குமரகுருபரர்,சைவ சித்தாந்தம்,அத்வைதம்?

Part-I

ஜடாயு இந்த பதிவில் ஒரு விஷயத்தைத் முன்வைக்கிறார் .https://www.facebook.com/jataayu.blo…/posts/771484679671400…
அவரது பிரதான வாதம் யாதெனில் குமரகுருபரர் அத்வைதத்தை வேதம் என்னும் வ்ருக்ஷத்தில் உதித்த தனியாகவும் ,சைவ சித்தாந்தத்தை அக்கனியின் சாறு என்றும் கூறுகிறார் என்பதாகும் .அவர் கூற விரும்புவது குமரகுருபரர் அத்வைதத்தை கண்டிக்க தக்க சித்தாந்தமாக கொள்ளவில்லை என்பது தான் .இதற்கான பதிலை பாப்போம் .

1.வேத வ்ருக்ஷம் என்னும் கருதுகோள் மிகவும் பழமையானது .வேதம் என்பது அனைத்து சாத்திரங்களும் அடிப்படையானது .சிக்ஷை முதல் ஜோதிடம் வரை அனைத்தும் வேதத்தோடு ஏதாவது ஒரு வகையில் இணைந்தவையே .வேதாந்தம் என்பது வேதத்தின் இறுதி பகுதியான ஆரண்யக உபநிஷத்துக்களை தான் குறிக்குமே அன்றி அத்வைதத்தை குறிக்காது .வறட்டு வேதாந்தம் என பாமரர் அத்வைதத்தை சொல்லக்கூடும் .ஆனாலும் அதிலும் கூட வறட்டு என்ற குண குறிப்பு இருப்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும் .

2.ஆரண்யம் ,உபநிடம் ஆகியற்றை வேதத்தின் கனி என்று குமரகுருபரர் கூறுவது பொருத்தமானது .அஃது வேத மரபின் உச்சப்புள்ளியான தத்துவங்களை தன்னனுள் கொண்டது .அந்த தத்துவங்கள் ஒன்றுக்கு ஓன்று பொருந்தாதவை போன்ற தோற்றங்கள் காட்டுவது .ஆனால் ஞானியரால் சமன்வயம் செய்யப்படத்தக்கது .அவ்வாறு முரண் நீக்கி காட்ட படும் அவரது மரபான சைவ சித்தாந்தத்தை தான் ஆரண்ய உடனிடங்களின் சாறு என்று கூறுகிறார் .ஓங்காரத்தில் தொடங்கி நான்மறை தாண்டி மறை முடிவிற்கு வந்து அதன் சாரான சைவ சித்தாந்தத்தை குறித்து கூறுகிறார் .இந்த வரிசையில் அத்வைதம் வந்தது எனில் அஃது அபஸ்வரமாக தான் இருக்கும் .

3.தத்துவ ஞானிகள் இடையே தெளிவான வரிசை ஓன்று உண்டு .சைவ சித்தாந்தத்தில் இருந்து அத்வைதத்திற்கு போகலாம் .ஆனால் அத்வைதத்தில் இருந்து சைவ சித்தாந்தத்திற்கு வர இயலாது .அத்வைதிகளின் தர்க்க நியாய படியும் கோட்பாடுகள் படியும் சைவ சித்தாந்தம் ஒரு சிறு வட்டம் எனில் அத்வைதம் அதனை உள்ளடக்கிய பெரிய வட்டம் .இதன் பிரகாரம் எந்த ஒரு சாதகனும் சிறு வட்டத்தில் இருந்து பெரிய வட்டத்திற்கு செல்லவே விரும்புவான் .கவி நியாயபடியும் குமரகுருபரர் முதலில் சைவத்தையும் அதன் பிறகு அத்வைதத்தையும் கூறி இருக்க வேண்டும் .அதாவது அவர் வேதாந்தம் என்ற சொல்லை அத்வைதம் எனும் பொருளில் பயன் படுத்தி இருந்தால் .ஆனால் குருபரர் சைவ சித்தாந்தத்தை தான் இறுதி பொருளாக காண்கிறார் .எனவே அவர் வேதாந்தம் என்னும் சொல்லை அத்வைதம் என்னும் பொருளில் பயன்படுத்தவில்லை என்பது வெள்ளிடை மலை .இந்நிலையில் சமய சமரசித்திற்கே பேச்சில்லை .

