அமிர்தத்தை பொழியும் ஆமை


அ)

தாயம்மா பாட்டியின் 4 1 கதைகள் புத்தகத்தை பத்து / பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு பின் மதிய பொழுதில் சுதர்சன் புத்தகக் கடையில் கண்டெடுத்தேன் . கைவசம் அதிகம் பணம் இல்லாத ஒரு மாதக் கடைசி அது .வழக்கமாக அப்படிப்பட்ட வரண்ட நாட்களில் தான் தீவிரமான இலக்கிய தாகம் ஏற்படும் .அதன் விளைவாக சுதர்சனிற்கு சென்று கையிருப்பைக் கொண்டு ஏதாவது புத்தகம் வாங்க முடியுமா என்று குடைவது உண்டு . அன்று தாயம்மா பாட்டி சொன்ன கதைகள் புத்தகத்தின் பழைய பதிப்பு ஒன்று கிடைத்தது . புத்தகத்தை புரட்டி பார்த்தேன் ; ஒரு பத்தியை வாசிப்பதற்குள் இவர் நம்மவர் என்ற எண்ணம் வந்துவிட்டது . அன்று தொடங்கி இன்றி யுவனது படைப்புகளை குறிப்பாக நாவல்களை தொடர்ந்து வாசிக்கிறேன். யுவனது நாவல்கள் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. அவர் எழுதிய நாவல்களில் நான் ஆகச்சிறந்ததாக கருதுவது ” நினைவுதிர்.காலம் ” என்னும் நாவலைத்தான் . இந்த நூலை குறித்து ஒரு வாசிப்பு அனுபவத்தையாவது எழுதி விட வேண்டும் என்று பல முறை எண்ணியிருக்கிறேன் . இருப்பினும் அதனை செய்ய சிறிய தயக்கம் இருந்தது . ஒரு படைப்பு நமக்கு ஏன் அணுக்கமாக இருக்கிறது என்று விவரிப்பது எளிதான காரியம் அல்ல . நான் விளக்குவதை குறித்து சிந்திக்கவே இல்லை ; விவரிப்பதை குறித்து தான் சிந்திக்கிறேன் . இருப்பினும் அப்படியான ஒரு விவரிப்பு கூட நேரங்களில் வாசிப்பு அனுபவத்தை கெடுத்து விடுமோ என்ற பயமும் இருக்கிறது. சித்ரசலபத்தை பிடித்து உற்று பார்ப்பது போன்ற விஷயம் அது. சலீம் அலியின் வழிமுறைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை . ஆராய்கிறேன் என்ற பெயரில் ஹிம்சை செய்வதை ஆன மட்டும் விட்டு விட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன் . இந்த பின்னணியில் தான் மிகுந்த தயக்கத்துடன் நினைவுதிர் காலத்தை மறுபடியும் வாசிக்கத் தொடங்கினேன் . அடிக்கோடிட பேனாவுடன் படைப்பை அணுகும் போது அது மனதிற்கு இணக்கமான வாசிப்பாக இருப்பதிலை. எனவே அத்தகைய சன்னத்துக்கள எதுவும் இல்லாமலேயே மீண்டும் வாசித்தேன் . நினைவுதிர் காலம் தொட்டதும் உடைந்து போகும் நீர் குமிழி அல்ல என்று தெளிவாக புரிந்தது .

ஆ)

