலிக ஊழியரைப் போல நடத்தப்பட்டார் . தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் போது பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட தர வரிசை பட்டியின் அடிப்படையில் இருக்க வேண்டும் . ஆனால் இந்த நிறுவனத்தில் “Last to come first to go ” என்னும் கொள்கை கண்மூடித்தனமாக பின்பற்றப்பட்டது . ஒரே நேரத்தில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தரவரிசையில் கடைசியில் இருப்பவன் ஆயினும் காலை பத்து மணிக்கு வேலைக்கு சேர்ந்து விட்டான் எனில் அவனுக்கு பணிப்பாதுகாப்பு அதிகம் . தரவரிசை பட்டியலில் முதலில் இருப்பவன் அதே தினம் மாலையில் வேலைக்கு சேர்ந்தால் அவன் தலை தான் முதலில் உருளும். எல்லா இடத்திலும் முதல் தரத்தில் இருப்பவர்களுக்கு தானே பிரச்சனை. அநாபயனது தந்தைக்கும் இதே பிரச்சனை ஏற்பட்டது தலைக்கு மேல் தொங்கும் கத்தியுடன் 13 வருடங்கள் பணியாற்றினார் . அதற்கிடையே தான் மாணவர்களுக்காக இத்தனை போராட்டங்களும்.

பொதுவாகவே பல ஆசிரியர்களுக்கும் வரும்படி போதவில்லை என்ற எண்ணம் உண்டு . கற்பித்தல் அல்லாத பணிகள் வாயிலாக அதிகம் வரும்படி ஈட்ட வழியுண்டா என்று முயற்சித்தவாறே இருப்பார்கள் . ஏதாவது தேர்வுப் பணி விடைத்தாள் திருத்துதல் ஆகியவற்றில் சில ஆயிரங்கள் வரும் என்றால் அதில் மிகுந்த ஈடுபாடு காட்டுவார்கள் . அநாபயனது தந்தையிடம் அத்தகைய ஒரு “வெப்ராளத்தை ” ( பதற்றம் மிகுந்த ஆர்வத்தை ) நான் ஒரு நாளும் கண்டதில்லை . இத்தனைக்கும் , ஏற்கனவே சொன்னது போல அவருக்கு பல வருடங்களாக ஊதிய உயர்வு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை . வருடங்கள் செல்ல செல்ல அநாபயனுக்கான மருத்துவ செலவுகளும் அதிகரித்து வந்தன . அநாபயனை 24 மணி நேரமும் கவனிக்க ஒரு நபர் தேவை என்பதால் நண்பரது மனைவியும் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. அதிக வருவாயை தேடுவதற்கான எல்லா நியாயங்களும் நண்பருக்கு இருந்தது . இருப்பினும் அவர் அதில் அதீத ஆர்வம் காட்டவில்லை . மிக எளிமையான வாழ்க்கையை கட்டுக்கோப்பாக வாழ்ந்தார் . பத்து வருடங்களுக்கு ஒரு முறை ஒரு புத்தகத்தை கூட வாங்காத , வாசிக்காத பேராசிரியர்கள் பலர் இருக்கும் அதே உலகில் தான் இத்தனை பொருளதார சிக்கல்களுக்கும் இடையே மாதம் குறைந்தது ஒரு புத்தகத்தையாவது வாங்கும் , இரண்டு மூன்று புத்தகங்களையாவது வாசிக்கும் நண்பரும் இருக்கிறார் என்பது ஆச்சரியகரமானது . நண்பரது வாழ்க்கையை பார்த்து ஒரு விஷயத்தை புரிந்து கொண்டேன். வாழ்வில் திருப்தி என்பதற்கும் ஈட்டும் பொருளுக்கும் எந்த தொடர்பும் இல்லை . மிக அடிப்படையான ஊதியத்தில் கூட ஒருவர் திருப்தியாக வாழ முடியும் என்பதையும் உணர்ந்தேன் .

நண்பர் மாணவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர் . இதனாலேயே சக ஆசிரியர்களுக்கும் அவருக்கும் இடையே பல உரசல்கள் ஏற்பட்டுள்ளன . பொதுவாக ஆசிரியர்கள் மாணவர்களின் பொருட்டு சக ஆசிரியர்களை பகைத்துக்கொள்ள மாட்டார்கள் . மாணவன் ஓரிரு வருடங்களில் கல்வி நிறுவனத்தை விட்டு வெளியேறிவிடுவான் . ஆனால் சக ஆசிரியாகளுடன் வாழ்க்கை முழுக்க பணியாற்ற வேண்டியிருக்கும் என்ற எண்ணம் தான் காரணம் . இந்த சுயநல நோக்கால் தான் பல மாணவ மாணவியர் பாதிக்கப்படுகிறார்கள் . நண்பா ஒரு நாளும் அப்படி சிந்தித்ததில்லை. அறத்தின் பக்கமே அயராது நின்றார் . அவர் தனிமைப்படுத்தப்பட்ட போதும் கூட மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் குரல் கொடுக்க தயங்கியதே இல்லை .

நண்பர் பல விதங்களில் ஒரு ஆதர்ச மனிதர். நம்மில் பலரும் இது போலத்தான் வாழ வேண்டும் என்று ஏதோ ஒரு காலத்தில் எண்ணியிருப்போம் . தனிப்பட்ட பிரச்சனைகளாலும் சபலங்களாலும் சமரசங்கள் பலவற்றை செய்து கடைசியில் எவனும் யோக்கியன் இல்லை என்று நம்மை நாமே சமாதனப்படுத்திக் கொண்டு பிழைப்பை நடத்துகிறோம் . இத்தகைய சூழலில் தான் நண்பரை போன்றவர்களது வாழ்க்கையையும் போரட்டங்களையும் ஆவணப்படுத்துவது அவசியமான விஷயமாகிறது .

அதிகார மையங்களுக்கு எதிராக எந்த வித சமரசங்களும் செய்து கொள்ளாமல் நண்பரால் தொடர்ந்து போராட முடிந்ததற்கு காரணம் அவர் தவம் போல் பின்பற்றிய தனி மனித ஒழுக்கமே. எந்த ஒரு விஷயத்திற்கும் யாரிடமும் இரைஞ்ச கூடாது , சலுகைகளை கேட்கக் கூடாது என்பதில் மிகத்தெளிவாக இருந்தார் . வகுப்புகளுக்கு ஒரு நாளும் அவர் தாமதமாக சென்றதில்லை . விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள் என்று உயரதிகாரிகள் சொன்னால் கூட அவசியமற்ற விடுப்புக்களை எடுத்ததில்லை . தன் மீது எந்த புகாரும் வராத அளவிற்கு எந்த பக்கச்சாய்வும் இல்லாமல் பணியாற்றினார் . அந்த நேர்மையும் ஒழுக்கமும் தான் அவருக்கு துணிச்சலை தந்தது . பிறருக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் முதலில் தங்களது தனி வாழ்க்கையை அப்பழுக்கற்றதாக மாற்றிக்கொள்ள வேண்டும் . இல்லாவிட்டால் பின்வாங்க வேண்டியது இருக்கும்.

எங்கள் ஊருக்கு நண்பரின் வருகை ஒரு வரம் போல இருந்தது , இன்று நண்பர் இட மாற்றும் பெற்று பெரு நகரத்தை நோக்கி செல்கிறார் . இம்முறை அவரது குடும்பத்துடன் அவருக்கு வலு சேர்க்க அவர் அடையாளம் கண்டுகொண்ட எழுத்தாற்றலும் இருக்கிறது . செல்லுமிடத்திலும் அவர் ஒரு உதாரண ஆசிரியராக பலருக்கு வழிகாட்டுவார் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை .

அநாபயனது தந்தைக்கு வாழ்த்துக்கள்.

சாமியார்களை குறை சொல்லலாமா ?

சில மாதங்கள் முன்று ஒரு சாமியாரை சந்தித்தேன் . ஓரிரு நூல்களை பெறுவதற்காகத்தான் சந்திப்பு .சாமியார் என்னிடம் ” நான் தினசரி லோட்டா லோட்டாவா காஃபி குடிக்கிறேன் .சரியானபடி பிக்ஷை எடுக்க முடியாத காலத்தில தொடங்கின வழக்கம் .அப்புறம் ஒரு பாபா கும்பாபிஷேகத்துக்கு கடும் நெருக்கடி காரணமா போனேன் . இது தொடர்பா நீங்க ,என்னைக்காவது ஏதாவது என்னை கண்டிச்சு எழுதினா எனக்கும் ஒரு காப்பி அனுப்பி வைங்க” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் . சாமியார் எல்லா பதிவுகளையும் வாசிக்கிறார் என்று புரிந்தது . இன்று காலையில் கூட ஒரு நண்பருடன் இது போன்ற வேறு ஒரு விஷயம் தொடர்பாக முரண்பட நேர்ந்தது .

சாமியாரோ சம்சாரியோ அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன செய்தாலும் அது அவரவர் விஷயம் .அதில் தலையிட்டு கருத்து சொல்ல வேண்டிய எந்த தேவையும் இல்லை . இருந்தாலும் ஒரு சில நேரங்களில் சில விஷயங்களை சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது .

அ) செய்யும் தவறை நியாயப்படுத்தும் போது…

துறவற நியமத்திற்கு விரோதமான செயல்களை செய்து விட்டு அது சரி தான் என்று நியாயப்படுத்தும் போது அதனை யாராவது ஒருவர் தட்டிக் கேட்க வேண்டியிருக்கிறது .காஃபி குடிப்பது சிறிய தவறு தான் . அதில் நாம் தலையிட வேண்டியதில்லை . ஆனால் காஃபி வேதத்தில் இருக்கிறது என்று தொடங்கினால் அதனை கண்டிக்காமல் இருக்க முடியாது

ஆ) மிரட்டப்படக்கூடிய சூழலை உருவாக்கும் போது ….