4.இதே நூலில்
“பல்வே றுரைக்குநர் சொல்வழிப் படாது
திவ்வியம் பழுத்த சைவசித் தாந்தத்
திறவா நிலைமைபெற் றின்பமார்ந் திருக்கும்
பிறவா நன்னெறி பெறப்புரி வதுவே”
என்று தெளிவாக முதலில் கூறுகிறார்
.
5..பெரும்பாலும் ஒரு சமய சான்றோருடைய தத்துவ போக்குகளை குறித்து ஆய்வு செய்ய வேண்டுமெனில் அவரால் எழுதப்பட்ட தத்துவ நூற்கள் ,அவர் வந்த தத்துவ மரபு ,அவரின் முன்னெடுத்த தத்துவ மரபு ஆகியற்றையே கணக்கில் கொள்ள வேண்டும் என்ற கருத்து உள்ளது .அவர்கள் எழுதிய தோத்திர நூற்களை கணக்கில் கொள்ளக்கூடாது என்றும் கூறுவர் .நான் அவ்வாறு எண்ணவில்லை .ஆனால் இதனை வலியுறுத்துபவர்கள் பெரும்பாலும் அத்வைதிகள் தான் .இல்லாவிடில் பஜ கோவிந்தத்தையும் ,விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தையும் வைத்து சங்கரரை பரம வைஷ்ணவராக்கிவிடலாம் .பஜ கோவிந்தத்தில் இல்லாத பிரபத்தி கருத்தா ?என்ன மற்கட மார்க்கம் .அவ்வளவு தான் .🙂

6..ஒரு குறிப்பிட்ட மரபில் வந்த ஆதீன கர்த்தர் /மடாதிபதி அந்நிறுவனத்தில் இருந்து கொண்டே அந்நிறுவனத்தின் ஆதார ஸ்ருதியான தத்துவ நிலைப்பாடுகளில் சமரசம் செய்து கொள்வார்களா ?

இன்றய காலத்தில் எதுவும் நடக்கும் .1000 வருடம் பழமையான ஒரு வைணவ மடத்தின் ஜீயர் தமது அந்தரங்க சிஷ்யர்கள் மற்றும் ஆப்தர்களிடம் அத்வைதம் தான் சரியான தத்துவம் ,அதனை புரிந்து கொள்ளும் பக்குவம் பாமர ஜனங்களுக்கு இல்லாததால் ராமானுஜர் விஷிஷ்டாத்வைதத்தை போதித்தார் என்றும் வேதத்தில் ஏது கோயிலும் கும்பாபிஷேகமும் என்றெல்லாம் பேசி வருகிறார் என்று கேள்வி .இவரெல்லாம் பஞ்ச சமஸ்காரம் செய்து வைத்து ……சரி விடுங்கள் .இத்தகைய சூழ்நிலைகளில் தான் ஸ்ரீ வைஷ்ணவ சுதர்சனம் புத்தூர் கிருஷ்ணசாமி ஐயங்காரின் மறைவு துன்பப்படுத்துகிறது .அவர் இருந்திருந்தார் என்றால், கோவிலை வைத்து பிழைப்பு நடத்திவிட்டு ,ராமானுஜ திக் கஜம் என்று கூறிக்கொண்டு ,இருக்கும் கிளையையே வெட்டும் இந்த முட்டாள் தனத்தை செய்யும் துணிவு இப்பெரியோர்களுக்கு வந்திருக்குமா ?(இந்த ஜீயர் மூத்த எழுத்தாளர் ஒருவரின் பால்ய ஸ்நேகிதராம் .நல்ல வேளை அவரை போல் இவரும் நேருவே பரம்பொருள் என்று கூறவில்லையே !.அம்மட்டிற்கு மகிழ்ச்சி )

நான் கூற விரும்புவதெல்லாம் இத்தகைய அறமற்ற செயல்களை அக்காலத்தில் செய்திருக்க மாட்டார்கள் என்பது தான் .குமரகுருபரர் சமரச வாதத்தை முன்வைக்க விரும்பி இருந்தால் அதனை ஒரு நூலாகவே யாத்திருப்பார் .அம்மரபை முன்னெடுக்க ஒரு தனி மதத்தையும் ஸ்தாபித்திருப்பார் .அக்காலகட்டங்களில் தத்துவ விசாரம் என்பது ஆன்ம விடுதலையுடன் இணைந்திருந்தது .அரசியல் சரி நிலைகளுடனல்ல. .