“நினைவுதிர் காலம் ” இசை தொடர்பான , குறிப்பாக ஹிந்துஸ்தானி இசை தொடர்பான இசைக்கலைஞர்கள் தொடர்பான நாவல். எனக்கு இசை தொடர்பாக எதுவும் தெரியாது . திரையிசை பிடிக்கும். ஆனால் அதில் கூட இசையமைப்பாளர் யார் , பாடகர் யார் போன்ற தகவல்களை ஐயம் இல்லாமல் சொல்ல வராது. நினைவுதிர் காலத்தில் சொல்லப்பட்ட பல ஹிந்துஸ்தானி ராகங்களை இணையத்தில் தேடிக் கேட்டேன் . இசை பிடித்திருந்தது . ஆனால் அது மனதிற்கு நெருக்கமாக இருக்கவில்லை . திரையிசை பாடல்களில் கூட மனதிற்கு அணுக்கமான மொழிகளில் பாடல் வரிகளும் இசையும் சேரும் போது தான் என்னால் ரசிக்க முடிகிறது என்பது புரிந்தது . இதைத்தவிர எனக்கு இன்றைய செவ்வியல் இந்திய இசை சார்ந்த உலகு மீது மேடைக்கலைஞர்கள் மீது எல்லாம் எதிர்மறையான எண்ணமும் கடும் விமர்சனங்களும் உண்டு . ( ஒரு சுதந்திர நாட்டில் இருப்பதில் இருக்கும் வசதி என்னவென்றால் ஒரு துறையின் அடிப்படைகள் குறித்து எதுவும் தெரியாவிட்டாலும் அத்துறை தொடர்பாக கருத்து சொல்லலாம் என்பது தான் ) . எனது விமர்சனங்கள் எனது சமயப் பின்னணியில் இருந்து வந்தவை . தாசர்களாகட்டும் , தமிழகத்தில் வாழ்ந்த தியாகையர் போன்றவர்களாகட்டும் சங்கீதத்தை சாதனா மார்க்கமாக கொண்டவர்கள் . தங்கள் ஆன்ம சாதனைக்காக உருகி பாடியவர்கள் . இவர்கள் நிகழத்து கலைஞர்கள் அல்ல . இவர்களது ஆன்மீக உணர்வினால் எழுதியவற்றையும் பாடியவற்றையும் மேடைகளில் சிலர் விற்பனை செய்து பிழைப்பதில் எனக்கு என்றுமே ஒவ்வாமை உண்டு . அடிப்படையில் வணிக நோக்கில் உருவாக்கப்பட்ட திரையிசை பாடல்களை மெல்லிசை குழுவினரை முழுதும் ரசிக்கும் எனக்கு கர்நாடக சங்கீத இசைக்கச்சேரி என்றாலே குமட்டல் வரும். இத்தகைய கச்சேரிகளையும் திருத்தல சுற்றுலாக்களையும் ஆன்மீக வீழ்ச்சியாகவே பார்க்கிறேன் . இது போன்ற பழமைவாத கருத்து கொண்ட எனக்கு எப்படி இசையை சுற்றி ஓடும் இந்த நாவல் பிடித்தது என்று யோசித்து பார்த்தேன் . இரண்டு காரணங்கள் உள்ளன என்று தோன்றியது . நாவலின் கதாநாயகரான நிகழ்த்து வாத்திய கலைஞனான ஹரிசங்கர் தீக்ஷித்தும் கலையை கூறுபோட்டு விற்பதை எதிர்கிறார் என்பது ஒரு காரணம் . எல்லா நல்ல படைப்புகளையும் போல இந்த நாவலும் அதன் அடிப்படை தளத்தை தாண்டிய புரிதல்களை தரும் ஆற்றலோடு இருக்கிறது என்பது மற்றொரு காரணம் . இரண்டாம் உலகப் போரை குறித்து எழுதப்பட்டிருக்கும் பல நல்ல படைப்புகள் ஒரு புள்ளியில் காலாதீத ஆற்றலை பெற்ற போர் என்பதை குறித்த விசாரமாக மாறி பிறகு அதையும் தாண்டி தத்துவ விசாரத்திற்கு வரும் . அது போலத்தான் நினைவுதிர் காலமும் , இந்த நாவல் முன்வைக்கும் கோட்பாடுகள் இசைக்கு மட்டும் அல்ல , எந்த கலைக்கும் பொருந்தும். ஒரு புள்ளியில் கலைக் கோட்பாடு வாழ்க்கை சார்ந்த பார்வையாக மாறவும் செய்கிறது . இக்கட்டுரையில் இதனை ஓரளவிற்கு விரித்து கூற முயல்கிறேன் ,

இ)

