மதப்பற்றும் ,ஆன்மீக மோசடிக்கு எதிராக குரல் கொடுத்தலும்

அந்த பேராசிரியர் ஹாவர்டிலும் ஆக்ஸ்ஃபோர்டிலும் படித்தவர் .ஆக்ஸ்ஃபோர்டில் அவர் கற்றது கிறித்தவ இறையியல் .எனக்கு மேற்கத்திய தத்துவ நூற்களையும் கிறித்தவ தத்துவ மரபையும் அறிமுகபடுத்தி வைத்தவர் அவர் தான் . பல நேரங்களில் அவருடன் அனல் பறக்கும் தத்துவ விவாதங்கள் செய்திருக்கிறேன் . அவர் சுமார் இருபது வருடங்களுக்கு முன்னரே,காருண்யா குழுமத்திற்கு எதிராக ஏராளமான போராட்டங்களை சமூகவியல் தளத்திலும் , இறையியல் தளத்திலும் செய்தவர் .அவர்களது நிதி மேலாண்மை , பல்கலைக்கழக சேர்க்கை போன்றவற்றை கடுமையாக சாடினார் . அக்காலங்களில் அக்குழுமம் தங்க சாவி திட்டம் என்ற பெயரில் ஒரு விஷயத்தை செய்து வந்தார்கள் .அதனை கிண்டல் செய்து பல இடங்களில் உரையாற்றினார் .இது தவிர இறையியல் தளத்திலும் இயேசு அழைக்கிறார் குழுமத்தை எதிர்த்து போராடினார் .இறந்து போன தமது மகள் வாயிலாக கிறித்துவுடன் தாம் தினசரி பேசுவதாக பெரிய தினகரன் கூறி வந்த காலம் அது .பேராசிரியர் ,இச்செயலை ,துணிந்து necromancy என்றார் .பல போதகர்களிடமும் , ஆயர்களிடமும் , பேராயர்களிடமும் இதனை அழுத்தம் திருத்தமாக கூறினார் .இறையியல் கல்லூரிகளில் உரையாற்ற செல்லும் போதும் இதனை சுட்டிக் காட்டுவார் .அவர் வேலை பார்த்த இடத்தில் , அவர் உறவினரிடையே எல்லாம் அவருக்கு எதிர்ப்பு பெருகியது .ஒரு கட்டத்தில், ஆவிகளை வைத்து ஏவல் செய்யும் நற்செய்தியாளர்களும் அவர்களுக்கு பணம் கொடுத்தோ , இடம் கொடுத்தோ , ஆள் சேர்த்து கொடுத்தோ உதவுபவர்களும் லூசிபரின் விருந்தாளிகளாக தான் மாறுவார்கள் என்று பகிரங்கமாக அறிவித்தார் .அவருக்கு ஏதாவது அபத்து வந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் நான் , ” விட்டு தொலைங்க சார் . ஏமாற ரெடியா இருந்தா யார் என்ன பண்ண முடியும் .நீங்க இப்படி ” ஃபத்வா ” எல்லாம் கொடுத்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை” என்றேன் .அவர் அதனை எல்லாம் கேட்கவில்லை .ஆன்மீக மோசடி என்று தான் கருதும் ஒரு விஷயத்திற்கு எதிராக குரல் கொடுக்காவிட்டால் தமது இறையியல் கல்வி என்ன டாஷுக்கு என்று உறுமி விட்டு சென்றார் .இன்றளவும் அவரது திட சித்தத்தை ,தீர்மானத்தை மதிக்கிறேன்.நம் சாமியார்களை குறித்து நாமே விமர்சிக்கலாமா என்னும் நண்பர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்  ( பிகு: காலம் செய்த கோலம் .இப்போது ஐரோப்பிய நாடு ஒன்றில் இருக்கும் அவர் ,மீம்ஸ் வழியாக மெய்நிகர் புரட்சியை கொண்டு வர அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறார் : ) )

Advertisements

சைவ சித்தாந்தம்,அத்வைதம்

நேற்று நண்பர் ஒருவருடன் ஒரு சிறு விவாதம் நடந்தது .நண்பர் பதினைந்தாம் நூற்றாண்டிற்கு பிறகு சைவ சித்தாந்தம் அத்வைதத்தோடு பல சமரசங்களை செய்து அத்வைத கோட்பாடுகளை தன்னுள் எடுத்துக்கொண்டதாக கூறினார் .மேலும் அவர் சைவ சித்தாந்தம்  என்பது வைணவத்தை போல இறுக்கமானதல்ல என்றும் ,பல்வேறு போக்குகளை கொண்ட தொகை சமயம் எனவும் கூறினார் .இதற்கான சான்றுகள் திருமந்திரத்தில் இருப்பதாகவும் ,மேலும் குமரகுருபரன் நூற்களிலும் இது உண்டு எனவும் சுட்டிக்காட்டினார் .தாயுமானவரையும் இம்மரபை சார்ந்தவராக கொள்ளலாம் என்றும் கூறினார் .நான் சித்தாந்த சைவத்தையோ காஷ்மீர சைவத்தையோ அச்சமய ஆச்சாரியர்களிடம் பாடம் செய்து கொண்டவன் அல்ல .இந்த பிரிவுகளையும் வேறு பல இந்திய சமயங்களையும் எம் சமய மெய்யியல் பாடத்தின் போது பூர்வ பக்ஷம் என்ற முறையில் அறிந்துகொண்டது தான் .தவிர முதுகலை தத்துவம் பயின்ற போதும் தனிப்பட்ட ஆர்வத்தில் அறிமுகம் செய்து கொண்டேன் .இச்சமய வல்லுனர்களுடன் தொடர்ந்து உரையாடலிலும் இருக்கிறேன் .எனது நண்பர் சைவ அத்வைதம் அல்லது சிவாத்வைதம் என்னும் தத்துவ பள்ளியை குறித்துதான் கூறுகிறார் என்பது எனது எண்ணம் .பதினொன்றாம் நூற்றாண்டில் ஸ்ரீகண்டர் (நீல கண்டர் ) என்பவர் ப்ரஹ்மஸூத்ரத்திற்கு சைவ பரமான பாஷ்யம் ஒன்றை எழுதியிருக்கிறார் .இதற்கு பதினாறாம் நூற்றாண்டை சார்ந்த ஸ்மார்த்த சம்பிரதாய ப்ரவர்த்தகரான அப்பைய தீக்ஷிதர் “சிவார்க்க மணி தீபிகா ” என்னும் விளக்கத்தை எழுதியுள்ளார் .இந்த நூல் வழியாக தான் தமிழகத்தில் சிவ அத்வைத மதம் நுழைந்தது என் எண்ணுகிறேன் .”…..நமோ அஹம் …….லோஹானாம் சித்தி ஹேதுவே / சச்சிதானந்த ரூபாய சிவாய பரமாத்மனே // என்று மூல நூல் தொடங்கும் .ஸ்ரீ கண்ட பாஷ்யமே அப்பய்ய தீக்ஷிதரின் கைவண்ணம் தான் எனக்கூறுபவர்களும் உண்டு .தீக்ஷிதர்,மாத்வ ,ஸ்ரீ வைஷ்ணவ மற்றும் வீர சைவ ஆச்சார்யர்களிடம் கடும் வாத பிரதிவாதங்களில் ஈடு பட்டிருந்தார் .ஒரு வகையில் பார்க்க போனால் அப்பய்ய தீக்ஷிதரின் சைவாத்வைதம் தான் காஞ்சி மடம் உட்பட பல இடங்களில் புழக்கத்தில் இருப்பதாக தோன்றுகிறது .ப்ரஹ்ம ஞானம் சிவகடாக்ஷம் இன்றி கிடைக்காது என்று தீக்ஷிதர் கூறுகிறார் .எது எப்படியோ .நமது ஆதி சைவர்களும் ,சைவ ஆதீன கர்த்தர்களும் இந்த வடிவத்தில் உள்ள சைவத்தை ஏற்று கொண்டிருக்க வாய்ப்பில்லை .ஏன் எனில் இது சைவ சித்தாந்த மூல நூற்களுக்கும் ,சிவாகமங்களுக்கும் முரணானது .இணைப்பில் உள்ள கட்டுரை காஷ்மீர சைவத்திற்கும் அத்வைதத்திற்கும் உள்ள வேறுபாடுகளை அழகாக விளக்குகிறது . . இது ஆரம்ப நிலையினருக்கு பயன் தரும் என எண்ணுகிறேன்.http://shaivism.net/articles/11.html

தமிழகத்தில் இருந்த சமணர்கள் அழித்தொழிக்கப்பட்டார்களா ?