Part-II

ஜடாயுவுடனான குமரகுருபரர் விவாதம் தற்போது கீழ்க்கண்ட இரண்டு புள்ளிகளில் / கேள்விகளில் வந்து நிற்கிறது .
அ ) வேதாந்தம் என்பது குமரகுருபரர் காலத்தில் அத்வைத்தை தான் குறிக்கும்
ஆ) ஒரு வேளை அச்சொல் உப நிடங்களை குறிப்பதாக கருத்தில் கொண்டாலும் , சித்தாந்த சைவர்கள் வசம் தனிப்பட்ட உபநிட பாஷ்ய மரபு இல்லாததால் அவர்கள் அத்வைத மரபை சார்ந்த உரைகளை தானே கற்றிருப்பர் ?
பதில் :
அ) வேதாந்தம் என்ற சொல் குமரகுருபரர் காலத்திற்கு முன்னும் பின்னும் பொதுப்பொருளில் தான் புழங்கியது என்பதற்கு பல ஆதாரங்கள் , நூற் பெயர்கள் உள்ளன . ஒரு சில எளிய பொதுப்படையான உதாரணங்களை காண்போம் .குமரகுருபரருக்கு காலத்தால் மூத்தவர் வேதாந்த தேசிகர் .இதற்கு மேல் பூர்வ கால பரீக்ஷை வேண்டாம் என எண்ணுகிறேன் . அத்வைத மரபை சார்ந்தவர் எழுதிய தத்துவ ஒப்புமை நூலான ஶர்வ தர்ஶன ஶங்க்ரஹத்தின் உரையில் கூட வேதாந்தம் என்னும் சொல் அத்வைதம் என்னும் பொருளில் கைக் கொள்ளப்படவில்லை . உரையாசிரியர் தெளிவாக ஶங்கரதர்ஶனம் என்கிறார் ,
என் நினைவிற்கு எட்டிய வரையில் கைவல்ய நவநீதத்தின் மூலத்தில் வேதாந்தம் என்ற சொல் இல்லை . மேலும் பண்டிதர்களிடையே இத்தகைய சொற்கள் static ஆக தான் இருக்கும் .
ஆ) இதனை தான் ஆங்கிலத்தில் ” shifting the goal post ” என்பார்கள் என எண்ணுகிறேன் 🙂 .நாம் ஏன் சித்தாந்த சைவர்களிடம் உபநிட உரை இருந்திருக்காது என எண்ணுகிறோம் ? ஏன் எனில் அவர்கள் அத்தகைய உரைகளை குறித்து அதிகம் பேசுவதில்லை .எனவே அத்வைத மரபின் நூற்களை தான் கற்றல் கற்பித்தல் ஆகியவற்றிற்கு கைக்கொண்டிருப்பர் என எண்ணு கிறோம். ஆனால் உண்மை வேறு .இன்று வைகானஸ மரபின் தத்துவ போக்குகளை குறித்து இன்று யாரும் பேசுவதில்லை .இன்று மட்டுமல்ல .என்றுமே அவர்கள் கட்டுக்கோப்பான ஒரு குறுங் குழுவாக தான் இருந்தனர் .அவர்களிடையே கூட வைதானஸ பர மான ப்ரம்ஹ ஸுத்ர பாஷ்யம் இருந்திருக்கிறது ! அதிகமாக விவாதங்களில் ஈடுபடாத அவர்களே நூல் யாத்திருந்தனர் எனில் சித்தாந்த சைவர்கள் செய்திருக்க மாட்டார்களா ? சைவ சாத்திர நூலில் (சிவஞான சித்தியார்) தஸோபநிஷத் , அவற்றில் உள்ள முரண்பாடுகள் குறித்தெல்லாம் வருகிதே . அவர்களும் அதவைத நூற்களை தான் பயன்படுத்தியிருப்பார்களா ? அத்வைத பாஷ்யங்களைக் கொண்டு சித்தாந்த விளக்கங்கள் செய்தால் அதனை சித்தாந்திகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் தானே தீக்ஷிதர் ஸ்ரீகண்ட பாஷ்யத்தை எடுத்தாள்கிறார் ? எனவே இவ்வாதமும் ஏற்க தக்கது அன்று என்றே எண்ணுகிறேன் .
இவற்றை எல்லாம் தாண்டி அருள் நந்தி சிவம் போன்ற சம்ப்ரதாய ப்ரவர்த்தகர்கள் மாயா மத விளக்க கண்டனங்களை தமது நூற்களில் செய்துவிட்டபடியால் அம்மரபை ஏற்றுக் கொண்ட குமரகுருபரர் ஸமரஸ போக்கை கைக்கொண்டிருக்க மாட்டார் என்றே எண்ணுகிறேன் .