ஒரு சாமியாரின் அந்தரங்கத்தை அவரை சாராதவர்கள் ஆராய வேண்டிய தேவை இல்லை . ஆனால் அவரது அந்தரங்க தவறுகளை வெளிப்படுத்திவிடுவேன் என்று யாராவது மிரட்டி அவரை தங்களது மத விரோத / மக்கள் விரோத திட்டத்திற்கு பகடைக்காயாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது .சாமியார் இத்தகைய சூழலை உருவாக்க வாய்ப்பு இருக்கிறது என்றால் விஷயத்தை பொதுவில் சொல்லாமல் இருக்க முடியாது .

இ) துறவற வாழ்க்கை / மதத்தில் அறவே பிடிப்பற்றவர் எனில் ….

சிலருக்கு சுத்தமாக கடவுள் நம்பிக்கை இருக்காது . இதை வெளிக்காட்டாமல் ஒரு நிறுவனமாக மட்டும் ஆசிரமங்களை நடத்த முயல்வர் .இவர்களது நம்பிக்கையின்மை அனைவரையும் பாதிக்கும் . ஆகையால் இவர்களை அம்பலப்படுத்த வேண்டும் .

ஈ) பெருந்தவறுகளை செய்யும் போது …

ஒரு புலனாய்வு அதிகாரி சீருடையே அணிவதில்லை என்றால் அது தவறு தான் .ஆனால் அதற்காக அவரை பணிநீக்கம் செய்வது இல்லை .ஆனால் லஞ்சம் வாங்குகிறார் என்று தெரிந்தால் அந்த நொடியயே அவர் வெளியேற்றப்பட வேண்டும் . அதே போல துறவறத்தின் அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் செயல்படும் துறவிகளை கண்டிக்காமல் இருக்க முடியாது (சிறு ஆசார மீறல்களும் அபாயகரமானவையே .அவை பெரும் தவறுகளுக்கு பாதை அமைத்து விடும் . இருப்பினும் சீறு மீறல்களுக்கு கடும் எதிர்வினை தேவையில்லை )

உ) ஆப்த தன்மையை / அமானுட தன்மையை கேள்விக்குள்ளாக்க …..

ஒரு சாமியார் அவதார புருஷனாக முன் வைக்கப்படும் போது அவர் ஆப் தரும் ஆகிறார் . அவ்வாறான சூழ்நிலையில் அவர் செய்ததது சொன்னது எல்லாம் ப்ரமாணம் என்று பலரும் வாதிடுவர் . உதாரணம் :அவதார புருஷரான ஒரு சாமியாரது அன்ன தானத்தில் தினசரி வெங்காயம் இருப்பதாலேயே வெங்காயம் சாத்வீகமானது . இத்தகைய வாதங்களை தடுக்க சாமியார் அமானுடர் அல்ல என்று நிறுவ வேண்டி வருகிறது . சாதாரண மானுடர்களைப் போல அவரும் தவறுகளை செய்துள்ளார் என்று சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது

ஊ) இறுதியாக …..நம்பிக்கை சிதைவுகளை தவிர்க்க ….

அபிமானம் காரணமாக பூனையை புலி என்று சொல்வது தொன்று தொட்டு வரும் வழக்கமே .சில நேரங்களில் இது கைமீறி செல்கிறது .அப்பாவிகள் பலரும் இந்த அதீத புகழ்ச்சியை புரிந்து கொள்ளாமல் நெக்குருகி பின்னர் உண்மையை அறிய வரும்போது விரக்தி அடைகின்றனர் .இதனால் ஒட்டு மொத்தமாகவே மதத்தின் மீது வெறுப்பு வருகிறது . மகான்களைக் கூட அவநம்பிக்கையுடன் பார்க்கும் சூழல் ஏற்படுகிறது . இத்தகைய நம்பிக்கை சிதைவு அவர்களது ஆன்மீக வாழ்க்கையை சீர் குலைக்கிறது .எனவே இது போன்ற நேரங்களில் லேசாக கள நிலவரத்தை சொல்ல வேண்டியிருக்கிறது .

ஒரு சில உதாரணங்களை பார்ப்போம் .ஒரு சாமியார் பல கோடி ரூபாய் செலவில் ஒரு கோவிலுக்கு திருப்பணி செய்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் . இது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான் .ஆனால் சாமியாரின் சிஷ்யர்கள் இதனை ஒரு தியாக வரலாறாக எழுதுகிறார்கள் . இதனைக் கண்டு அடுத்த தலைமுறையை சார்ந்த பலரும் அவரை தெய்வப்பிறவியாக கொண்டாடுகின்றனர் .ஒரு நாள் இந்த இளைஞர்களுக்கு ஒரு தகவல் தெரியவருகிறது . மேற்படி திருப்பணிக்கு என்ற பெயரில் மடத்திற்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வந்த விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. எதற்கும் கணக்கு வழக்கும் இல்லை . இது தெரிந்த நிமிடமே சாமியார் மீதுள்ள மதிப்பு சரியும் .ஒட்டு மொத்தமாக ஒரு வித அவ நம்பிக்கை ஏற்படும் . மனிதர்களை மனிதர்களாக முன் வைத்தால் இந்த பிரச்சனை வராது .

அதனால் தான் சாதாரண சாமியார்கள் / மடாதிபதிகளின் வாழ்க்கையை கருப்பு x வெள்ளையாக முன் வைக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன் . பிறரைப் போல , இவர்களது வாழ்க்கையிலும் உச்சங்களும் உண்டு , பாதாளங்களும் உண்டு . மறைந்த புகழ்பெற்ற துறவி – பாகவதர் குறித்த சில நினைவுகளை நண்பர் ஒரு பகிர்ந்து கொண்டார் . இந்த துறவிக்கு மூக்குப் பொடி இடும் வழக்கம் உண்டு . பொடியை 10/15 பவுன் கனம் உள்ள தங்க டப்பாவில் வைத்து பயன்படுத்துவாராம் .அந்த தங்க டப்பா ஒரு பக்தரின் அன்பளிப்பு .ஒரு நாள் சாமியார் பொடியிட்டுக் கொண்டிருந்த போது மடத்து ஊழியர் ஒருவர் தனது மகளின் திருமண செலவிற்கு மட நிர்வாகிகளிடம் உதவி கேட்டதாகவும் யாரும் எதுவும் தரவில்லை என்றும் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் .அந்த நொடியே தனது கையில் இருந்த தனக்கு பிரியமான தங்க பொடி டப்பாவை கொடுத்து அதனை விற்று திருமண செலவை செய்யுமாறு சொல்லியுள்ளார் .ஒரு கணம் கூட யோசிக்கவில்லை .மூக்குப் பொடி பழக்கம் என்பது தவறானது . முன் பின் யோசிக்காமல் தானம் செய்தது போற்றத்தக்கது .இது இரண்டும் இணைந்தது தான் அந்த துறவியின் வாழ்க்கை . பலருடைய வாழ்க்கையும் இப்படிப்பட்டதே . இதில் எதை மறைத்தாலும் நியாயமாகாது . உள்ளதை உள்ளபடி சொல்வது மட்டுமே உத்தமமான காரியம் .

ஆகமக்கோவில்களும் ஆதிசங்கரர் சிலைகளும்

சைவாகம / வைணவாகம கோவில்களில் ஆதிசங்கரது சிலைகளை பிரதிஷ்டிப்பது ,சந்த்ரசேகரேந்திர சரஸ்வதியின் சிலையை பிரதிஷ்டிப்பது/ பிரதிஷ்டிப்பதற்காக முயல்வது போன்ற செயல்கள் அதிகரிப்பதை தொடர்ந்து அதற்கு எதிராக பல்வேறு சம்ப்ரதாயங்களை சார்ந்தவர்களும் கண்டனக்குரல்களை எழுப்பி வருகின்றனர் . இந்நிலையில் பேராசிரியர் , சங்கரநாராயணன் இவ்வகையான பிரதிஷ்டைகள் எவ்வகையில் ஆகம விரோதம் என சைவர்கள் தீர்மானிக்கிறார்கள் ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் .பேராசிரியர் எழுப்பியுள்ள ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியாக பதில் அளித்திருக்கிறேன் .

1) ஆதிசங்கரர் பிரதிஷ்டை ஆகம விரோதம் என சொல்லும் ஆகம ஸ்லோகம் ஏதாவது உண்டா ?

இந்த கேள்விக்கு இரண்டு பதில்கள் உள்ளன. முதல் விஷயம் என்னவென்றால் லெளகீமாகவே புதிதாக உரிமை கொண்டாடுபவர்கள தான் தங்கள் தரப்பை நியாயப்படுத்த வேண்டும் , அனுபவத்துக்கொண்டிருக்கும் தரப்பு தனது உரிமையை மீண்டும் மீண்டும் நிறுவ வேண்டியது இல்லை. நீங்கள் 30 வருடங்களாக உங்கள் சொந்த வீட்டில் குடி இருக்கிறீர்கள் . திடீரென்று ஒருவர் வந்து எனக்கும் இந்த வீட்டில் பங்கு உண்டு என்று சொன்னால் , புதிதாக வந்தவர் தான் தனது உரிமையை ஆவண ரீதியாக நிறுவ வேண்டும் .ஏன் எனக்கு உரிமை இல்லை என்று நீ கூறு. உன் பத்திரத்தை காட்டு என்று உங்களிடம் பஞ்சாயத்து செய்ய முடியாது . இந்த அடிப்படை விதி இங்கும் பொருந்தும் .சங்கர பிரதிஷ்டைக்கு வழி இல்லை என்று நிறுவும் ஆகம வரிகளை ஆகம தரப்பு சொல்ல வேண்டியதில்லை . ஆதிசங்கரர் பிரதிஷ்டைக்கு அனுமதி உண்டு என்பதோடு அது இன்றியமையாதது என்று காஞ்சி மடத்தவர் தான் நிறுவ வேண்டும் .