அரவிந்தன் கன்னையன், ஜெயமோகனின் ஜக்கி குறித்த பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக சில பதிவுகளை எழுதியுள்ளார் .( எனது மேஜை கணினியின் ஆரோக்யத்தை பொறுத்து நானும் ஒரு மறுப்பு எழுத வாய்ப்புண்டு .) .அப்பதிவுகளில் அ.க. ,சமணர்களை தமிழகத்திலிருந்து சைவர்கள் துரத்தினார்கள் என்றும் , சைவ சமயம் சமண சமயத்தை வேரறுத்து விட்டது என்றும் பல முறை கூறுகிறார் .இதில் எள்ளளவும் உண்மையில்லை . சமணத்திற்கும் சைவத்திற்கும் இடையே பல வாத பிரதிவாதங்கள் நடந்தன .வைணவத்துடனும் சமணம் அவ்வாறு மோதியுள்ளது .ஆனால் இந்த மோதல்கள் எல்லாம் அறிவுசார் தளங்களில் நடந்ததே அன்றி தெருக்களில் அல்ல . அ .க . திராவிட இயக்கங்களை தமது கட்டுரைகளில் போட்டு தாக்குகிறார் . அதற்கென்று அவர் திராவிட இயக்கத்தவர்களை literal ஆக ஒழிக்கும் முயற்சியில் ஈடு பெற்றிருக்கிறார் என்று கூற முடியுமா ? அப்படி தான் இதுவும் . சைவ சமயத்தவர்கள் தான் இவற்றை பற்றி கூறுகிறார்களே அன்றி சமண நூற்கள் ஏதும் அழததொழிப்பை குறித்து கூறவில்லை .அவர்கள் இன்றளவும் கர்நாடகத்தில் அதிகளவில் உள்ளனர் . சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜைன சமய ஆச்சாரியர் ஒருவர் தெளிவாகவே அழித்தொழிப்பொன்றும் நடக்கவில்லை என்று கூறிவிட்டார் (விகடன் தீபாவளி மலர்) .
இனி அரவிந்தன் கன்னையனின் அடுத்த கேள்விக்கு வருவோம் .சங்க காலத்தில் கொடி கட்டி பறந்த தமிழ் சமணர்கள் எப்படி காணாமல் போனார்கள் / அழிந்து போனார்கள் .முதலில் நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் .தமிழ் பேசும் சமணர்கள் அழிந்து ஒன்றும் போகவில்லை .அவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது . அவ்வளவு தான் . தமிழ் சமணர் ஒருவர் சமீப காலத்தில் கூட உயர் கல்வி துறை அமைச்சராக இருந்தார் .பல ஆய்வாளர்களை விட தமிழக அரசியல் வரலாற்றை நன்றாக தெரிந்து வைத்திருக்கும் அ.க .விற்கு இது தெரியாமல் இருக்காது . ஏனையவர்களுக்கு ஒரு துப்பு . அவர் இயற்பெயர் சிகாமணி . இன்றளவும் சித்ரா பெளர்ணமியன்று ஆயிரகணக்கான தமிழ் ஜைனர்கள் திருவண்ணாமலை அருகே கூடுகிறார்கள் .இதை பற்றியெல்லாம் நமது பேராசிரியர்கள் ஆய்வு செய்ய மாட்டார்கள் . ஃபோர்டு நிதியும் வராது .என்னை போன்றவர்களுக்கு அதற்கான வாய்ப்பும் வசதியும் இல்லை . ( இங்கே ஒரு சிறு யூகம் .யூகம் மட்டுமே . அ க வின் முன்னோர்கள் கூட ஒரு வேளை தமிழ் ஜைனர்களாக இருந்திருக்கலாம் .அவர் தான் இது சரியாக இருக்க வாய்ப்பு உண்டா ? அல்லது குருட்டு பூனை இருட்டில் விட்டத்தில் பாய்ந்த கதை தானா என்று கூற வேண்டும் ) . தமிழகத்தில் அதிகம் வசிக்காத சுஜாதாவிற்கு இச்செய்திகள் தெரிந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது . ( ஆதாரம் : முழு வைத்தியன் சிறுகதை ) .
இனி அடுத்த கேள்வி : எப்படி அவர்கள் எண்ணிக்கை குறைந்தது ? நான் இதற்கு இரண்டு காரணங்களை முன்வைப்பேன் .அ) கடும் நியமங்கள் இருக்கும் மதம் எனில் காலப்போக்கில் எண்ணிக்கை குறையும் ஆ ) அன்னிய படை எடுப்பாளர்களுக்கு இவர்கள் soft target ஆக இருந்திருப் பார்கள் .
இந்த விஷயத்தையும் நாம் தமிழகத்தில் 2000 வருடங்களாக இருக்கும் மற்றொரு மத + இன குழுவினருடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம் . வைகானஸர் என்னும் வைணவ அர்ச்சக பிரிவை குறித்து கேள்வி பட்டிருக்கிறீர்களா? எப்படி சைவர்களிடையே ஆதி சைவ சிவாச்சாரியர்களோ அது போல ஒரு காலத்தில் வைணவர்களிடையே வைகானஸர்கள் . சுமார் 2000 வருடங்களாக தமிழகத்தில் உள்ளனர் .பரிமேல் அழகர் வைகானஸரே .ராமானுஜர் இவர்களுடன் தான் ஸ்ரீரங்கம் கோவில் உரிமைக்காக போராடினார் .இவர்களை விலக்கி தான் ஸ்ரீரங்கத்தில் வேறு பத்ததி கொண்டு வந்தார் .( ஆனால் இவ்விவகாரத்தில் அரங்கன் வைகான ஸர்களையே ஆதரித்தான் என குரு பரம்பரா நூற்களே கூறுகின்றன ! 🙂.) .இன்றும் திருப்பதியில் வைகானஸ பத்ததி தான் உள்ளது .ஆனால் இன்று தமிழகத்தில் வைகானஸர்கள் எண்ணிக்கை தமிழ் ஜைனர்களுடைய எண்ணிக்கையை விட குறைவு . இதற்கு இரண்டு காரணங்கள் : அ) கோவில்களை கொள்ளையடிக்க வந்தவர்கள் முதலில் கொன்றது இவர்களை தான் . Soft target . மேலும் இவர்களிடம் தான் பொக்கிஷ விவரம் இருக்கும் .ஆ) வைகா னஸத்தில் மதம் மாறி சேருவதெல்லாம் நடக்காது . தீக்ஷை கர்ப கால தீக்ஷை .ஒருவன் வைகானஸனாக வேண்டும் எனில் வைகானஸ பெற்றோர்களுக்கு மகனாக பிறக்க வேண்டும் .இந்த விதி புதிதாக ஆட்கள் சேருவதை குறைத்தது .எனவே எண்ணிக்கை குறைந்தே வந்தது .இவ்விஷயங்களை நாம் தமிழ் சமணர்கள் வரலாற்றில் பொருத்தி பார்க்க வேண்டும் .

LikeShow More Reactions

Comment

குமரகுருபரர்,சைவ சித்தாந்தம்,அத்வைதம்?

Part-I

ஜடாயு இந்த பதிவில் ஒரு விஷயத்தைத் முன்வைக்கிறார் .https://www.facebook.com/jataayu.blo…/posts/771484679671400…
அவரது பிரதான வாதம் யாதெனில் குமரகுருபரர் அத்வைதத்தை வேதம் என்னும் வ்ருக்ஷத்தில் உதித்த தனியாகவும் ,சைவ சித்தாந்தத்தை அக்கனியின் சாறு என்றும் கூறுகிறார் என்பதாகும் .அவர் கூற விரும்புவது குமரகுருபரர் அத்வைதத்தை கண்டிக்க தக்க சித்தாந்தமாக கொள்ளவில்லை என்பது தான் .இதற்கான பதிலை பாப்போம் .