Part III

ஜடாயுவினுடனான குமரகுருபரர் பாடல்களில் அத்வைதம் என்னும் விவாதம் இடையில் தேங்கி நின்றது .சில பயணங்கள் ,ஆதி யோகி விவகாரம்,எனது மேஜை கணினியின் ஆரோக்கியம் ஆகியவை தான் இத்தேக்கத்திற்கு காரணம் .கடைசியாக விவாதம் இந்த புள்ளிகளில் நின்றது .ஜடாயு கீழ்கண்ட வாதங்களை வைத்தார் .

1.சைவ சித்தாந்திகள் உபநிஷத் பாஷ்யம் எழுதியிருப்பார்கள் என்பது ஊகமே .அவர்கள் தங்களுடைய வேதாந்த கல்விக்கு அத்வைத பாரமான நூற்களையே பயன்படுத்தியிருப்பர் .
2. வேதாந்தம் என்ற சொல் குமரகுருபரர் காலத்திற்கு முன்னும் பின்னும் பொதுபொருளில் தான் விளங்கியது .ஆனால் அது துறை வல்லுனர்களிடையே மட்டுமே அவ்வாறு புழங்கியது .பாமர ஜனங்கள் வேதாந்தம் என்றால் அத்வைதம் என்றே கருதினர் .
3.//வேதாந்தம் என்ற குடைக்கீழ் தான் உள்ளோம் என்று சைவ, வைஷ்ணவ, துவைத மஹானுபாவர்கள் சொல்வார்களேயானால் அது எனக்குப் பெருமகிழ்ச்சியையே அளிக்கும், புகைச்சலை அல்ல//- அவரது மற்றொரு நிலைப்பாடு .
4.//சங்கரரின் அத்வைத வேதாந்தம் என்பது அதன் முன்னோடித் தன்மை காரணமாகவே ஒரு Benchmark போல அமைந்தது என்பதை எல்லா தத்துவ ஆசிரியர்களுமே ஏற்கிறார்கள். வேதாந்த தத்துவத்திற்கான ஆதார சட்டகமான பிரஸ்தான த்ரயம் (உபநிஷத், பிரம்மசூத்ரம், கீதை) என்பதே சங்கரர் உருவாக்கியது தான்.//