இரண்டாவதாகவிதி நிஷேகம் குறித்து அறிந்தவர்களுக்கு ஆகமம் , ஸ்ம்ருதி எல்லாம் எப்படி வழிகாட்டும் என்று தெளிவாகவே தெரியும் . Letter of Law , Spirit of Law ஆகிய இரண்டும் முக்கியமானவை .ஒரு குறிப்பிட்ட விஷயம் விலக்கப்பட்டிருக்கிறது என்ற நேரடியான வார்த்தை இருக்க வேண்டியது இல்லை .அந்நூலின் / அத்தத்துவத்தின் அடிப்படை போக்கிற்கு விரோதமானது எனில் அது விலக்கப்பட்டதே என்பது அடிப்படையான விஷயம். எந்த ஸ்ம்ருதியிலும் காஃபி என்பது நேரடியாக விலக்கப்பட்ட விஷயம் அல்ல .பிறகு ஏன் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அதனை எதிர்த்தார் ? எனவே ஆதி சங்கரரை/மஹாபெரியவரை ஶிவாலயத்தில் வைக்கக்கூடாது என்று அறுதியிட்டு கூறும் ஸ்லோகங்கள் உண்டா என்று கேட்பதில் பயன் இல்லை.

2) உத்தர காமிகம் அஜிதம் ஆகிய ஆகமங்களில் உள்ள பக்த பிரதிஷ்டை விதிப்படி பைரவாதி பிரிவுகளை சார்ந்தவர்களுக்கு சிலை வைக்கலாம் என்றிருக்கிறதே, அதில் வரும் பைரவாதி என்பதின் கீழ் அத்வைதத்தையும் கொண்டு வந்து சங்கரர் சிலையை வைக்கக் கூடாதா என்ற கேள்வியை பேராசிரியர் எழுப்புகிறார்.

உத்தர காமிக ஆகமம் என்ற பெயரில் இப்போது பொதுவெளியில் புழங்கும் நூலின் நம்பகத்தன்மை எத்தகையது என்பது ஆகம வல்லுனர்கள் அனைவருக்கும் தெரிந்ததே , பேராசிரியருக்கு தெரியாமல் இருக்காது , இருப்பினும் அவர் இந்த நூலில் உள்ள பத்ததி தனது தரப்பிற்கு வலு சேர்க்கும் என்று எண்ணி இப்போது உள்ள பதிப்பை வாதித்திற்கு கொண்டு வருகிறார் . நானும் பதிப்பின் நம்பகத்தன்மைக்குள் போகாமல் வேறு வழிகளில் பேராசிரியரின் கேள்வியில் உள்ள அபத்தத்தை விளக்குகிறேன் .

முதலில் அந்த பத்ததி ஶிவபக்தர்களுக்கானது .ஆதி சங்கரரையோ ஆவர் வழி வந்த துறவிகளையோ எந்த வகையிலும் ஶிவ பக்தர்களாக கருத முடியாது , அவர்கள் சிவ பெருமான் மீது துதிகள் பல செய்திருக்கிறார்களே என்று கேட்கலாம் , இந்த துதிகள் எல்லாம் அவர்கள் செய்ததாக வைத்துக் கொண்டாலும் அவை அனைத்தும் பக்குவமற்ற பிறருக்காக செய்யப்பட்டவையே தவிர ஆதி சங்கரரோ இன்ன பிற சங்கர மடாதிபதிகளோ ஶிவபெருமானை சென்றடைவதை முக்கியாக கருதவில்லை.சிவபெருமானையும் கைலாய வாசிகளையும் சம்சாரிகளாகவே கண்டனர் . இங்கு சிவ பெருமான் என்று ஒரு வசதிக்காக சொல்கிறேன் .சகுண பரும்மவர்கத்தை சார்ந்த எதனையும் அவர்கள் சம்சாரிகளாகவே கண்டனர் .(சிவன் , விஷ்ணு எல்லாம் சங்கரர் சகுணப்ரும்மம் அல்ல என்ற தொன்மையான கருத்துள்ளது .அதற்குள் இப்போது செல்ல வேண்டாம் ),இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் சங்கரரின் ப்ரும்மசூத்ர பாஷ்யப்படியேஆதிசங்கரரோ வேறு சங்கராச்சாரியர்களோ வாழும்போதே அத்வைத அனுபூதியை அடைந்த ஜீவன்முக்தர்களாகிவிட்டனர். ப்ராராப்த கர்மம் முடிந்ததும் உடலை விட்டு நிர்குண ப்ரும்மத்துடன் கலந்து விதேஹமுக்தியை அடைவர் .இவ்வாறாக அத்வைத கொள்கைப்படி ஆதி சங்கரரும் ஏனைய அத்வைத துறவிகளும் வாழும் போதும் வாழ்ந்த பின்னரும் மும்மூர்த்திகளை விட மேலானவர்கள் .பிறகு எப்படி அவரை ஶிவபக்தர் என்று கருத முடியும்? அத்வைத துறவிகளுக்கு ஆகம கோவிலுக்குள் பக்த பிரதிஷ்டை முறைப்படி சன்னதி அமைப்பது ஆகம விரோதம் மட்டும் அல்ல, அத்வைத கொள்கைக்கு செய்யப்படும் அவமானமும் கூட . ஆதியில் பரமஹம்ச துறவறத்தை ஏற்றுக்கொண்ட அத்வைத துறவிகள் எந்த வித மதச்சின்னங்களையும் அணிந்திருக்க வாய்ப்பில்லை என்னும் கருத்தையும் இங்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன் .பரமஹம்ச அத்வைத துறவி வைத்துக்கொள்ளும் பொருட்களில் பஸ்ம சம்புடம் இல்லை .மஹாவாக்கிய ஜபம் தான் அவர்களுக்கு பிரதானம் .இன்றளவும் அத்வைத துறவி ஆகம விதிப்படி தயாரிக்கப்பட்ட பஸ்மத்தை தரிக்கக்கூடாது என்பது விதி , அக்னி ஹோத்ர பஸ்மத்தை தான் தரிக்க வேண்டும் .சூத்திரன் அக்னி ஹோத்ர பஸ்மத்தை தரிக்கலாகாது . ஸ்மார்த்த வழியில் அந்தணர் அடுப்புச்சாம்பலே சூத்ரனுக்கான பஸ்மம்.

அத்வைத துறவிகள் ஶிவ நிர்மால்யத்தை ஏற்பதில்லை ,அப்பைய தீக்ஷிதரின் செல்வாக்கு தெற்கே உள்ள இரு மடங்களிலும் பல விதங்களிலும் இருந்தாலும் இந்த சிவ நிர்மாலய விஷயத்தில் அவர் சொன்ன சமாதானம் செல்லுபடியாகவில்லை . சாளக்ராமத்துடன் இணைந்த சிவ பூஜை என்பதால் மட்டுமே அந்த ப்ரஸாதத்தை தரிக்கவாவது செய்கிறார்கள் .அப்படியும் புசிப்பதில்லை. இந்த விதியை பிற ஸ்மார்த்தர்களும் பின்பற்றுகிறார்கள் . சாளக்ராமத்துடன் சேர்த்து சிவ பூஜை செய்தால் மட்டுமே அந்த அன்னத்தை புசிக்க எடுத்துக்கொள்கிறார்கள் ,

மேலும் பாரம்பர்யமாக ஆதி சைவர்களிடமிருந்து விபூதி வாங்கிக் கொள்வதில் ஸ்மார்த்தர்களுக்கும் அத்வைத துறவிகளுக்கும் மன விலக்கம் இருந்தது .சூத்திரனுக்கு புரோகிதம் செய்யும் பிராமணன் பிராமணத்துவத்தை இழக்கிறான் என்று ஸ்ம்ருதி வசனம் உள்ளது , ஆதி சைவர்களோ சூத்திரர்களுக்கு குருவாக இருந்து மந்திர உபதேசம் இத்யாதிகளையும் செய்வதால் அவர்களுடைய பிராமணத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டது . தவிரவும் அவர்கள் பூஜையை ஜீவனோபாயமாக கொள்வதால் தேவலக தோஷம் உடையவர்கள் என்ற வாதமும் வைக்கப்பட்டது . இது தமிழகத்தில் புழத்கத்தில் இருந்த கருத்து. ச்ருங்கேரி மடத்தை பொறுத்த வரையில் மடாதிபதியே சத்சூத்ரர்களுக்கு மந்த்ர உபதேசம் கொடுத்த வரலாறு உண்டு . ஆகையால் ஆதிசைவர்களின் பிராமணத்துவத்தை அவர்கள் பெரிதாக கேள்விக்குள்ளாக்கவில்லை என்று எண்ணுகிறேன் ,

இதுவும் தவிர ஆகம தீக்ஷை செய்து கொண்ட பிறகு வைதிக அக்னியை விட்டு சகலத்திற்கும் ஆதி சைவன் சிவாக்னியை நாடுகிறான் என்பதாலும் காயத்ரியை விட ரௌத்ரியை சிறந்ததாக கருதுகிறான் என்பதாலும் ச்ராத்தம் உட்பட பல சடங்குகளை க்ருஹ்ய சூத்திரத்தின் அடிப்படையில் செய்யாமல் ஆகம பத்ததிப்படி செய்கிறான் என்பதாலும் சுப அசுப தீட்டு முதலியவற்றை பிற பிராமணர்களைப் போல் பின்பற்றுவதில்லை என்பதாலும் அவர்கள் விலக்கிவைக்கப்பட வேண்டியவர்கள் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது, இவ்வாறான விலக்கப்பட்ட ஆதி சைவர்கள் ஆதி சங்கரருக்கு பூஜை செய்யும் வழக்கம் இருந்திருக்குமா ? இனி செய்ய வைப்பது ஏற்புடையதாக இருக்குமா?

மஹா பெரியவர் தான் வாழ்ந்த காலத்திலேயே ஆதி சைவர்கள் சிவதீக்ஷையுடையவர்கள் என்பதால் தன்னை வணங்கக் கூடாது என்று தெளிவாக சொல்லியிருக்கிறார் .ஆதிசைவர்களை மட்டும் அல்ல வீரசைவ தீட்சையை எடுத்துக்கொண்ட கிருபானந்த வாரியாரையும் வணங்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார் .அவரே தனது ஜீவித காலத்தில் விரும்பாத ஒன்றை அவர் காலத்திற்கு பிறகு ஆதிசைவர்கள் மீது திணிப்பது சரியாகுமா? இல்லை அவர் காலமாகிவிட்டதால் இது ஒன்றும் பிரச்சனை இல்லை என்று வாதிட்டால் வேறு ஒரு புதுக்கோவிலில் செய்வது போல மாதவிலக்காகி இருக்கும் பெண்களும் அவருக்கு பூஜை செய்யலாம் என்று சொல்லிவிட முடியுமா?