1.வேத வ்ருக்ஷம் என்னும் கருதுகோள் மிகவும் பழமையானது .வேதம் என்பது அனைத்து சாத்திரங்களும் அடிப்படையானது .சிக்ஷை முதல் ஜோதிடம் வரை அனைத்தும் வேதத்தோடு ஏதாவது ஒரு வகையில் இணைந்தவையே .வேதாந்தம் என்பது வேதத்தின் இறுதி பகுதியான ஆரண்யக உபநிஷத்துக்களை தான் குறிக்குமே அன்றி அத்வைதத்தை குறிக்காது .வறட்டு வேதாந்தம் என பாமரர் அத்வைதத்தை சொல்லக்கூடும் .ஆனாலும் அதிலும் கூட வறட்டு என்ற குண குறிப்பு இருப்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும் .

2.ஆரண்யம் ,உபநிடம் ஆகியற்றை வேதத்தின் கனி என்று குமரகுருபரர் கூறுவது பொருத்தமானது .அஃது வேத மரபின் உச்சப்புள்ளியான தத்துவங்களை தன்னனுள் கொண்டது .அந்த தத்துவங்கள் ஒன்றுக்கு ஓன்று பொருந்தாதவை போன்ற தோற்றங்கள் காட்டுவது .ஆனால் ஞானியரால் சமன்வயம் செய்யப்படத்தக்கது .அவ்வாறு முரண் நீக்கி காட்ட படும் அவரது மரபான சைவ சித்தாந்தத்தை தான் ஆரண்ய உடனிடங்களின் சாறு என்று கூறுகிறார் .ஓங்காரத்தில் தொடங்கி நான்மறை தாண்டி மறை முடிவிற்கு வந்து அதன் சாரான சைவ சித்தாந்தத்தை குறித்து கூறுகிறார் .இந்த வரிசையில் அத்வைதம் வந்தது எனில் அஃது அபஸ்வரமாக தான் இருக்கும் .

3.தத்துவ ஞானிகள் இடையே தெளிவான வரிசை ஓன்று உண்டு .சைவ சித்தாந்தத்தில் இருந்து அத்வைதத்திற்கு போகலாம் .ஆனால் அத்வைதத்தில் இருந்து சைவ சித்தாந்தத்திற்கு வர இயலாது .அத்வைதிகளின் தர்க்க நியாய படியும் கோட்பாடுகள் படியும் சைவ சித்தாந்தம் ஒரு சிறு வட்டம் எனில் அத்வைதம் அதனை உள்ளடக்கிய பெரிய வட்டம் .இதன் பிரகாரம் எந்த ஒரு சாதகனும் சிறு வட்டத்தில் இருந்து பெரிய வட்டத்திற்கு செல்லவே விரும்புவான் .கவி நியாயபடியும் குமரகுருபரர் முதலில் சைவத்தையும் அதன் பிறகு அத்வைதத்தையும் கூறி இருக்க வேண்டும் .அதாவது அவர் வேதாந்தம் என்ற சொல்லை அத்வைதம் எனும் பொருளில் பயன் படுத்தி இருந்தால் .ஆனால் குருபரர் சைவ சித்தாந்தத்தை தான் இறுதி பொருளாக காண்கிறார் .எனவே அவர் வேதாந்தம் என்னும் சொல்லை அத்வைதம் என்னும் பொருளில் பயன்படுத்தவில்லை என்பது வெள்ளிடை மலை .இந்நிலையில் சமய சமரசித்திற்கே பேச்சில்லை .

4.இதே நூலில்
“பல்வே றுரைக்குநர் சொல்வழிப் படாது
திவ்வியம் பழுத்த சைவசித் தாந்தத்
திறவா நிலைமைபெற் றின்பமார்ந் திருக்கும்
பிறவா நன்னெறி பெறப்புரி வதுவே”
என்று தெளிவாக முதலில் கூறுகிறார்
.
5..பெரும்பாலும் ஒரு சமய சான்றோருடைய தத்துவ போக்குகளை குறித்து ஆய்வு செய்ய வேண்டுமெனில் அவரால் எழுதப்பட்ட தத்துவ நூற்கள் ,அவர் வந்த தத்துவ மரபு ,அவரின் முன்னெடுத்த தத்துவ மரபு ஆகியற்றையே கணக்கில் கொள்ள வேண்டும் என்ற கருத்து உள்ளது .அவர்கள் எழுதிய தோத்திர நூற்களை கணக்கில் கொள்ளக்கூடாது என்றும் கூறுவர் .நான் அவ்வாறு எண்ணவில்லை .ஆனால் இதனை வலியுறுத்துபவர்கள் பெரும்பாலும் அத்வைதிகள் தான் .இல்லாவிடில் பஜ கோவிந்தத்தையும் ,விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தையும் வைத்து சங்கரரை பரம வைஷ்ணவராக்கிவிடலாம் .பஜ கோவிந்தத்தில் இல்லாத பிரபத்தி கருத்தா ?என்ன மற்கட மார்க்கம் .அவ்வளவு தான் .🙂

6..ஒரு குறிப்பிட்ட மரபில் வந்த ஆதீன கர்த்தர் /மடாதிபதி அந்நிறுவனத்தில் இருந்து கொண்டே அந்நிறுவனத்தின் ஆதார ஸ்ருதியான தத்துவ நிலைப்பாடுகளில் சமரசம் செய்து கொள்வார்களா ?

இன்றய காலத்தில் எதுவும் நடக்கும் .1000 வருடம் பழமையான ஒரு வைணவ மடத்தின் ஜீயர் தமது அந்தரங்க சிஷ்யர்கள் மற்றும் ஆப்தர்களிடம் அத்வைதம் தான் சரியான தத்துவம் ,அதனை புரிந்து கொள்ளும் பக்குவம் பாமர ஜனங்களுக்கு இல்லாததால் ராமானுஜர் விஷிஷ்டாத்வைதத்தை போதித்தார் என்றும் வேதத்தில் ஏது கோயிலும் கும்பாபிஷேகமும் என்றெல்லாம் பேசி வருகிறார் என்று கேள்வி .இவரெல்லாம் பஞ்ச சமஸ்காரம் செய்து வைத்து ……சரி விடுங்கள் .இத்தகைய சூழ்நிலைகளில் தான் ஸ்ரீ வைஷ்ணவ சுதர்சனம் புத்தூர் கிருஷ்ணசாமி ஐயங்காரின் மறைவு துன்பப்படுத்துகிறது .அவர் இருந்திருந்தார் என்றால், கோவிலை வைத்து பிழைப்பு நடத்திவிட்டு ,ராமானுஜ திக் கஜம் என்று கூறிக்கொண்டு ,இருக்கும் கிளையையே வெட்டும் இந்த முட்டாள் தனத்தை செய்யும் துணிவு இப்பெரியோர்களுக்கு வந்திருக்குமா ?(இந்த ஜீயர் மூத்த எழுத்தாளர் ஒருவரின் பால்ய ஸ்நேகிதராம் .நல்ல வேளை அவரை போல் இவரும் நேருவே பரம்பொருள் என்று கூறவில்லையே !.அம்மட்டிற்கு மகிழ்ச்சி )

நான் கூற விரும்புவதெல்லாம் இத்தகைய அறமற்ற செயல்களை அக்காலத்தில் செய்திருக்க மாட்டார்கள் என்பது தான் .குமரகுருபரர் சமரச வாதத்தை முன்வைக்க விரும்பி இருந்தால் அதனை ஒரு நூலாகவே யாத்திருப்பார் .அம்மரபை முன்னெடுக்க ஒரு தனி மதத்தையும் ஸ்தாபித்திருப்பார் .அக்காலகட்டங்களில் தத்துவ விசாரம் என்பது ஆன்ம விடுதலையுடன் இணைந்திருந்தது .அரசியல் சரி நிலைகளுடனல்ல. .