நினைவுதிர் காலத்தின் வடிவம் குறித்து முதலில் சொல்ல வேண்டும் . பல நேரங்களில் நாவலாசிரியர் தனது கருத்துக்களை நேரடியாகவோ அல்லது கதாபாத்திரங்கள் வாயிலாகவோ சொல்லும் போது அது காதை அடைக்கும் பரப்புரையாக மாறுவது உண்டு . பல நேரங்களில் ஜெயகாந்தனது நாவல்களை வாசிக்கும் போது ஒருவர் ஒலிபெருக்கி இருப்பதை உணராமல் மேடையில் உரத்து பேசிக்க கொண்டிருப்பதை கேட்க நேருவது போலத் தோன்றும். பரப்புரை என்றல்ல , நாவலாசிரியர் தனது பார்வையை முன்வைப்பதே கூட கயிற்றின் மீது நடக்கும் வித்தையை போன்றது தான். மாந்த்ரீகன் யக்ஷியுடன் இணையும் போது யக்ஷிக்கு சற்றேனும் அசுவாரசியம் ஏற்பட்டால் அந்த நபரை அடித்து கொன்று விடும் என்பார்கள் . இலக்கியமும் சித்தாந்த பார்வையும் இணையும் போதும் அப்படித்தான் . ஒரு துளி அளவு பரப்புரையின் தொனி வந்துவிட்டாலும் வாசிப்பில் அசுவாரசியம் ஏற்பட்டுபடைப்பு இல்லாமல் போய்விடும் ; படைப்பாளி பரப்புரையாளனாக மாறிவிடுவான் . ஒரு நெடிய பேட்டியாக இரு நபர்களது உரையாடலாக இந்த புதினம் அமைந்திருப்பது கச்சிதமான விஷயம் . இந்த வடிவம் தான் படைப்பின் மைய ஓட்டத்திற்கு ஏற்றது . இங்கே இந்த வடிவத் தேர்வு என்பது பரிசோதனை முயற்சி அல்ல ; பறவை கூடடைவதைப் போல அக்கதை அதற்கான சரியான வடிவத்தில் அமர்ந்து விட்டது என்றே தோன்றுகிறது . இந்த வடிவம் தான் சரி என்ற எண்ணம் ஏற்பட்டதை குறித்து யுவன் விளக்கி எழுதியிருக்கிறார் . மற்றொரு விஷயம் , இந்நூலை ஒரு நாவலாகவும் வாசிக்கலாம் ; பல்வேறு குறுங்கதைகளது தொகுப்பாகவும் வாசிக்கலாம் என்பது தான் . யுவன் இயல்பிலேயே சங்கிலி போன்ற வடிவில் கதைகளை சொல்வதில் ஆர்வம் உடையவர். ஒரு சங்கிலியின் ஒவ்வொரு கண்ணிக்கும் தனித்த வடிவமும் இருப்பும் உண்டு . அதே போல அக்கண்ணிகள் இணைந்து மற்றொரு வடிவமும் கொள்கின்றன . இது போல இந்த புதினத்தின் ஒவ்வொரு கதை அத்தியாயமும் அதனளவில் தனி இருப்பை கொண்டது . அவற்றை தனியாக வாசித்தால் கூட முழுமையான இலக்கிய அனுபவத்தை அளிக்க வல்லது. அதே நேரம் அவற்றை சேர்த்து / தொகுத்து வாசிக்கும் போதும் இசைவுடன் இருக்கும் . இது செவ்வியல் தன்மை . இத்தன்மை இருப்பதால் காவியங்களின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு புதுப்படைப்பாக மாற்ற முடிகிறது.
மற்றொரு விஷயம் , இந்நாவலில் தொடக்கம் முதல் இறுதி வரை வரும் இருமைகள். சிவ சங்கர் தீக்ஷித் – ஹரிசங்கர் தீக்ஷித்(பெயர் தொடங்கி குணம் வரை) , இந்திய வாத்தியம்- ஐரோப்பிய வாத்தியம் என்று கணிசமான துருவங்கள் தொடர்ந்து வருகின்றன. ஆனால் இந்த இருமைகள் எல்லா நேரத்திலும் ஒன்றிற்கு ஒன்று எதிரானதாக இருப்பதில்லை . சிவசங்களுக்கும் ஹரிசங்கருக்கும் இடையே இருக்கும் ambivalence அனைத்திலும் இருக்கிறது . சில நேரங்களில் இணைந்தும் , சில நேரங்களில் பிரிந்தும் செயல்பட்டும் சில நேரங்களில் முரணியக்கமாக செயல்பட்டும் கதாபாத்திரங்களும் கருத்துக்களும் இங்கு தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள் . தனது மூத்த சகோதரனது மரணத்திற்கு பிறகு ஹரிசங்கர் வெறுமையை உணர்வதும் இதனால் தான் . பல நேரங்களில் இத்தகைய இருமைகளை பயன்படுத்தி கதை சொல்லும் படைப்பாளிகள் அவற்றை இயந்திரத்தனமாக பயன்படுத்தி “இலக்கிய உற்பத்தியில் ” ஈடுபடுவர் . யுவன் அப்படி எதுவும் செய்யவில்லை . ஒரு வேளை நான் சுட்டிக்காட்டும் இருமைகளை (binaries) கூட அவர் பிரக்ஞை பூர்வமாக எழுதியிருக்க மாட்டார் . கதையின் போக்கில் அவை உருவாகி வந்திருக்கும் . இந்த வடிவமும் நீர் ஒழுக்கு போன்ற உரையாடலும் தத்துவ விசாரத்தின் அடர்த்தியை லகுவாக்குகின்றன .