ஆக சிவ பக்தர் என்ற ஆகம வரையறைக்குள் ஆதிசங்கரரோ மஹாபெரியவரோ வர மாட்டார்கள் என்பது தெளிவான விஷயம் .எனவே பக்த பிரதிஷ்டை விதி இங்கு பொருந்தாது என்றும் கூறலாம் , இதையும் தவிர ஆதி சங்கரையோ மஹாபெரியவரையோ சிவ பக்தர் என்று அடையாளப்படுத்தி உப சன்னதியாக வைப்பது அத்வைத கோட்பாட்டின்படி அவர்களை கீழ்மைப்படுத்துவதே ஆகும் .

இனி “பைரவாதி …” என்ற ப்ரயோகத்திற்கு வருவோம் .இதில் இத்யாதிகள் என்ன என்று நிறுவுவதற்கான மீமாம்ச விதிகளே உண்டு . அதற்குள் செல்ல வேண்டாம் . அடிப்படையான ஒரு கேள்வியை கேட்போம் . மேற்படி ஆகம நூல்களில் பைரவ பிரிவு, பாசுபத பிரிவு என்ற வரிசையில் எங்காவது அத்வைதத்தை சேர்த்திருக்கிறார்களா ? ஆகம / தந்திர பிரவுகளை சேர்த்து சுட்டும்போது வேதாந்த பிரிவான அத்வைதம் வர வாய்ப்பு உள்ளதா? இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி , ஒடித்தும் திரித்தும் வேண்டுமானால் விரும்பியவாறு பொருள் கொள்ளலாம் .ஒருவர் என் காலத்திற்கு பிறகு என் மகன்களுக்கு சொத்து சேர வேண்டும் என்று உயில் சேர வேண்டும் என்று எழுதிவைத்திருக்கிறார்.திடீரென்று ஒரு நபர் வந்து நானும் அவரை அப்பா என்று மனதில் எண்ணியுள்ளேன் . ஆகையால் எனக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று கேட்பதற்கு நிகரானது இந்த பைரவாதியில் அத்வைதமும் உண்டு என்று வாதிடுவது.

3) ஆகமம் துறவறத்தை தவறாக கருதவில்லையே ….பிறகு துறவியான பக்தராக ஏன் ஆதிசங்கரரைக்கருதக்கூடாது என்று பேராசிரியர் கேட்கிறார் .

பக்தர் என்ற வகைக்கும் ஆதி சங்கர் வர மாட்டார் என்று விளக்கமாக போன பத்தியில் எழுதிவிட்டேன் .இனி துறவறத்தை குறித்து : எந்த ஆகமமாவது அந்தணர் சிகை நீக்கி , பூணூல் நீக்கி துறவறம் ஏற்கும் விதியை குறித்து கூறுகிறதா ? ஆகம தீக்ஷைக்கு அப்பாற்பட்ட ஒரு சடங்கை ஏற்றுக்கொள்கிறதா ? இல்லையே .ஆகமம் ஏற்றுக்கொண்ட துறவறம் என்றால் ஏறத்தாழ நிர்வாண தீக்ஷை. அப்படி என்றால் ஆதி சங்கரருக்கு சிகை , யக்ஞோபவீதத்துடன் தான் சிலையடித்து வைக்க வேண்டும் .

இன்னொரு வேடிக்கையும் உண்டு .சில்லறை உபநிஷத்களில் ஒன்று (ஸ்ம்ருதி சன்புடையது) ஆதிசைவர்களுக்கு துறவறம் கொடுக்கக்கூடாது என்கிறது. இது அவர்கள் மீதுள்ள அக்கறையால் அல்ல . பெருவியாதி உடையவன் , சொட்டைத் தலையன் , ஆதிசைவர் , வைகானசருக்கு எல்லாம் துறவறம் கிடையாது என்கிறது .இந்த பட்டியலைப் பார்த்தால் ஆதிசைவர்களுக்கு துறவு ஏற்கும் தகுதி இல்லை என்று தான் அர்த்தமாகிறது . தேவை இல்லை என்றல்ல பொருள் . அனேகமாக அவர்களுடைய பிராமண்யத்தின் மீதுள்ள சந்தேகத்தால் இந்த விதி வந்திருக்கலாம் .இந்த உபநிஷத் காஞ்சி மடத்தாருக்கு பிரமாணமே . துறவறம் ஏற்று முக்தியடைய தடை உள்ள ஆதிசைவர்களை வைத்து ஆதி சங்கரருக்கு பூஜை செய்யலாமா?

4) பௌத்தரான சாக்கிய நாயனாருக்கு ஆகம கோவிலில் சிலை இருக்கும் போது அத்வைதியான ஆதி சங்கரருக்கு ஏன் கூடாது? என்று கேட்கிறார் பேராசிரியர்

சாக்கிய நாயனார் என்பது அவர் முன்னர் சாக்கிய சமயத்தில் இருந்தார் என்பதை சுட்டுவதற்கான பெயர் மட்டுமே .சிவனருளால் அவர் முக்தியடைந்தார் என்னும் போது அவரை எப்படி பௌத்தராக கருத முடியும் ? ஸ்ரீ ரங்கம் துலுக்க நாச்சியாரை சிலர் வேற்று மதத்தை சார்ந்தவர் என்று சொல்வதற்கு ஒப்பான தவறு இது , அவர்கள் ஆதியில் எந்த மதத்தில் இருந்தாலும் ஆட்கொள்ளப்பட்ட பிறகு சைவர் /வைணவர் தான் ‘ஆதிசங்கரர் இப்படிப்பட்ட ஒரு முக்தியை பெற்றதாக யாரும் கூறவில்லை.

5)தில்லை வாழ் அந்தணர்கள் நாயன்மார்கள் வரிசையில் இருக்கிறார்களே .அவர்கள் ஆதி சைவர்கள் அல்லவே .அவர்கள் அத்வைதிகள் தானே? அவர்களை ஏற்றுக்கொண்ட பிறகு ஆதிசங்கரரை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கம் ?என்று கேட்கிறார் பேராசிரியர் .

தில்லை வாழ் அந்தணர்கள் ஆதி சைவர்கள் அல்ல ; அதனாலேயே அவர்கள் அத்வைதிகளாகிவிட மாட்டார்கள் , ஒரு அந்தண குடி அத்வைத சார்புடையவர்களா இல்லையா என்று தீர்மானிக்க எளிய பரிசோதனைகள் இரண்டு உள்ளன . 1) அவர்களுக்கு ஏதாவது சங்கரமடம் குருமடமாக இருக்கிறதா ?2) அவர்களிடையே கிரம சன்னியாசம் /ஆபத் சன்யாசம் என்னும் அத்வைதிகளுக்கான இன்றியமையாத வழக்கம் உள்ளதா ? என்பதே அவை . தில்லை வாழ் அந்தணர்கள் காஞ்சி மடத்துடன் நெருக்கமாக இருந்தாலும் காஞ்சி மடத்தையோ வேறு எந்த மடத்தையோ அவர்கள் தங்கார் குருமடமாக ஏற்றுக்கொள்ளவில்லை , ராம்தாஸ் மஹாலிங்கம் போன்றவர்கள் பதஞ்சலியை வைத்து பாலம் கட்ட முயல்வார்கள் ; ஆனால் வரலாற்று ரீதியாக அவர்கள் சுதந்திரர்கள் என்பதே உண்மை .அதே போல எவ்வகையிலான துறவற வழக்கமும் அவர்களிடையே இல்லை . துறவி அல்லாதவருக்கு உடனடி முக்தி இல்லை என்பது சங்கரர் நிர்ணயம். அவரை பின்பற்றும் குழு எனில் ஆபத் சன்னியாச வழக்கம் கூட இல்லாமல் இருக்காதே? தில்லை வாழ் அந்தணர்கள் த்வனி என்னும் சிவ சரண மந்திரத்தை அனுஷ்டிக்கும் சிவப்ரபத்தி செய்து கொண்ட சைவ குடி அந்தணர்கள் .அவர்களுடைய சைவம் தொன்மையான ஒரு சைவப்பிரிவு,

தில்லை வாழ் அந்தணர்களை தங்களவர் என்று பிற அந்தணர்கள் சொந்தம் கொண்டாட முயல்வது அவர்களுக்கு ஆபத்தான செயல், தீட்சிதர்கள் தங்களை தனிப்பிரிவு என்று வெற்றிகரமாக உச்ச நீதிமன்றத்தில் நிறுவியதால் தான் அவர்களுக்கு சில விசேஷ உரிமைகள் கிடைத்திருக்கிறது . அதனை கெடுப்பது போல அவர்களை சொந்தம் கொண்டாடுவது அநியாயம் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன் .

இனி தில்லை வாழ் அந்தணர்களுள் ஒருவர் அத்வைத கொள்கைகளைக் கொண்டு நடேச சஹஸ்ரநாமத்திற்கு விரிவுரை எழுதிய விஷயம் குறித்து : காஞ்சி மடத்தில் துறவறம் பெற்ற போதேந்திரர் நாம ஜபமே போதும் என்று சொல்லியதை வைத்துக்கொண்டு காஞ்சி மடத்தை நாம சித்தாந்த மடம் என்று வகைப்படுத்தி வேதாந்த விசாரம் வேண்டாம் என்று சொல்ல முடியுமா? தனிநபர்களில் செயல்கள் குழுவின் பொது குணம் ஆகாது .தீட்சிதர்களில் ஸ்ரீவித்யா உபாசகர்கள் தொடங்கி கெளமாரர்கள் வரை பலர் இருந்தனர் ; இருக்கின்றனர் . இது எல்லாம் விதிவிலக்குகளே .

6) திருமூல நாயனார் நாத சம்ப்ரதாயத்தை சார்ந்தவர். அவருக்கு சிலை இருக்கும் போது அத்வைதிக்கு இருந்தால் என்ன ?

திருமூலர் நாத சைவரோ ரசவாத சைவரோ . எதுவாக இருந்தாலும் அவர் சைவர் .ஆதி சங்கரர் சைவர் அல்ல.அத்வைதி. அது தான் வேறுபாடு.