Part-II

ஜடாயுவுடனான குமரகுருபரர் விவாதம் தற்போது கீழ்க்கண்ட இரண்டு புள்ளிகளில் / கேள்விகளில் வந்து நிற்கிறது .
அ ) வேதாந்தம் என்பது குமரகுருபரர் காலத்தில் அத்வைத்தை தான் குறிக்கும்
ஆ) ஒரு வேளை அச்சொல் உப நிடங்களை குறிப்பதாக கருத்தில் கொண்டாலும் , சித்தாந்த சைவர்கள் வசம் தனிப்பட்ட உபநிட பாஷ்ய மரபு இல்லாததால் அவர்கள் அத்வைத மரபை சார்ந்த உரைகளை தானே கற்றிருப்பர் ?
பதில் :
அ) வேதாந்தம் என்ற சொல் குமரகுருபரர் காலத்திற்கு முன்னும் பின்னும் பொதுப்பொருளில் தான் புழங்கியது என்பதற்கு பல ஆதாரங்கள் , நூற் பெயர்கள் உள்ளன . ஒரு சில எளிய பொதுப்படையான உதாரணங்களை காண்போம் .குமரகுருபரருக்கு காலத்தால் மூத்தவர் வேதாந்த தேசிகர் .இதற்கு மேல் பூர்வ கால பரீக்ஷை வேண்டாம் என எண்ணுகிறேன் . அத்வைத மரபை சார்ந்தவர் எழுதிய தத்துவ ஒப்புமை நூலான ஶர்வ தர்ஶன ஶங்க்ரஹத்தின் உரையில் கூட வேதாந்தம் என்னும் சொல் அத்வைதம் என்னும் பொருளில் கைக் கொள்ளப்படவில்லை . உரையாசிரியர் தெளிவாக ஶங்கரதர்ஶனம் என்கிறார் ,
என் நினைவிற்கு எட்டிய வரையில் கைவல்ய நவநீதத்தின் மூலத்தில் வேதாந்தம் என்ற சொல் இல்லை . மேலும் பண்டிதர்களிடையே இத்தகைய சொற்கள் static ஆக தான் இருக்கும் .
ஆ) இதனை தான் ஆங்கிலத்தில் ” shifting the goal post ” என்பார்கள் என எண்ணுகிறேன் 🙂 .நாம் ஏன் சித்தாந்த சைவர்களிடம் உபநிட உரை இருந்திருக்காது என எண்ணுகிறோம் ? ஏன் எனில் அவர்கள் அத்தகைய உரைகளை குறித்து அதிகம் பேசுவதில்லை .எனவே அத்வைத மரபின் நூற்களை தான் கற்றல் கற்பித்தல் ஆகியவற்றிற்கு கைக்கொண்டிருப்பர் என எண்ணு கிறோம். ஆனால் உண்மை வேறு .இன்று வைகானஸ மரபின் தத்துவ போக்குகளை குறித்து இன்று யாரும் பேசுவதில்லை .இன்று மட்டுமல்ல .என்றுமே அவர்கள் கட்டுக்கோப்பான ஒரு குறுங் குழுவாக தான் இருந்தனர் .அவர்களிடையே கூட வைதானஸ பர மான ப்ரம்ஹ ஸுத்ர பாஷ்யம் இருந்திருக்கிறது ! அதிகமாக விவாதங்களில் ஈடுபடாத அவர்களே நூல் யாத்திருந்தனர் எனில் சித்தாந்த சைவர்கள் செய்திருக்க மாட்டார்களா ? சைவ சாத்திர நூலில் (சிவஞான சித்தியார்) தஸோபநிஷத் , அவற்றில் உள்ள முரண்பாடுகள் குறித்தெல்லாம் வருகிதே . அவர்களும் அதவைத நூற்களை தான் பயன்படுத்தியிருப்பார்களா ? அத்வைத பாஷ்யங்களைக் கொண்டு சித்தாந்த விளக்கங்கள் செய்தால் அதனை சித்தாந்திகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் தானே தீக்ஷிதர் ஸ்ரீகண்ட பாஷ்யத்தை எடுத்தாள்கிறார் ? எனவே இவ்வாதமும் ஏற்க தக்கது அன்று என்றே எண்ணுகிறேன் .
இவற்றை எல்லாம் தாண்டி அருள் நந்தி சிவம் போன்ற சம்ப்ரதாய ப்ரவர்த்தகர்கள் மாயா மத விளக்க கண்டனங்களை தமது நூற்களில் செய்துவிட்டபடியால் அம்மரபை ஏற்றுக் கொண்ட குமரகுருபரர் ஸமரஸ போக்கை கைக்கொண்டிருக்க மாட்டார் என்றே எண்ணுகிறேன் .

Part III

ஜடாயுவினுடனான குமரகுருபரர் பாடல்களில் அத்வைதம் என்னும் விவாதம் இடையில் தேங்கி நின்றது .சில பயணங்கள் ,ஆதி யோகி விவகாரம்,எனது மேஜை கணினியின் ஆரோக்கியம் ஆகியவை தான் இத்தேக்கத்திற்கு காரணம் .கடைசியாக விவாதம் இந்த புள்ளிகளில் நின்றது .ஜடாயு கீழ்கண்ட வாதங்களை வைத்தார் .

1.சைவ சித்தாந்திகள் உபநிஷத் பாஷ்யம் எழுதியிருப்பார்கள் என்பது ஊகமே .அவர்கள் தங்களுடைய வேதாந்த கல்விக்கு அத்வைத பாரமான நூற்களையே பயன்படுத்தியிருப்பர் .
2. வேதாந்தம் என்ற சொல் குமரகுருபரர் காலத்திற்கு முன்னும் பின்னும் பொதுபொருளில் தான் விளங்கியது .ஆனால் அது துறை வல்லுனர்களிடையே மட்டுமே அவ்வாறு புழங்கியது .பாமர ஜனங்கள் வேதாந்தம் என்றால் அத்வைதம் என்றே கருதினர் .
3.//வேதாந்தம் என்ற குடைக்கீழ் தான் உள்ளோம் என்று சைவ, வைஷ்ணவ, துவைத மஹானுபாவர்கள் சொல்வார்களேயானால் அது எனக்குப் பெருமகிழ்ச்சியையே அளிக்கும், புகைச்சலை அல்ல//- அவரது மற்றொரு நிலைப்பாடு .
4.//சங்கரரின் அத்வைத வேதாந்தம் என்பது அதன் முன்னோடித் தன்மை காரணமாகவே ஒரு Benchmark போல அமைந்தது என்பதை எல்லா தத்துவ ஆசிரியர்களுமே ஏற்கிறார்கள். வேதாந்த தத்துவத்திற்கான ஆதார சட்டகமான பிரஸ்தான த்ரயம் (உபநிஷத், பிரம்மசூத்ரம், கீதை) என்பதே சங்கரர் உருவாக்கியது தான்.//