பதில்கள்

1.சைவ ஆச்சார்யர்கள் வேதாந்த நூற்களுக்கு தனி உரைகள் எழுதியிருக்கமாட்டார்கள் என்பது எழுதியிருப்பார்கள் என்பதை விட பலமற்ற ஊகமே 🙂.நாம் ஒரு சிறிய உதாரணத்தை பார்ப்போம் .மாத்வர்கள் குமரில பட்டரின் பட்ட மீமாம்ஸத்தை பூர்வ பக்ஷமாக பாடம் கேட்பது உண்டு .அதாவது பட்ட மீமாம்சத்தில் உள்ள குறைகளை தெரிந்துகொள்ளவும் ,அந்த சித்தாந்திகளை வாதில் வெல்வதற்காகவும் இந்த நூலை படிப்பார்கள் .இத்தகைய ஒரு தேவை மட்டும் தான் அவர்களுக்கு இருந்தது .ஆனால் இதற்காகவே ஸ்ரீ ராகவேந்திரர் “பட்ட சங்கிரஹம் ” என்னும் நூலை எழுதினார் .இன்றளவும் பல மீமாம்சிகர்களுக்கே இந்நூல் பிரமாண நூலாக இருக்கிறது .இது தான் அந்நாளைய பழக்கம் .யாரும் யாரிடமும் அறிவு கடன் வாங்க மாட்டார்கள் .ஸ்ரீ ராகவேந்திரரின் தனி சிறப்பு அவர் பரபக்ஷ நூலுக்கே பாஷ்யம் கண்டார் என்பது .சைவர்கள் வேதாந்த நூற்கள் ஸ்வபக்ஷம் என்னும் எண்ணத்தோடு அவற்றுக்கு பாஷ்யம் எழுதி இருக்க மாட்டார்களா ?ஸ்ரீகண்ட பாஷ்யம் அப்பைய தீக்ஷிதரின் கைவண்ணம் அல்ல என்று ஜடாயு எண்ணினால் அதுவே கூட சித்தாந்த சைவர்களின் நூற்களுள் ஒன்றாகி விடும் .அதை விடுங்கள் ,சிவ ஞான யோகி,அதர்வசிகா ,அதர்வசிர ,ஸ்வேதேஸ்வர ,கைவல்ய உபநிஷத்துக்களை நிர்ணய உபநிஷத்துக்களாக கூறி அவற்றை கொண்டு ஏனையவற்றை சமன்வயம் செய்ய வேண்டும் என்கிறாரே ….தனியான உபநிட விளக்க பாரம்பரியம் இல்லாமல் இப்படி சொல்லி இருக்க வாய்பில்லையே .எனவே எமது நிலைப்பாடு தான் பொருத்தமாக வருகிறது என் எண்ணுகிறேன்
.
2.வேதாந்தம் என்பது பண்டிதரிடையே அத்வைதத்தை சுட்டி காட்டவில்லை என்பதை ஒத்து கொண்டதற்கு நன்றி .குமரகுருபரர் பாமரர் இல்லை என்பதில் நமக்கிடையே வேறுபாடு இருக்காது என்றே எண்ணுகிறேன் .எனவே குமரகுருபரர் வேதாந்தம் என்னும் சொல்லை வேத இறுதியான தத்துவ பகுதிகளை சுட்டி காட்டவே பயன் படுத்தியிருப்பர் என்பது உறுதி .எனவே வேதாந்தம் என்னும் சொல் அத்வைதத்தை குறிக்கிறது என்ற வாதம் அர்த்தமற்றது ஆகி விடும் .
3.ஒரு குடை கீழ் உள்ளவற்றில் அத்வைதம் உட்பட பல மரபுகள் உண்டு .அத்வைதத்தை குடைக்கு வெளியே கொண்டுபோவதோ அல்லது அத்வைதத்தை குடையாக மாற்றுவதோ தான் பிரச்சனை .
4.அத்வைதம் சங்கரருக்கு சில காலம் முன்னரே தோன்றியது .நீங்களே த்ரவிடாச்சாரியாரை குறித்தெல்லாம் கூறி இருக்கிறீர்கள் .சங்கரரும் தமது பூர்வாச்சரியர்களை ,பூர்வ அத்வைதிகளை குறித்து அங்கும் இங்குமாக கூறுகிறார் .பிரஸ்தான த்ரயம் சங்கரரின் கண்டுபிடிப்பல்ல .அவருக்கு முன்னரே அத்வைதிகள் அல்லாத வைதீக தத்துவ ஞானிகள் இருந்துள்ளனர் .உதாரணம் : ப்ரம்ம தத்தர் .
இறுதியாக மறுபடியும் ஒரு விஷயத்தை அழுத்தி கூற விரும்புகிறேன் .”நானே ப்ரம்மம் என்று உரைத்து ஞாலம் பேய்த்தேர் என எண்ணி /ஊனே புகுந்து நின்று உயிர்கட்கு உபதேசங்கள் உரைத்து வரும்/மானா மதி கேடனும் ஆய மாயாவதி பேயாகி /தானே உரைக்கும் அந்நூலின் உண்மை தன்னை சாற்றுவோம் ” என்னும் மரபில் வந்தவர் குமரகுருபரர் .அவர் மரபில் சமரசங்கள் செய்ய விரும்பி இருந்தால் அதனை போகிற போக்கில் இப்படி செய்திருக்க மாட்டார் .

இந்த விவாதம் சுவாரஸ்யமான பல விஷயங்களை வெளிக்கொண்டு வந்தது .ஒரு வகையில் பார்த்தால் ஜடாயுவின் வாதம் சுமார் 100 வருடங்கள் பழமையானது .இந்த வாதத்தின் உருவாக்கத்தை பற்றிய கட்டுரை ஒன்றும் எழுதும் எண்ணம் உள்ளது .அதற்க்கு என் மேஜை கணினியில் நான் எடுத்த குறிப்புகளை ,தரவுகளை மீட்க வேண்டும் .பார்ப்போம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s