7) மாணிக்கவாசகருக்கு நாயன்மார் வரிசையில் சிலை இல்லையே?

அதனால் என்ன ? நாயன்மார் வரிசையில் வேறு பலருக்கும் தான் இல்லை .அதற்கு பதிலாகத்தானே சமஷ்டி சின்னமாக சிவனடியார்கள் அனைவரையும் பிரதிநிதிப்படுத்தும் பிரதிஷ்டை ஒன்று இருக்கிறது ?

8) உமாபதி சிவம் எழுதிய குஞ்சிதாங்ரி ஸ்தவத்தில் ஆதிசங்கரர் போற்றப்படுகிறார். உமாபதி சிவம் சைவ சித்தாந்திகளால் குருவாகப் போற்றப்படுகிறார் . ஆகையால் அவர் போற்றும் ஆதிசங்கரரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் பேராசிரியர்.

மேற்படி துதியில் ஸ்ரீவித்யா உபாசனை உட்பட பலதும் உள்ளது .அத்துதியை ஆகம சைவ தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை .அதில் ஏக குழப்படிகள் இருப்பது அதனை வாசிக்கும் எவருக்கும் புரியும் ,தாங்கள் போற்றும் உமாபதி சிவம் வேறு இவர் வேறு என்பது ஆகம தரப்பு வாதம் . காஷ்மீர சைவர்களிடையே ஒரு கதை உண்டு . ப்ரஸ்தான த்ரயத்திற்கு பாஷ்யம் எழுதிய பிறகு காஷ்மீரத்திற்கு வந்த ஆதி சங்கரர் ஒரு காஷ்மீர சைவ குருவிடம் வாதத்தில் தோற்று அச்சமயப் பிரிவு தீட்சை எடுத்துக்கொண்டதாக கதை போகும் . இதனை ஏதாவது சங்கர மடம் ஏற்றுகொள்ளுமா ? அதே போலத்தான் மேற்படி துதியும் .ஒரு வேளை உமாபதி சிவம் உண்மையில் அந்நூலை இயற்றியிருந்தால் கூட அனாதிகாலமாக இருக்கும் ஆகம சித்தாந்தத்தை அந்த நூல் கட்டுப்படுத்தாது .

9) கேனோபநிஷத் பாஷ்யத்தில் சங்கரர் சிவனை (ஏறத்தாழ) பரம்பொருள் என்று போற்றுகிறாரே . இது போதாதா சங்கரரை சைவர் என்று ஏற்றுக்கொள்ள என்று வினவுகிறார் பேராசிரியர் /

கேனோபநிஷத் என்பது யக்ஷ (கண்ணுக்கு தெரியாத) வடிவம் எடுத்து ப்ரும்மம் (கண்ணுக்கு தெரியவில்லை ; வடிவம் இல்லை ; பெயர் இல்லை குரல் மட்டும் கேட்கிறது . ஆகையால் அத்வைத சித்தாந்தப்படி ஏறத்தாழ நிர்குண ப்ரும்மம் ) கேள்விகள் கேட்டு தேவர்களின் அஹங்காரத்தை அழிக்கிறது . அப்போது இந்திரன் அந்த குரலை நெருங்கும் போது அக்குரல் உமையை ஒத்த வடிவம் எடுக்கிறது. “ரூப” என்னும் பதம் பாஷ்யத்திலே உள்ளது .அந்த வடிவத்தின் தோற்றத்தை விளக்கி வர்ணிக்கும் போது தான் சிவபெருமானையும் சேர்த்து விளக்கி வர்ணிக்கிறார் ஆதி சங்கரர் , இது வெறும் புகழ் மொழியே என்றும் நிர்ணய வரி அல்ல என்றும் எளிதல் நிறுவலாம் .ஆனால் அந்த அளவிற்கு கூட போகவேண்டியதில்லை .

அடிப்படையான விஷயம் ஒன்று இருக்கிறது .ஒரு சிந்தனையாளரின் தரப்பை விளக்கும் போது / நிர்ணயம் செய்யும் போது அவரது முக்கிய கொள்கையை தான் கணக்கில் எடுக்கவேண்டுமே தவிர உதிரி நூல்களில் அவர் சொல்லியவற்றை அல்ல .உயர்வான ப்ரும்மம் நிர்குண ப்ரும்மம் தான் என்று தனது ப்ரும்ம சூத்திர பாஷ்யத்தில் சங்கரர் தெளிவாக கூறியுள்ளார் . அதனை விடுத்து இந்த வரியையோ அவரது தோத்திர நூலையோ கொண்டு அவரை சைவர் என்று நிறுவ முயல்வது சிறுபிள்ளைத்தனமானது . சூத்திரனுக்கு வேத அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்விக்கு சங்கரர் என்ன பதில் சொல்கிறார் என்று கேட்டால் எந்த மடாதிபதியும் / பண்டிதரும் அப சூத்ர அதிரணத்தைக் கொண்டு இல்லை என்ற பதிலைத் தான் தருவார்களே தவிர மனீஷா பஞ்சக கதையை வைத்து உண்டு என்ற பதிலை தர மாட்டார்கள் .பிறகு சங்கரரின் மதத்தை நிர்ணயம் செய்வதில் மட்டும் ஏன் ஒற்றை வரி ஆதாரம் ? இதையும் தாண்டி சங்கரர் சைவர் தான் என்று காஞ்சி மடம் சொன்னால் நமக்கு மகிழ்ச்சியே

10) ஸித்தாந்த ரீதியாக பௌத்தர்களும் பாசுபதர்களும் கூட கண்டிக்கப்பட்டுள்ளனர் .அப்பிரிவை சார்ந்தவர்களுக்கு நாயன்மார்கள் வரிசையில் சிலை இருக்கும் போது அவ்வாறே கண்டிக்கப்பட்டுள்ள அத்வைத ஸ்தாபகரான சங்கரருக்கு ஒரு சிலை இருந்தால் என்ன தவறு என்று கேட்கிறார் பேராசிரியர்

சாக்கிய நாயனார் பௌத்தராக இருந்து சைவரானவர் .அப்பெயர் அவரை அடையாளம் காண்பதற்கு மட்டும் தானே அன்றி அவரது சமயத்தை சுட்டுவதற்கு அல்ல என்று ஏற்கனவே விளக்கியாயிற்று .இனி பாசுபதர்களை குறித்து : அவர்களும் அடிப்படையில் சைவர்களே . மேற்படி பைரவாதி வரிசையில் வருபவர்கள் .ஆனால் அத்வைதிகள் அப்படி அல்லவே .

11) பல கோவில்களில் உள்ள பல தூண்களில் ஆதிசங்கரர் புடைப்பு சிற்பங்கள் உள்ளன . அதனால் ஆகமம் ஆதிசங்கரரை ஏற்றுக் கொண்டது என்று பொருள் என்கிறார் பேராசிரியர் ,

இந்த தூண்களில் உள்ள சிற்பங்கள் எல்லாம் ஆகம வரம்பிற்குள் வருபவை அல்ல .அதெல்லாம் அலங்காரத்திற்காக சிற்பி விருப்பப்படி கொத்துவது , அவற்றிற்கு பூஜை எல்லாம் இல்லை . தமிழ்நாட்டில் உள்ள தூண்களில் விளக்கு பாவைகளாகவும் இன்னும் பல வடிவங்களிலும் ஏராளமான தேவதாசிகள் உள்ளனர் .பல இடங்களில் உபய தாரர்கள் சிலைகள் உள்ளன . தூண்களில் குரங்கு யானை வடிவங்களும் உள்ளன . இதற்கெல்லாம் எந்த உள் அர்த்தமும் இல்லை .சிற்பியின் விருப்பம் அவ்வளவே .காஞ்சி மடத்தால் அடையாளப்படுத்தப்படும் பல சிற்பங்கள் ஆதிசங்கரருடையதா என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுகிறது .அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை .ஒரே ஒரு விஷயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் ,தூணில் ஆதிசங்கரர் வடிவம் இருப்பதாலேயே அது ஆதிசங்கரரை ஏற்றுக்கொண்ட கோவில் என்று நிறுவ முடியாது .தமிழகத்தில் பல கோவில்களில் கலவி சிற்பங்கள் இருக்கின்றன . அதற்கென்று அவை யாவும் வாம மார்க்க பூஜை நடந்த இடம் என்று சொல்ல முடியுமா ? அதே போலத்தான் இதுவும். நவ ரசங்களின் பிரதிபலிப்பு இவை , அவ்வளவே . இதற்கும் ஆகமத்திற்கும் தொடர்பில்லை .

12) கோவில்களில் எல்லாம் ஆகமப்படிதான் நடக்கிறதா? எத்தனையோ ஆகம மீறல்கள் நடக்கிறது .அத்துடன் இதுவும் இருந்தால் என்ன குறைந்து போகும் ?

அர்ச்சகர் நியமன விஷயத்தில் அரசு இதைத்தான் சொல்கிறது .காஞ்சி மட பக்தர்களும் இதைத்தான் சொல்கிறார்கள் . யாரும் சாலை விதிகளை மதிப்பதில்லை .பிறகு எனக்கு மட்டும் ஏதற்கு அபராதம் என்று கேட்பதற்கு ஒப்பான வாதம் இது . ஏற்கனவே ஆகம விதிமுறை மீறல்கள் இருக்கும் கோவில்களில் இன்னமும் ஒரு விதிமுறை மீறலாக சங்கரர் சிலை இருக்கட்டும் என்று எந்த சங்கர பக்தனும் சொல்ல மாட்டான் .ஆனால் குட்டிசுவரில் தன் கட்சி சுவரொட்டியையும் ஒட்டிவிட வேண்டும் என்ற எண்ணமுடைய அறிவில்லாத தொண்டனைப்போல சங்ரரை சகல இடத்திலும் திணிக்க / கண்டுபிடிக்க சிலர் முயல்வர் . பேராசிரியர் அவர்களுள் ஒருவரல்ல என்ற திடமான நம்பிக்கை எனக்கு உண்டு .