பதில்கள்

1.சைவ ஆச்சார்யர்கள் வேதாந்த நூற்களுக்கு தனி உரைகள் எழுதியிருக்கமாட்டார்கள் என்பது எழுதியிருப்பார்கள் என்பதை விட பலமற்ற ஊகமே 🙂.நாம் ஒரு சிறிய உதாரணத்தை பார்ப்போம் .மாத்வர்கள் குமரில பட்டரின் பட்ட மீமாம்ஸத்தை பூர்வ பக்ஷமாக பாடம் கேட்பது உண்டு .அதாவது பட்ட மீமாம்சத்தில் உள்ள குறைகளை தெரிந்துகொள்ளவும் ,அந்த சித்தாந்திகளை வாதில் வெல்வதற்காகவும் இந்த நூலை படிப்பார்கள் .இத்தகைய ஒரு தேவை மட்டும் தான் அவர்களுக்கு இருந்தது .ஆனால் இதற்காகவே ஸ்ரீ ராகவேந்திரர் “பட்ட சங்கிரஹம் ” என்னும் நூலை எழுதினார் .இன்றளவும் பல மீமாம்சிகர்களுக்கே இந்நூல் பிரமாண நூலாக இருக்கிறது .இது தான் அந்நாளைய பழக்கம் .யாரும் யாரிடமும் அறிவு கடன் வாங்க மாட்டார்கள் .ஸ்ரீ ராகவேந்திரரின் தனி சிறப்பு அவர் பரபக்ஷ நூலுக்கே பாஷ்யம் கண்டார் என்பது .சைவர்கள் வேதாந்த நூற்கள் ஸ்வபக்ஷம் என்னும் எண்ணத்தோடு அவற்றுக்கு பாஷ்யம் எழுதி இருக்க மாட்டார்களா ?ஸ்ரீகண்ட பாஷ்யம் அப்பைய தீக்ஷிதரின் கைவண்ணம் அல்ல என்று ஜடாயு எண்ணினால் அதுவே கூட சித்தாந்த சைவர்களின் நூற்களுள் ஒன்றாகி விடும் .அதை விடுங்கள் ,சிவ ஞான யோகி,அதர்வசிகா ,அதர்வசிர ,ஸ்வேதேஸ்வர ,கைவல்ய உபநிஷத்துக்களை நிர்ணய உபநிஷத்துக்களாக கூறி அவற்றை கொண்டு ஏனையவற்றை சமன்வயம் செய்ய வேண்டும் என்கிறாரே ….தனியான உபநிட விளக்க பாரம்பரியம் இல்லாமல் இப்படி சொல்லி இருக்க வாய்பில்லையே .எனவே எமது நிலைப்பாடு தான் பொருத்தமாக வருகிறது என் எண்ணுகிறேன்
.
2.வேதாந்தம் என்பது பண்டிதரிடையே அத்வைதத்தை சுட்டி காட்டவில்லை என்பதை ஒத்து கொண்டதற்கு நன்றி .குமரகுருபரர் பாமரர் இல்லை என்பதில் நமக்கிடையே வேறுபாடு இருக்காது என்றே எண்ணுகிறேன் .எனவே குமரகுருபரர் வேதாந்தம் என்னும் சொல்லை வேத இறுதியான தத்துவ பகுதிகளை சுட்டி காட்டவே பயன் படுத்தியிருப்பர் என்பது உறுதி .எனவே வேதாந்தம் என்னும் சொல் அத்வைதத்தை குறிக்கிறது என்ற வாதம் அர்த்தமற்றது ஆகி விடும் .
3.ஒரு குடை கீழ் உள்ளவற்றில் அத்வைதம் உட்பட பல மரபுகள் உண்டு .அத்வைதத்தை குடைக்கு வெளியே கொண்டுபோவதோ அல்லது அத்வைதத்தை குடையாக மாற்றுவதோ தான் பிரச்சனை .
4.அத்வைதம் சங்கரருக்கு சில காலம் முன்னரே தோன்றியது .நீங்களே த்ரவிடாச்சாரியாரை குறித்தெல்லாம் கூறி இருக்கிறீர்கள் .சங்கரரும் தமது பூர்வாச்சரியர்களை ,பூர்வ அத்வைதிகளை குறித்து அங்கும் இங்குமாக கூறுகிறார் .பிரஸ்தான த்ரயம் சங்கரரின் கண்டுபிடிப்பல்ல .அவருக்கு முன்னரே அத்வைதிகள் அல்லாத வைதீக தத்துவ ஞானிகள் இருந்துள்ளனர் .உதாரணம் : ப்ரம்ம தத்தர் .
இறுதியாக மறுபடியும் ஒரு விஷயத்தை அழுத்தி கூற விரும்புகிறேன் .”நானே ப்ரம்மம் என்று உரைத்து ஞாலம் பேய்த்தேர் என எண்ணி /ஊனே புகுந்து நின்று உயிர்கட்கு உபதேசங்கள் உரைத்து வரும்/மானா மதி கேடனும் ஆய மாயாவதி பேயாகி /தானே உரைக்கும் அந்நூலின் உண்மை தன்னை சாற்றுவோம் ” என்னும் மரபில் வந்தவர் குமரகுருபரர் .அவர் மரபில் சமரசங்கள் செய்ய விரும்பி இருந்தால் அதனை போகிற போக்கில் இப்படி செய்திருக்க மாட்டார் .

இந்த விவாதம் சுவாரஸ்யமான பல விஷயங்களை வெளிக்கொண்டு வந்தது .ஒரு வகையில் பார்த்தால் ஜடாயுவின் வாதம் சுமார் 100 வருடங்கள் பழமையானது .இந்த வாதத்தின் உருவாக்கத்தை பற்றிய கட்டுரை ஒன்றும் எழுதும் எண்ணம் உள்ளது .அதற்க்கு என் மேஜை கணினியில் நான் எடுத்த குறிப்புகளை ,தரவுகளை மீட்க வேண்டும் .பார்ப்போம்

ஆதி யோகி

ஆதி யோகி விவகாரத்தில் ஜெயமோகன் கூறிய கருத்துக்களுக்கு(http://www.jeyamohan.in/95868#.WTT7TOuGOM9) எதிரான எனது எண்ணத்தை பதிவு செய்வதாக கூறி இருந்தேன்(1/3/17) .அம்முயற்சியின் முதல் பகுதியாக அவரது இறுதி பதிவில் உள்ள விஷயங்களை குறித்து மிகசுருக்கமாக பதிலுரைக்கிறேன் .
1. மைய அமைப்பு : பாரம்பரிய மடங்கள் மைய அமைப்புகளாக இருந்ததை ஜெயமோகன் சுட்டி காட்டுகிறார் .அவையே தொடர வேண்டும் என்பது எனது விருப்பம் .//ஆகவேதான் இந்துமதத்திற்குள் இருந்து ‘எதுவும்’ கிளைத்துவர அனுமதிக்கப்படவேண்டும் என்கிறேன். இஸ்லாமியப் பண்பாட்டுக் கலப்புள்ள ஷிர்டி சாயிபாபா வழிபாடு, மெய்வழிச்சாலை ஆண்டவர் அமைப்பு போன்றவைகூட. அவை விவாதிக்கப்படவேண்டும். மறுதரப்பால் மறுக்கப்படவேண்டும். ஆனால் தடைசெய்யப்படக்கூடாது. எல்லா வகை மீறல்களுக்கும் இதற்குள் இடமிருக்கவேண்டும். ஏனென்றால் ஞானத்தின் பாதை கட்டற்றது.// .யாரும் தடைசெய்யவில்லை .அவர் இது தான் ஹிந்து மதம் என்று கூறுவதை தான் எதிர்க்கிறோம் .Crude ஆன ஒரு உதாரணம் :யார் வேண்டுமானாலும் அல்வா விற்கலாம் .ஆனால் ஆள் ஆளுக்கு ஒரிஜினல் இருட்டுக்கடை அல்வா என்று கடை விரிப்பது மோசடி .மெய்வழி ஆண்டவரை போல ஜக்கியம் என்று அவர் ஒரு மதத்தை தொடங்கி 1500 cc மோட்டார் பைக்கின் மேல் அமர்ந்திருக்கும் அவரது உருவத்தையே பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தாலும் OK .
2.சைவத்தை மாற்றி அமைத்தல் ://அந்தப்போக்குக்கு எப்போதுமே அனுமதியுண்டு இந்துமரபில். அதைத்தான் சொல்கிறேன். மரபான சைவர்கள் அதை மறுக்கலாம், சைவசித்தாந்திகள் எதிர்த்துவிவாதிக்கலாம். அது நிகழவேண்டும் என்கிறேன்.// .மரபானவர்கள் மறுக்கிறார்கள் .அது ஹிந்து மத துரோகமாக கருதப்படுகிறது .fatwa இடும் வல்லமை எல்லாம் ஈஷாவிற்கு வராவிட்டாலும் அது ஒரு மத குறுங்குழுவாக (cult ) மாறி விட்டது அல்லது மாறும் என்பது சரிதானே ?

3.இஷ்டப்படி சிலைகள் : சாந்தானந்தர் ஆகம/தந்த்ர விரோத சிலைகள் எவற்றையும் ஸ்தாபிக்கவில்லை .பஞ்சமுக ஆஞ்சநேயரை குறித்து ,அவரை வழிபடும் மார்கத்தை குறித்து பாஞ்சராத்ர நூற்களிலும் ,தந்த்ர நூற்களிலும் ஏராளமான குறிப்புகள் உண்டு .ஸ்வர்ணாகர்ஷண பைரவரின் விஷயமும் அவ்வண்ணமே .இத்தனையும் ஆதி யோகி என்னும் கருத்தாக்கத்தையும் ஒப்பிடவே முடியாது .

4./கார்ப்பரேட் சாமியார்கள்தான் இனிமேல் எதிர்காலமா?/ -அல்ல என்னும் அவரது பதில் மகிழ்ச்சி தருகிறது .சிலருக்கு கார்ப்பரேட் சாமியார்கள் தேவையாக இருக்கலாம் .ஆனால் அவர் அனைவருக்குமான குரு என்ற வசனங்கள் தான் எரிச்சலடைய வைக்கிறது .

5.நித்தி Vs ஜக்கி : //நித்யானந்தா செய்வது நோய்குணப்படுத்துதல். டிஜிஎஸ் தினகரன் , சாது அப்பாத்துரை, மோகன் சி லாசரஸ் செய்வதுபோல. அவர் தன்னை கடவுள் என்கிறார். அது மோசடி. ஆகவே எதிர்த்தேன்//.நோய் குணப்படுத்துதல் எல்லாம் ஞானாசிரியர்களும் செய்த விஷயம் தானே ?சரி விடுங்கள் ,அதற்காக தான் நித்தியை எதிர்த்தீர்கள் என்றால் நீங்கள் அதற்காக ஜக்கியையும் எதிர்க்க தான் வேண்டும் .நோய் குணபடுத்துதல் ஈஷாவிலும் உண்டு .நித்தி அளவிற்கு ஆற்றல் (?!) இல்லையோ என்னமோ ,இங்கு குறைந்த அளவில் அது நடக்கிறது .

6.//ஜக்கி மீதான எதிர்ப்பை இந்துமதம் மீதான எதிர்ப்பாக ஆக்குகிறேனா?//– இதற்கான பதில் எனக்கும் சம்மதமே

ராமச்சந்திரன் உஷாவின் “கோனாரக் மகாலஷ்மி”

ராமச்சந்திரன் உஷாவின் “கோனாரக் மகாலஷ்மி” (https://www.facebook.com/permalink.php?story_fbid=10208832236060309&id=1146052613&hc_location=ufi)என்னும் சிறுகதையை நேற்று வாசித்தேன் .இந்த சிறுகதை மார்ச் மாத வலம் இதழில் வந்துள்ளது .ஆசிரியரின் முகநூல் பக்கத்திலும் வாசிக்கலாம் .மிகவும் சாதாரணமான இச்சிறுகதை இன்றைய அறிவுஜீவிகளிடமும் சில நவ யுக ஹிந்துத்துவாக்களிடையே காணப்படும் ஒரு விதமான மேட்டிமை மனநிலையை தெரிந்தோ தெரியாமலோ படம் பிடித்து காட்டுகிறது .கதையை ஒரு முறை இந்த சுட்டியில் சென்று வாசித்து விடுங்கள் .இக்கதையை சில பின்-காலனிய கோட்பாட்டு கருவிகளால் ஆராய முடியும்
இனி சிறுகதையில் வரும் இருமைக்களை (binaries ) பார்ப்போம் :
1.பணி புரியும் பெண் X பணிபுரியாத பெண்
2. விமான பயணத்தை தவிர்த்தல் X விமான பயணத்தை விரும்புதல்
3.ரயில் பயணத்தை விரும்புதல் X ரயில் பயணத்தை எதிர்த்தல்
4.Light Traveler X பூஜை பெட்டியை எடுத்துக்கொண்டு அலையும் மடி சஞ்சி பயணி
5.இயற்கை விரும்பி ,இயற்கை காட்சிகளை ரசிக்கும் நபர் X நுண்ணுணர்வு இல்லாதவர்
6.இளையராஜா பாடல்கள் X நெடுந்தொடர்கள்
7.கோதாவரி திரைப்படம் X பக்தி திரைப்படம்

இத்தகைய இருமைகளை குறித்து கூறும் போது அவை உருவாக்கும் வன்முறையை குறித்தும் கூற வேண்டும்
.”Contemporary post-structuralist and feminist theories have demonstrated the extent to which such binaries entail a violent hierarchy, in which one term of the opposition is always dominant (man over woman, birth over death, white over black), and that, in fact, the binary opposition itself exists to confirm that dominance” என Ashcroft et .al கூறுகின்றனர் .
இத்தகைய இருமை நிலைகள் வாயிலாக மிஸஸ் அசோக் (அவருக்கென ஒரு பெயர் கூட இல்லை ) என்னும் பட்டிக்காட்டு மூட பக்தர் வடிவமைக்க படுகிறார் .இச்சிறுகதையில் கதைசொல்லி கைக்கொள்ளும் தொனி ஒரு காலனிய ஆண்டை பாமர இந்தியனை குறித்து பேச கைக்கொள்ளும் தொனி .கதை சொல்லியின் குரலுக்கு 250 வருட பாரம்பரியமாவது உள்ளது .வெள்ளைக்காரனின் ஏளனத்தை சகிக்க இயலாமல் ,ஹிந்து மதம் என்பது சடங்காச்சாரங்களும் விக்கிரஹ ஆராதனையும் உள்ள மூட மதமில்லை என்று நிரூபிக்க புறப்பட்ட ப்ரஹ்ம சமாஜத்தினரின் குரல் தான் அது .சமாஜத்தார் வெள்ளையர்களிடமிருந்து சிரம் தாழ்த்தி பெற்றுக்கொண்ட ஞானம் அது .Edward Said Orientalism நூலில் கூறுவது போல் கீழை நாடுகளின் கலாச்சாரத்தை ,மதத்தை நம்பிக்கைக்குரிய விஷயமாக இல்லாமல் ஆய்வுக்குரிய விஷயமாக(அதன் வாயிலாக கட்டுப்படுத்தவும் ) மட்டும் பார்க்கும் பார்வை .லக்ஷ்மி என்று கூற தெரியாமல் அடுத்தவர்களை கிண்டல் செய்யும் hypocrisy. இதில் வேறொரு வசதியும் உண்டு .மதத்தை அதன் சடங்குகளிடமிருந்து பிரித்து எடுத்து விட்டால் உலக குடிமகனாக /குடிமக்களாக உலா வருவது எளிது .நெற்றியில் சமய சின்னம் தரித்து ,நித்ய பூஜை செய்யும் நபர் எப்படி தன்னை தானே fashionable ஆக காட்டிக்கொள்ள இயலும் ?மேலும் எல்லாவற்றையும் ஒரு அறிவு ஜீவி தனத்தோடு அணுகினால் சமரசங்கள் செய்வது எளிது .உண்மையில் மிஸஸ் அசோக் போன்றவர்களால் தான் ஹிந்து மதம் பிழைத்திருக்கிறது .கதையின் இறுதியில் சிரிப்பது கதை சொல்லி அல்ல .வாசகன் தான் .நவயுக அறிவு ஜீவிகளின் பாசாங்குகளை பார்த்து வரும் வறண்ட சிரிப்பு அது .