வைத்யராஜன்

நேற்று இரவு தில்லைஜியிடம் பேசிக் கொண்டிருந்தேன் . அப்போது மற்றொரு நண்பர் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தார் .அவர் அவ்வாறு விடாப்பிடியாக அழைப்பவர் அல்ல . ஏதாவது முக்கியமான செய்தி இருந்தால் மட்டும் தான் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சிப்பார் . அதனால் ஏறத்தாழ நள்ளிரவில் திருப்பி அழைத்தேன் . மரு.திருநாராயணன் திருமலைஸ்வாமி காலமான செய்தியை சொன்னார் . ஜகன்நாத் தகவல் அனுப்பியிருந்ததை அதன் பிறகு தான் பார்த்தேன் .ஒரு சகாப்தம் முடிந்தது என்று நிஜமாகவே சொல்லலாம்.

மருத்துவர் ஐயாவை முகநூல் வழியாகத்தான் பழக்கம் . அனேகமாக ஓலைச்சுவடிகள் தொடர்பான பயிற்றரங்குகளை நடத்துகிறார் என்ற செய்தியை எங்காவது வாசித்து நட்பில் இணைந்திருப்பேன் . அவருடன் முகநூலில் நட்பில் இணையும் போது அந்த தொடர்பு என்பது பல விதங்களில் எங்களில் பலர் வாழ்வில் தாக்கம் செலுத்தப்போகிறது என்று நான் எண்ணவே இல்லை.

மரு.திருநாராயணன் திருமலைஸ்வாமி அவர்களது பதிவுகளை தொடர்ந்து வாசித்தேன். சித்த மருத்துவம் சார்ந்த நிலைப்பாடுகளால் நான் மிகவும் கவரப்பட்டேன் . பொதுவாக இந்திய மருத்துவ முறை வல்லுனர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் .இந்திய மருத்துவ முறைகளால் இறந்த போனவனையும் உயிர்ப்பிக்க முடியும் என்று நம்புகிறவர்கள் ; இந்திய மருத்துவ முறைகளை அருங்காட்சியக வஸ்துவாக கருதும் நபர்கள் . இரு தரப்பினரும் இரு துருவங்கள் . ஆனால் ஐயா இந்த இரண்டு தீவிர குழுக்களையும் சாராதவராக இருந்தார் ,சித்த மருத்துவத்தால் குணமாகாத நோயே இல்லை என்று எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல் பேசுபவர்களையும் எதிர்த்தார் .இன்னொரு புறம் இந்திய மருத்துவ முறைகளை லேகிய வியாபாரமாக கருதும் காலனிய மனப்பான்மை கொண்ட அலோபதி மருத்துவர்களையும் எதிர்த்தார் . இதனால் இரு தரப்பிலும் அவர் மீது அதிருப்தி கொண்டவர்கள் பலர் .உண்மையை தயங்காமல் சொல்கிறார் என்பதால் சில நண்பர்களும் உண்டு .

சித்த மருத்துவத்தின் ஆற்றலை விஞ்ஞான பூர்வமாக நிறுவ வேண்டும் என்றால் அதற்கு அலோபதி பயன்படுத்தும் அதே ஆய்வு உபகரணங்களை பயன்படுத்தி உலகளவில் அங்கீகரிக்கப்ட்ட விஞ்ஞான உரையாடல் (Scientic discourse) வழியாக வாதிடவேண்டும் என்பது ஐயாவின் நிலைப்பாடு . சித்த மருத்துவர்கள் ஆய்வு கட்டுரைகள் எழுத வேண்டும் ; சித்த மருந்துகளின் drug action mechanism த்தைஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும் ; சரியான புள்ளியியல் அணுகுமுறையை முன்னெடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் .

இந்திய மருத்துவ முறைகளை உலகளாவிய மருத்துவமாக முன்னெடுப்பது எனக்கு எக்காலத்திலும் உவப்பாக இருந்தது இல்லை . குறிப்பிட்ட மருந்தை குறிப்பிட்ட நோயுள்ள , குறிப்பிட்ட உடல்வாகு உள்ள எந்த நோயாளிக்கு கொடுத்தாலும் அது ஒரே வகையான விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அடிப்படை விஞ்ஞான விதி. இந்த அடிப்படையிலேயே என்னை போன்றவர்களுக்கு நம்பிக்கை இல்லை . நோய் இருக்கும் இடத்தில் தான் மருந்து இருக்கும் .அது அந்த பிரதேசத்தில் மட்டும் தான் செயல்படும் என்பது எங்கள் நம்பிக்கை . உதாரணத்திற்கு ஒரு நபரை ஒரு ஊரில் வைத்து பாம்பு கடித்தால் அதற்கான சிகிட்சையை அதே ஊரில் உள்ள விஷவைத்தியன் தான் செய்ய வேண்டும் , அதற்கு பயன்படுத்தப்படும் மூலிகைகளும் அந்த நிலப்பரப்பை சார்ந்ததாக தான் இருக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு . நோய் காரணி , நோய் , நோயாளி நோய்க்கான மருந்து , மருத்துவன் ஆகிய ஐந்தும் ஒரே இடத்தில் இருக்கும் . அதனால் தான் உலகளாவிய ஆயுர்வேத / சித்த மருத்துவ சந்தையையோ , நிறுவமையமாக்கப்பட்ட ஆயுர்வேத / சித்த மருந்து உற்பத்தியையோ என்னால் ஆதரிக்க முடிந்ததே இல்லை .

ஆயுர் வேதத்திற்கோ சித்த மருத்துவத்திற்கோ விஞ்ஞான அங்கீகாரம் வேண்டியது இல்லை என்பது எனது நிலைப்பாடு . ஆனால் அவற்றிற்கு விஞ்ஞான அங்கீகாரம் பெற வேண்டும் என ஒருவர் நினைத்தார் எனில் பழம் பெருமையை மட்டும் பேசி பயன் இல்லை . ஐயா சொன்னது போல பரிபூர்ணமாக விஞ்ஞான முறைகளுக்கு உட்பட்டே இந்திய மருத்துவத்தின் ஆற்றலை நிருபிக்க வேண்டும் . உதாரணத்திற்கு, நில வேம்பு கஷாயத்தின் ஆற்றலை அலோபதி மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட வழியில் ஆய்வுகளை நடத்தி ஆய்வறிக்கையை சமர்பிக்க வேண்டும் என ஐயா வலியுறுத்தினார் .

பொதுவாகவே திருநாராயணன்திருமலை ஸ்வாமி அவர்களுக்கு interdisciplinary மற்றும் transdisciplinary ஆய்வுகளில் ஆர்வம் அதிகம் . அதனால் மருத்துவ கருவிகளை உருவாக்குவதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது . எந்த ஆய்வுகளிலும் Collaborate செய்ய அவர் தயங்கியதே இல்லை .சில ஆண்டுகள் முன்னர் அண்ணா பல்கலைக்கழகத்தின் நெல்லை மண்டல பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுடன் இணைந்து நாடி பார்ப்பதற்கான கருவி ஒன்றை உருவாக்கினார் . அந்த ஆய்வுக்குழு அதற்கான காப்புரிமையையும் பெற்றது . அனேகமாக சித்த மருத்துவம் சார்ந்த ஒரு மருத்துவ கருவிக்கு காப்புரிமை பெறப்பட்டது அதுவே முதல் முறை என எண்ணுகிறேன் ,

இத்துறை சார்ந்த ஆர்வம் காரணமாகவே நான் அவரை நேரில் சந்தித்தேன் . மருத்துவ கருவிகள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் சுதந்திர அலோசகராக இருக்கிறேன் .அலோபதி சார்ந்த கருவிளை உற்பத்தி செய்யும் அந்நிறுவனும் இந்திய மருத்துவம் சார்ந்த கருவிகளை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டியது . அது தொடர்பான அலோசனைக்கும் கூட்டு முயற்சிக்காகவும் தான் ஐயாவை முதலில் சந்தித்தேன் .அன்று விஜயதசமி , சுமார் 10/12 சித்த மருத்துவர்கள் / முதுகலை சித்த மருத்துவ மாணவர்கள் அவரிடம் குரு வழியில் சித்த மருத்துவ பாடம் கேட்க வந்திருந்தார்கள் . மாணவர்களிடையே மிகுந்த உற்சாகத்துடன் ஐயா இருந்தார் . அந்த அறைக்கு செல்பவர்களை எல்லாம் தொற்றிக்கொள்ளும் உற்சாகம் அது. மனச்சோர்வை நீக்கி ஏதாவது சாதிக்க ஊக்கமளிக்கும் ஆற்றல் மரு.திருநாராயணன் திருமலைஸ்வாமி அவர்களின் வார்த்தைகளுக்கு இருந்தது .மரு.திருநாராயணன் திருமலைஸ்வாமியின் மாணவரும் நண்பருமான பேரா.சுபாஷின் மருத்துவமனையில் வைத்து அந்த சந்திப்பு நடந்தது .