இளையராஜா ,அவரது ஆன்மிகம் மற்றும் காப்புரிமை

21/3/17 .இளையராஜா காப்புரிமை விவகாரத்தில் என்னை கவர்ந்தது இளையராஜாவின் நிலைப்பாடோ எஸ் பி பி யின் நிலைப்பாடோ அல்ல .பல பண்டிதர்கள் மற்றும் பாமரர்களின் நிலைபாடுகள் தான் .Cultural Studies , Ethics ,Morality ஆகியவற்றில் ஆர்வம் உடையவன் என்பதால் நம்மவர்களுடைய அறம் சார்ந்த விருப்பு வெறுப்புகள் சுவாரஸ்யமாக இருந்தன .இந்நிலையில் ஓரிருவருடைய நிலை தகவல்கள் நமது சமுதாயத்தின் பொது புத்தியை ஆய்வதற்கான வகை மாதிரிகளாக இருந்தன .அவற்றில் இரண்டு /மூன்று விஷயங்களை எடுத்து ஆராயலாம் என்று எண்ணுகிறேன் .முதலில் அரவிந்தன் கன்னையனது “ரமண மஹரிஷியும் இளையராஜா எனும் போலிச் சாமியாரும் ”
(https://www.facebook.com/photo.php?fbid=10208536401267132&set=a.3507118196271.126776.1221294625&type=3&theater)என்ற பதிவை பார்ப்போம் .தன்னை ஒரு முதலாளித்துவர் என்று அறிவித்து கொள்ளும் அரவிந்தன் இளைய ராஜா காப்புரிமை பெற முயல்வதை தவறென்று கூறவில்லை .ஆனால் இளைய ராஜாவின் ஆன்மீக நிலைபாட்டிற்கும் லௌகீக நிலைப்பாட்டிற்கும் இடையே இருக்கும் முரண்பாடை ,அவர் முன்வைக்கும் பிம்பத்தை தாம் கண்டிப்பதாக கூறுகிறார் .முதலில் அரவிந்தன் வைக்கும் சிறு குற்றச்சாட்டுகளை பார்த்து விடுவோம் .
1) ஆத்ம திருப்தி விவகாரம் : ராஜ் கிரண் தனிப்பட்ட திருப்தி என்னும் பொருளில் இந்த சொல்லை பயன் படுத்தி இருக்கிறார் .ராஜா தனது தத்துவ பள்ளியின் போக்கில் இருந்து ஆத்மாவிற்கு ஏது திருப்தி என்று கேட்டுள்ளார் .நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று ராஜ் கிரண் பதிலுரைத்து சென்றிருக்கலாம் .ஆனால் அவர் ஒருவகையான epiphanyயை அடைந்ததற்கு ராஜா என்ன செய்வார் ?
2) படத்தை மறுத்தது : மேலும் ஒரு sentimental attachment கொண்ட பொருளை அவர் விரும்பவில்லை .அவ்வளவே .உடனே அவர் திருவோடு மட்டும் தான் வைத்திருக்கிறாரா என்று கேட்பதை என்னவென்று சொல்ல ?
3) பாடலாசிரியருக்கு பங்கு + ஏனையோர் பேர்களை கேசட் அட்டையில் போடும் விவகாரம் : பாடலாசிரியர்கள் தனி நீதிமன்ற ஆணை பெறவில்லை .இந்நிலையில் ராஜா அவர்களுக்கு உதவுவதற்கு முன்வருவதில் என்ன தவறு ?அனைவர் பெயரையும் அச்சிட அந்தக்கால ஒலிநாடா அட்டைகளில் இடமிருந்திருக்குமா என்ன ?
4) மேடை கலைஞர்கள் / மெல்லிசை குழுக்கள் பாதிக்கப்படும் : இளையராஜாவின் காப்புரிமை முகவர் தெளிவாக கூறிவிட்டார் .சிறு குழுக்கள் மீது தாங்கள் நடவடிக்கை எடுக்க போவதில்லை என்று .பின்னர் எதற்கு இந்த பொய் பிரச்சாரம் ?
****************************************************************************************************************
இனி முக்கிய பிரச்சனைக்கு வருவோம் : இளையராஜாவின் ஆன்மிகம் ,அதற்கும் அவர் லௌகீகத்திற்கும் உள்ள பெரு முரண் :
அ ) இளையராஜாவை போலி சாமியார் என்று கூறுவதே ஒரு முரண் தான் .அவர் சந்யாச தீக்ஷை ஏதும் பெறவில்லை .கஷாய தாரணமும் செய்யவில்லை .மடம் ஆரம்பித்து யோகா வியாபாரத்தில் ஈடுபடவில்லை .அவருக்கு தெரிந்த வட்டத்தில் சாமியார் என்று அழைக்க படுகிறார் .அரவிந்தனை நான் நல்ல எழுத்தாளர் என்று கூறினால் அதை வைத்து அவர் MFA மாணவர்களுக்கு படைப்பை பற்றி பாடம் எடுக்க செல்வாரா ?சாமியார் பிம்பம் இளையராஜாவிற்கு இருப்பதின் காரணம் அவரது வாழ்க்கை முறை, அவர் சார்ந்த துறையில் கொஞ்சம் வினோதமாக இருப்பதினால் தான் .(சைவ உணவு ,தத்துவ விசாரம் இத்யாதி ).இதனை கொண்டு அவரை சாமியார் என்று முடிவு செய்வதே தவறு .அவர் சாமியாரே இல்லை என்னும் போது எப்படி போலி சாமியாராக முடியும் .அவர் ஆன்மீகத்தில் ,குறிப்பிட்ட தத்துவத்தில் பெரும் விருப்பம் கொண்டவர் .ஆன்மீக தேடல் உடையவர் .அவ்வளவே .
ஆ ) ராஜா அவரது ஆன்மீக பிம்பத்தை வியாபாரத்திற்கு பயன் படுத்துகிறார் .
பதில் : சுரேஷ் வெங்கடாத்ரியும் அரவிந்தனும் வைத்த இந்த குற்றச்சாட்டை பார்த்த போது சிரிப்பு தான் வந்தது .ராஜா பட்டையும் கொட்டையுமாக இருக்கிறார் என்பதற்காகவா நாம் ஹே ராம் பாடல்களை மெச்சுகிறோம்? .அவர் அத்வைதி என்பதனால் தான் பேருந்து ஓட்டுனர்கள் அவர் பாடல்களை தேடிப்பிடித்து சேகரிக்கிறார்களா ?? உண்மையில் ஆன்மீக பிம்பம் திரை துறையில் ஒருவரை தனிமைபடுத்தி ,பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பை ஏற்படுத்தும் .
இ ) இவ்வளவு ஆன்மிகம் பேசுகிறவர் காப்புரிமை எல்லாம் கேட்கலாமா ?
முதலில் இளையராஜாவின் தத்துவ பள்ளி எது என்பதை தெரிந்து கொள்ளுவோம் .எனக்கு தெரிந்த வரையில் ராஜா mysticism மற்றும் ரமணர் வழியிலான அத்வைதம் ஆகியவற்றில் ஈடுபாடு உடையவர் .(அரவிந்தனும் இவ்வாறே புரிந்து கொண்டிருக்கிறார் ).ரமணர் மீண்டும் மீண்டும் சொல்லும் விஷயம் என்னவென்றால் க்ரஹஸ்தர்கள் துறவு மேற்கொண்ட பிறகு தான் ஆத்ம விசாரத்தில் ஈடுபட வேண்டும் என்பதில்லை என்பது தான் .தலைமையாசிரியர் வேலையை விட்டு விட்டு மடத்தில் சேர முயான்றவரிடம் இதை தான் அவர் சொன்னார் .ஒரு வித விலகலோடு உலகியல் வேலைகளை சிறப்பாக செய்யுமாறு வலியுறுத்தினார் .திருவோடு ஏந்தி பிச்சையெடுக்க சொல்லவில்லை .ராமணரே ஒரு நிறுவனத்துடன் தன்னை சம்பந்த படுத்துவதை எதிர்க்கவில்லை .பின்னர் இளையராஜா எதற்காக royalty யை விட்டு கொடுக்க வேண்டும்? .ஒரு குடும்ப தலைவர் என்ற முறையில் செல்வத்தை பாதுகாப்பது அவரது கடமை .அவர் தாமரை இலை நீராக இருக்கிறாரா இல்லையா என்பதை நாம் தீர்மானிக்க முடியாது .பாரம்பரியமான அத்வைத மடங்களே பரமார்த்திக சத்தியத்தையும் வ்யவஹாரிக சத்தியத்தையும் போட்டு குழப்பிக்கொள்வது இல்லை.காஞ்சி ,சிருங்கேரி மடங்களுக்கு இடையே நடை பெற்ற வழக்குகளையும் சட்ட போராட்டங்களையும் நாம் இப்படி தான் புரிந்து கொள்ள முடியும் .அவதூதருக்கு நிகரான வாழ்க்கை வாழ்ந்த சந்த்ரசேகர பாரதியே தமக்கு ஒரு மடாதிபதி என்ற முறையில் சில கட்டுப்பாடுகள் /தளைகள் உண்டு எனக்கூறுகிறார் .எனவே ராஜா ஏன் அனைத்தையும் துறந்துவிட்டு பிச்சை எடுக்க செல்லவில்லை என்னும் கேள்வி அர்த்தமற்றது . (சிறிய digression: ரமணரே ஒரு brand /காப்புரிமையை உருவாக்கியிருக்கிறார் தெரியுமா ? ரமணரின் குழுவினருக்கு பிக்ஷ வந்தனம் செய்வதில் திருவண்ணாமலைவாசிகளுக்கு மிகுந்த விருப்பம் உண்டு .இதனை தெரிந்து கொண்ட வேறு ஒரு குழு ,ரமணரின் சிஷ்யர்கள் செல்வதற்கு முன்னரே அவர்கள் செல்லும் வீதியில் அவர்கள் பாடும் சில பொதுவான தோத்திர பாடல்களை பாடி ஏமாற்றி பிக்ஷையை பெற்று செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர் .இதனை குறித்து ரமணரின் குழுவினர் அவரிடம் முறையிட்ட போது ரமணர் இயற்றியதே “அருணாச்சல அக்ஷர மாலை ” .அன்றிலிருந்து இந்த தோத்திரம் ரமணரின் குழுவினரது தனி அடையாளமானது )
ஈ ) ஆன்மீகத்தை வலியுறுத்தும் இசைமைப்பாளர் ராஜா மட்டும் இல்லையே .ரஹ்மானுக்கும் தான் சூஃபி மரபில் பெரிய ஈடுபாடு உண்டு .ஆஸ்கர் விருதை ஏற்கும் போது ,”எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே ” என்று தமது இறை நம்பிக்கையை பறை சாற்றினார் .(அதனை நான் மிக சிறந்த பிரகடனங்களில் ஒன்றாக கருதுகிறேன் .30,000 சம்பளத்தில் வேலை கிடைத்தவுடன் அல்லது மாலுக்கு ஓசியில் படம் பார்க்க போவதற்கு வாய்ப்பு கிடைத்தவுடன் நெற்றியில் இருக்கும் சமய சின்னத்தை அவசர அவசரமாக அழிக்கும் மூடர்கள் ரஹ்மானிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பல ).ரஹ்மானுக்கும் ஆன்மீக பிம்பம் உண்டு .ஆனால் ,அவரிடம் யாரும் நீங்கள் ஏன் சூஃபி ஞானியை போல் அலைந்து தெரிவதில்லை என்றோ ,ஹராமான திரை துறையில் ஏன் வேலை செய்கிறீர்கள் என்றோ கேட்டதில்லையே .அரவிந்தனுக்கு அத்வைதத்தை பற்றி தெரிவதை விட அதிகமாக இஸ்லாமை பற்றி தெரிந்திருக்கும் .ஆனால் ரஹ்மானை புகழ்வார் ,ராஜாவை இகழ்வார் .ரஹ்மானுக்கு secular scale ,ராஜாவிற்கு spiritual scale .(Digression : ஹிந்துத்வ நண்பர்களுக்கு : ஹிந்து மதம் என்பது ஒரு கலாச்சாரம் ,ஹிந்து மதம் என்பது ஒரு சுத்த சத்துவ நிலை என்றெல்லாம் ஜல்லி அடித்து மந்திர சடங்குகளை ஓரம் கட்டினீர்கள் என்றால் செய்வினையால் பாதிக்க பட்டே மிச்சம் மீதி இருப்பவர்கள் எல்லாம் நிவாரணம் கிடைக்கும் இடத்திற்கு ஓடி விடுவார்கள் .பிரச்சனையில் இருப்பவனுக்கு தேவை தீர்வு .தத்துவ ,பாரம்பரிய பெருமை அல்ல )
உ) அரவிந்தன் இந்த விவகாரத்தில் ஸ்டீவ் ஜாப்சையும் இழுக்கிறார் .முதலாளித்துவ உலகின் பிரதிநிதியாக ,வெற்றியாளராக அவரை முன்னிறுத்துகிறார் .SJ இறந்த போது, தான் எழதிய குறிப்பையும் பகிர்கிறார் .SJ ஜென் பவுத்தத்தை தமது இறுதி நாள் வரை பின்பற்றியவர் என்பதை மறந்து விடுகிறார் .தன மகளை சுமந்துகொண்டிருந்த பெண்ணை தெருவில் விட்ட கதையை எல்லாம் விடுங்கள் ,வாழ்க்கையின் பிற்பகுதியில் கூட ஜென் பவுத்தத்தை தமது உலகியல் வாழ்வில் அவர் கொண்டுவரவில்லை .ஒரு பிக்ஷு வழியே அனைத்தையும் கற்றிருந்தாலும் வியாபாரத்தையும் ஆன்மீகத்தையும் போட்டு குழப்பவில்லை .தனது ஆன்மீக பிம்பத்தை ,ஜென் ஈடுபாடை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டார் ( அவருடையது செவ்வியல் ஜென் .capitalist ஜென் அல்ல .அறுவை சிகிட்சையால் எளிதில் குணப்படுத்தக்கூடிய pancreas புற்று நோயை naturopathy போன்றவற்றால் குணப்படுத்த முயன்று சிக்கி கொண்டதில் இருந்து அவரது நம்பிக்கைகளை புரிந்து கொள்ளலாம் ).தூய ஜென் தத்துவத்தை தியானத்திற்கு பயன் படுத்திக்கொண்டார் .அதனை பெருமையாக வெளியில் சொன்னார் .அத்துடன் வந்த சில தவறான வழிகாட்டுதலால் இறந்தார் .ஆனால் இந்த தத்துவத்தை வியாபாரத்திலோ ,குடும்பவாழ்க்கையிலோ ஜாப்ஸ் பயன்படுத்தவே இல்லை .இதில் அரவிந்தனால் எந்த அற வீழ்ச்சியையும் அடையாளம் காணவும் இயலவில்லை .
****************************************************************************************************************
ராஜா ,ரஹ்மான் ,ஜாப்ஸ் மூன்று பேரின் மத நம்பிக்கைகளையும் தொகுத்து பார்க்கும் போது ,ஒரு வினோதமான விஷயம் தெரிய வருகிறது .மூன்று பேரும் ஏறத்தாழ ஒரே தத்துவத்தை தான் பின்பற்றுகின்றனர் .ராஜாவின் ரமண அத்வைதமும் சூஃபிகளின் அனல் ஹக்கும் பல புள்ளிகளில் சேரும் .ஜென் முறை அத்வைதத்திற்கு மிகவும் நெருக்கமானது எனக்கருதும் ஆய்வாளர்கள் உள்ளனர் .(பார்க்க : “Advaita Vedanta and Zen Buddhism: Deconstructive Modes of Spiritual Inquiry” by Leesa .S.Davis,). Quiescence என்பது மூன்று தத்துவ மரபுகளிலும் முக்கியமான லக்ஷியமாக உள்ளது .இப்போது நம் முன் வரும் கேள்வி எளிமையானது .ராஜா ,ரஹ்மான் , ஜாப்ஸ் ஆகிய மூன்று நபர்களும் ஒரே விதமான தத்துவ ஆன்மீக நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் .அதனை வெளிப்படுத்துகின்றனர் .இவர்கள் மூவருக்குமே ஒரு ஆன்மீக பிம்பம் உள்ளது .ஜாப்ஸ் ரஹ்மான் ஆகியோரை எடைபோடும் போது அவர்களது ஆன்மீக நிலைப்பாடு மற்றும் ஆன்மீக பிம்பத்தை குறித்து அரவிந்தனை போன்றோர் கருத்தில் கொள்வதில்லை .வேறு சிலர் அதனை ஒரு சிறப்பான விஷயமாக கருதவும் செய்கின்றனர் .ஆனால் இளையராஜா விஷயத்தில் அவரது ஆன்மிகம் பிரச்சனைக்குள்ளாக்கப்படுகிறது .அது ஒரு விமர்சன ஆயுதமாக மாறுகிறது .ஏன் இந்த வேறுபாடு ? எனக்கென்னவோ ராஜா தமது ஆன்மீகத்தை ஹிந்து மதத்திற்கு அணுக்கமாக ,ஹிந்து மதத்தின் பிரிவாக வெளிப்படுத்துவது தான் அவர் இந்த அடிப்படையில் குறி வைக்க படுவதற்கு காரணம் என தோன்றுகிறது .ஒரு வேளை அவர் இதே அத்வைதத்தை சூஃபியின் மொழியிலோ ஜென்னின் மொழியிலோ பேசி இருந்தால் அரவிந்தன் கன்னையன் உட்பட பலருக்கு அது உவப்பானதாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன் .