வகுப்பு எடுப்பதில் அவருக்கு இருந்த ஈடுபாடு, ஆற்றல் , ஆய்வின் மீது இருந்த காதல் ஆகியவற்றால் நான் ஈர்க்கப்பட்டேன் . இவர் ஏதாவது பல்கலைக்கழகத்தில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற எண்ணம் வந்தது .அதனை அவரிடம் சொல்லவும் செய்தேன் . அதற்கு பதிலாக தனது பின்னணியை குறித்து ஐயா சொன்னார் , பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியில் இருந்து கூப்பிடு தொலைவில் இருக்கும் ராஜகோபாலஸ்வாமி சன்னதி தெருவில் தான் பிறந்து வளர்ந்தார் . பள்ளி இறுதி வகுப்பிற்கு பிறகு முதலில் சவேரியார் கல்லூரியில் இளநிலை பெளதீக பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார் , மூன்று மாதங்களுக்கு பிறகு சித்த மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான அறிவிப்பு வந்தது .அதில் சேர்ந்தார் , இளங்கலை பட்டம் பெற்ற பிறகு அரசு சித்த மருத்துவராக சிறிது காலம் பணியாற்றினார். இயந்திர கதியில் நோயாளிகளை பரிசோதிக்க கட்டாயப்படுத்தப்பட்டார் .அவ்வாறு செய்வது பெரும் அநீதி என்ற எண்ணம் ஏற்படவே அரசு வேலையை ராஜினாமா செய்தார் .அந்த காலத்தில் மட்டும் அல்ல , இந்த காலத்திலும் யாரும் எடுக்காத துணிச்சலான முடிவு அது. தனியாக மருத்துவ தொழிலை செய்யத் தொடங்கிய சிறிது காலத்திற்குள்ளாகவே புகழ்பெற்ற மருத்துவரானார் .சித்த மருத்துவத்திற்கான ஆய்வு நிறுவனம் ஒன்றையும் , மூலிகை பண்ணையையும் உருவாக்கினார் ,

தான் வெறும் BSMS தான் என்று அவர் வேடிக்கையாக அடிக்கடி சொல்வதுண்டு .ஆனால் பேராசிரியர்களின் பேராசியராக , மருத்துவர்களின் மருத்துவராக விளங்கினார் , முக்கியமான மருத்துவ நூல்களை எழுதியுள்ளார் . பல நூல்களை பதிப்பித்துள்ளார் . தமிழிலும் கூட மொழியிலும் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் அசரடிக்கும் புலமை உள்ளவர் . கற்றுக்கொள்வதிலும் கற்றுக்கொடுப்பதிலும் தீராத ஆர்வம் உடையவர் . பரநத வாசிப்பு உடையவர்.

மருத்துவ முறை , மருத்துவ ஆய்வு , மருத்துவ அரசியல் தொடர்பான காத்திரமான கருத்துக்களை எந்தவித தயக்கமும் இன்றி முன்வைத்து வந்தார் . ஐயாவின் தலைமையில் ஒரு கூட்டு ஆய்வுக்குழு அமைய வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது . பத்ரி, சித்த மருத்துவ பின்னணியும் ஆயுர்வேத கல்வியும் உடைய மரு.சுனில் க்ருஷ்ணன் , திறந்த மனதும் , தனது சொந்த அனுபவத்தின் காரணமாக இந்திய மருத்துவ முறைகள் மீது நம்பிக்கை உடைய IISc பேராசிரியரும் வேதியியல விஞ்ஞானியுமான இளங்கண்ணன் அருணன் மற்றும் சில அலோபதி மருத்துவர்களை உள்ளடக்கிய குழுவாக இந்த ஆய்வுக்குழு இருக்க வேண்டும் என எண்ணினேன் .IISc ல் சிறப்புரையாற்றச் சென்ற போது ஐயாவும் பேரா.இளங்கண்ணன் அருணனை அவர்களும் சந்தித்து உரையாடவும் செய்தனர். கரோனா காரணமாக இந்த முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது.

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற பழமொழி மருத்துவத்துறையிலும் உண்மையாக இருப்பதை பார்த்திருக்கிறேன் . மூல நூல்களை மனப்பாடமாக ஒப்பிக்கும் ஆற்றல் கொண்ட , அவைகளிலும் நேர்காணல்களிலும் சண்ட பிரசண்டனாக பிரகாசிக்கும் பல மருத்துவர்களுக்கு சிறு உடல்நல உபாதையைக் கூட குணப்படுத்தும் திறன் இல்லாமல் இருப்பதை கண்டுள்ளேன் .சில மருத்துவர்களுக்கு அபாரமான களத்திறமை இருக்கும் . ஆனால் பேச்சாற்றல் இருக்காது. வாக்பலமும் கைராசியும் ஒருங்கே உள்ள வெகு சில மருத்துவர்களுள் ஐயாவும் ஒருவர் . இதனை நான் நேரடியாக கண்டிருக்கிறேன் .எனது நெருங்கிய நண்பருக்கு 40களிலேயே முட்டு தேய்வு பிரச்சனை வந்து கஷ்டபட்டார் .ஆள் ஒண்டிக்கட்டை. அந்தணன் சொத்து சேர்க்கக்கூடாது என்ற கொள்கையின் படி வாழ்வதால் கைவசம் எந்த சேமிப்பும் இல்லை. பல அலோபதி மருத்துவர்களும், ஆயுர்வேத/சித்த மருத்துவர்களும் கைவிரித்துவிட்டனர் . தனது நடமாட்டத்திற்கே அடுத்தவரை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் வந்து விடுமோ என்று எண்ணி காவிரியில் குதித்து தற்கொலை செய்யும் முடிவிற்கு வந்தார். அவரது புத்தகங்களை எல்லாம் மூட்டைக் கட்டி எனக்கு அனுப்பத் தயாரான போது தான் எனக்கு விஷயம் தெரிந்தது .நல்ல காலமாக அப்படுவத்தில் காவிரியில் அதிகம் தண்ணீர் இல்லை . தண்ணீர் வருவது வரை தற்கொலை முடிவை தள்ளிப்போட்டுவிட்டு வலி நிவாரணிகளை வைத்து சமாளிக்க ஒத்துக்கொண்டார். தன்வந்த்ரி மந்திரத்தை அகண்ட ஜபமாக கைக்கொள்ளவும் தொடங்கினார் ,ஐயா அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது இத்தகைய பிரச்னைகளை அவர் சரி செய்துள்ளதாக சொன்ன நினைவு இருந்தது . மனம் சோர்ந்து போயிருந்த நண்பரை மிகுந்த ஒரு வழியாக சமாதானப்படுத்தி ஐயாவிடம் அனுப்பி வைத்தேன் .மூன்றே நாட்களில் முன்னேற்றம் தெரியத்தொடங்கியது .அலோசனைக்கோ மருந்திற்கோ பணம் வாங்க ஐயா மறுத்துவிட்டார் , இது போல ஏராளமான அனுபவங்கள் உண்டு. தனக்கு தெரிந்ததை வைத்து நாலு காசு தேத்தலாம் என்று இல்லாமல் சவாலான பிரச்சனைகளை சரி செய்வதில் ஆர்வம் காட்டிய வெகு சில மருத்துவர்களுள் ஐயாவும் ஒருவர் .

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எனது உடல் நிலை சீர்கெடுவதற்கு சில மாதங்கள் முன்பு திருநாராயணன் திருமலை ஸ்வாமி ஐயாவை நெல்லையில் வைத்து கடைசியாக சந்தித்தேன் .நெல்லை சித்த மருத்துவ கல்லூரி ஆண்டு விழாவிற்கு வந்திருந்தார் .ஆய்வு தொடர்பாக விவாதிப்பதற்கு சந்தித்தேன் .என்னுடன் வந்திருந்த எனது நண்பர்கள் இருவருக்கு (ஒருவர் பொறியாளர் , ஒருவர் ஆயுர்வேத மாணவி) நாடி பார்ப்பது தொடர்பான அடிப்படைகளை விளக்கினார் .சில மணி நேரங்கள் பேசிக்கொண்டிருந்தோம் . கரோனா காரணமாகவும் எனது உடல் நிலை காரணமாகவும் பின்னர் சந்திக்க முடியவில்லை .ஆனால் தொலைப்பேசித் தொடர்பு இருந்தது. சில மாதங்கள் முன்னர் வினோதமான முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மற்ற மருத்துவமுறைகளால் எந்த வித பலனும் கிடைக்காத பத்து வயது குழந்தையை அனுப்பி வைத்திருந்தேன் . அது தொடர்பாக அழைத்து பேசினேன். இப்போது அக்குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது .

திருநாராயணன் திருமலைஸ்வாமி அவர்கள் திருவனந்தபுரத்தில் ஆய்வரங்கில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு காலமானதாக சொன்னார்கள். பல வகையில் ஆய்வரங்குகள் தான் அவரது கர்ம வேதி. அத்தகைய ஒரு கர்மபூமியில் வைத்து அநாயசமாக உயிரை விடுவது ஒரு வகையில் அவருக்கு கொடுப்பினை தான் .ஆனால் நமக்கு ? ஐயா இன்னமும் சில வருடங்களாவது இருந்திருந்தால் இன்னும் சில மருத்துவர்களை உருவாக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மரு திருநாராயணன் திருமலை ஸ்வாமி அவர்களை அவரது ஜாதியின் அடிப்படையில் எதிர்த்தவர்கள் பலர். சித்த மருத்துவம் என்பது மொழி வெறியாளர்களின் கைப்பாவையாகி விடக்கூடாது என்ற அவரது கொள்ளையால் அவரை வெறுத்தவர்கள் பலர். சமரசமற்ற ஆய்வு முறைகளை முன்வைத்தால் பலரது கசப்பிற்கும் ஆளானார் .இவை அனைத்தையும் தாண்டி தான் மரு.திருநாராயணன் திருமலைஸ்வாமி சாதனைகளை செய்தார் .அவர் முன்வைத்த அறத்தை , தீரா ஆர்வத்தை , அவரது உற்சாகத்தை ஓரளவாவதும் நம் வாழ்விலும் கொண்டு வர முடிந்தால் அதுவே அவருக்கான சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

ஜகத்குரு விஷயம்

சமீபத்தில் சின்ன ஜீயர் ராமானுஜர் தான் ஜகத்குரு என்று சொன்னதைத் தொடர்ந்து காரசாரமான விவாதங்கள் நடந்தன . இது தொடர்பாக விரிவாக ஆராயும் நோக்கத்துடன் தான் இந்த பதிவை எழுதுகிறேன் .

அ) ஜகத்குரு ராமானுஜர் என்ற பிரயோகத்தை ஆனந்த கணேஷ் கடுமையாக எதிர்த்தார் .ஆதிசங்கரருக்கே உரியதான ஜகத்குரு என்னும் பட்டத்தை கைப்பற்ற முயல்கிறார்கள் என குற்றம் சாட்டினார். இங்கே ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .ஆனந்த கணேஷ் பிற சம்ப்ரதாயத்தை சார்ந்தவர்கள் அவரவர் ஆச்சார்யர்களை உலகத்திற்கே குரு என்ற அழைப்பதை எதிர்க்கவில்லை .ஆனந்த கணேஷ் சொல்வது என்னவென்றால் இங்கு சொல் சேர்க்கை அதாவது Colocation மீறல் நடைபெற்றுள்ளது என்பது தான் . உடையவர் ஸ்ரீராமானுஜர் என்பது போல ஜகத்குரு ஸ்ரீ சங்கரர் என்பது ஒரு சொற்சேர்க்கை . ஜகத்குரு என்னும் சொல் சங்கரரின் பிம்பத்தையே மனதில் கொண்டு வருகிறது அதனால் அச்சொல்லை ராமானுஜருக்கு அடைமொழியாக பயன்படுத்துவதை ஆனந்த கணேஷ் எதிர்க்கிறார் .

ஆனந்த கணேஷ் வளர்ந்த வசிக்கும் சூழலில் இது சரி தான் .ஆனால் இந்திய அளவில் வேறு பல சம்ப்ரதாயங்களிலும் ஜகத்குரு என்று பயன்பாடு உண்டு .ஸ்ரீராகவேந்திர் மடத்தின் முத்திரையிலேயே ” ஜகத்குரு ஸ்ரீ மத்வாச்சார்ய மூல சமஸ்த்தான …” என்று வரும் . உத்தராதி மடத்தவர்களும் இதனை ஒத்த வாக்கியத்தை அவர்களது மட சின்னத்தில் பயன்படுத்துகிறார்கள் . இது தவிர சில பல வட இந்திய மடங்களும் (சங்கர சம்ப்ரதாயத்திற்கு தொடர்பற்றவை) இந்த ஜகத்குரு பதத்தை பயன்படுத்துகின்றனர் . உடையவர் என்னும் சொல் தமிழகத்தில் ராமானுஜரை சுட்டுகிறது . ஆனால் மாத்வ சுதந்திர துறவிகள் பலருக்கும் இதனை ஒத்த ஒடையரு என்ற பட்டம் உண்டு . உதாரணம்: சங்கர்ஷண ஒடையரு , ரத்னகர்ப ஒடையரு முதலியவர்கள் ,’உரிமையாளன் என்று பொருள் தரும் வார்த்தை இது .உடையார் என்ற ஜாதியின் பெயரின் வேரும் இதுவே , கேரளாவில் சில பிரிவுகளை சார்ந்த கிறிஸ்த்தவர்கள் “உடைய தம்புரான்” என்று தான் இயேசு கிறிஸ்த்துவை அழைக்கின்றனர் .ஆக பிரதேச மாறுபாடுகளுக்கு உட்பட்டது தான் இத்தகைய சொற்சேர்க்கைகள் என்று தெளிவாகிறது

|ஆ) ஆனால் ராமானுஜ வைணவ சம்ப்ரதாயத்தில் எக்காலத்திலாவது ஜகத்குரு என்ற விளி இருந்ததா ?

| இருந்தது என அந்த சம்ப்ரதாய குருபரம்பரை நூல்கள் வாயிலாகவே தெளிவாகிறது . கூரேசர் “சத்யம் சத்யம் …. யதிராஜோ ஜகத்குரு ” என்று பிரகடனம் செய்ததார் .இது போன்ற ஒரு ஆதாரத்தை தான் ஆனந்த கணேஷ் முதலில் கேட்டார் .அதனை அப்போது கொடுக்கத்தக்க நபர்கள் இல்லாததால் தான் விவாகாரம் இந்த அளவிற்கு பெரிதானது .

இ) ராமானுஜர் தான் திருப்பதி பெருமாளுக்கே குரு என்பது ?

இது அவர்கள் சம்ப்ரதாய நம்பிக்கை .ராமானுஜர் தான் திருப்பதி பெருமாளுக்கு சங்கு சக்ராதிகளை சமர்பித்தார் என்றும் அதனால் அவர் பெருமாளுக்கு சமாச்சரண ஆச்சாரியன் என்றும் சுவைப்பட அவர்கள் சம்ப்ரதாயத்தில் கூறுவர் . இதனை பிறர் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை ,

உத்தராதி மடம் குரு பரம்பரை நூலில் கூட பண்டரிபுரம் விட்டலனே ஒரு ப்ரும்மச்சாரி வடிவில் வந்து அவர்களது மடாதிபதி ஒருவரிடமிருந்து தப்த முத்திரை பெற்றுக் கொண்டதாக வரும் (ஆனால் நமஸ்காரம் செய்யவில்லை என்று கதை எழுதிய நபர் சொல்லியிருப்பது பெருங்கருணை 🙂 ) . இதனை மாத்வர்களில் பலரே நம்புவதில்லை .

ஈ) இருந்தாலும் பெருமாளுக்கு குரு என்று சொல்லிக் கொள்வது …….?

ஒருவரது உணவு பிறருக்கு விஷம் என்பது சம்ப்ரதாய விஷயங்களிலும் பொருந்தும் . அந்தந்த சம்பரதாயங்களில் பெருமையாகச் சொல்லப்படுவது அடுத்தவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் , மூன்று உதாரணங்களை தருகிறேன் :

1) ராமானுஜ வைணவத்தில் சொல்லப்படும் ” உம் பெருமாளையும் எம் பெருமாளையும் ” சேர்த்து ஒரே கூடையில் வைத்தேன் என்னும் நிகழ்வு

2) காஞ்சி பெரியவர் தரிசன அனுபவங்கள் புத்தகத்தில் வரும் நிகழ்வு ஒன்று :

ஏழு எட்டு தலைமுறைகளாக பூஜை செய்யப்பட்டு வரும் சாளக்ராமங்கள் பாணலிங்கங்கள் கொண்ட பூஜா பெட்டியை மேற்கொண்டு பூஜை செய்ய ஆள் இல்லை என்பதால் அக்குடும்பத்தினர் காஞ்சி பெரியவர் முன் வைக்கின்றனர் . பெரியவர் , சாளக்ராமங்கள் பாணலிங்க இத்யாதி அடங்கிய அப்பெட்டியை தனது காலால் இழுத்து அருகில் வைக்கிறார் .இதற்கு காரணம் பெரியவர் அஹம் ப்ரும்மோஸ்மி நிலையை பூர்ணமாக அடைந்துவிட்டது தான் என கட்டுரை ஆசிரியர் புளங்காகிதம் அடைகிறார் .

3) லிங்க தாரிகளில் சிலர் தங்களது குருவிற்கு பாத பூஜை செய்யும் போது குருவின் பாதத்தில் லிங்கத்தை வைத்து பாதத்தையும் லிங்கத்த்தையும் சேர்த்தே அபிஷேகித்து பூஜிப்பர் .பாதத்தை பாதுகையை அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்

மேற்கண்ட மூன்று சம்ப்ரதாய விஷயங்களும் அந்தந்த சம்ப்ரதாயங்களை சார்ந்தவர்களுக்கு உயர்ந்ததாக தோன்றும் . ஆனால் சாதாரண ஹிந்துவால் சகித்துக் கொள்ள முடியாது .இதற்கு என்ன செய்ய ? சகிக்க முடியாவிட்டால் அவற்றை கண்டனம் செய்து மறுதலிக்கலாம் . ஆனால் நீ உன் தரப்பையே / சம்ப்ரதாயத்தையே விட வேண்டும் என்று சொல்ல முடியுமா? உயிர் பலி விஷயத்தில் மட்டும் தான் அந்த நிலைப்பாடு சரியாகும் .

உ) சின்ன ஜீயர் பிற ஜகத்குருக்களை தாழ்த்தி பேசியது தவறில்லையா ?

ஜகத்குரு என்று ஒருவரைத்தான் சொல்ல முடியும் .எல்லோரும் ஜகத்குரு என்று சொல்ல முடியாது , அப்படி இருக்கும் போது தமது சம்ப்ரதாய ப்ரவர்த்தகரே ஜகத்குரு என்றும் பிறர் ஜகத்குருக்கள் அல்ல என்றும் சொல்வதற்கான முழுமையான உரிமை சின்ன ஜீயருக்கு இருக்கிறது என்றே நம்புகிறேன் .

ஊ) அவர்கள் அவர்களது சம்ப்ரதாய குருவிற்கு ஏற்றம் சொல்லட்டும் . ஆனால் பிறரிடம் ஏன் குறை காண வேண்டும் ?

எந்த தர்க்கம் விவாதம் என்றாலும் எதிர் தரப்பை கண்டிப்பது என்பது அனாதி காலமாக இருக்கும் வழக்கம் .உன் பொருள் தரமானது என்று சொல் என் பொருள் தரமற்றது என்று சொல்லாதே போன்ற வாதங்கள் இங்கு செல்லாது .

எ) எனில் ஆனந்த கணேஷ் சொன்னது தவறா ?

ஜீயருக்கு பிறரை கண்டிக்கும் உரிமை இருப்பது போல ஆனந்த கணேஷிற்கும் இருக்கிறது என்பது பால பாடம் .ஆனந்த கணேஷ் சங்கர மடங்கள் சில தேவை இல்லாத விஷயங்களில் தலையிட்ட போதும் முதல் ஆளாக கண்டனம் செய்தவர் . அதனால் அவர் கேள்விகளை எழுப்புவது சமய காழ்ப்பால் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . மனதிற்கு நிரடலாக இருந்ததால் சில கேள்விகளை எழுப்புகிறார் . அவ்வளவு தரன்.

என்ன நிரடல்?

எனது ஊகம் தான் .சரியா என்று அவர் தான் ஊர்ஜிதம் செய்ய வேண்டும் .

1) சின்ன ஜீயர் சாதாரண துறவி / மடாதிபதி அல்ல .அவர் பிரதமரையே விருந்தினராக அழைந்து பெரு விழா நடத்தியவர் . எனவே அவரது பிரகடனங்களின் அரசியல் என்னவென்ற ஐயம் இருக்கக்கூடும்

2) திருப்பதி கோவிலை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பல தரப்புகளும் மோதும் சூழலில் பெருமாளுக்கே குரு போன்ற பிரகடனங்கள் ஆனந்த கணேஷ் மட்டும் அல்ல சதிக்கோட்பாடுகள் குறித்த அடிப்படை ஆர்வம் உள்ளவர்களுக்கே கூட சந்தேகம் ஏற்படுத்தத்தக்கது தான் என்று எண்ணுகிறேன் .

சொல்ல விரும்பியதை ஓரளவு தெளிவாக சொல்லி விட்டேன் என எண்ணுகிறேன் .