ஈ)

கலைக்கும் கலைஞனுக்கும் இடையே உள்ள உறவை குறித்த உரையாடல் இந்நூல் முழுவதும் நிரம்பி இருக்கிறது . ஹரிசங்கர் தனது பூர்வீகர்களை குறித்து கூறும் போது தீபக் ராகம் பாடி விளக்கை எரிய வைக்க வற்புறுத்தப்பட்ட தனது மூதாதையரை குறித்து சொல்கிறார் . அரசவையில், தனக்கு எதிரான சதியை முறியடிக்க , கற்ற வித்தை அனைத்தையும் பயன்படுத்தி பல மணி நேரம் அந்த ராகத்தை பாடுகிறார் . ஒரு கட்டத்தில் எதிரில் இருக்கும் விளக்கை தொடுப்பார்க்கும் போது தான் வித்வானுக்கு ஒரு விஷயம் புலனாகிறது . அவரது எதிரிகளுக்கு அவர் மீது அதீத நம்பிக்கை போல . ஆகவே கவனமாக விளக்கில் எண்ணெய்க்கு பதிலாக நீரை நிரப்பி இருந்தார்கள் . அது வரையில் தானது அப்யாச பலத்தாலும் , சங்கீத ஞானத்தாலும் விளக்கை எரிய வைக்கலாம் என்று எண்ணியவர் , அவற்றை எல்லாம் விட்டு சங்கீதத்தில் சரணாகதி அடைகிறார் . தன்னால் முடியும் முடியாது என்பதை எல்லாம் கடந்து சங்கீத சாகரத்தில் அமிழ்கிறார். உபந்யாசகர்கள் சரணாகதியை குறித்து விளக்க திரெளபதி வஸ்த்ராபஹரணத்தை குறித்து சொல்வார்கள் . முதலில் எல்லாம் ஒரு கையால் வஸ்திரத்தை பிடித்துக்கொண்டே க்ருஷ்ணரை பிரார்த்தித்த பாஞ்சாலி ஒரு கட்டத்தில் துச்சாதனனுடனான போராட்டத்தை நிறுத்தி தனது இரு கைகளையும் கூப்பி பகவானை வேண்டினா என்பார்கள் .இனி என்னால் ஆவது எதுவும் இல்லை உன்னால் ஆனால் உண்டு என்னும் கட்டம் வரும் போது பிரச்சனை தீர்ந்து விடும் . இங்கேயும் அதுவே நடக்கிறது . கலைஞனுக்கு ஆணவம் தேவையான விஷயம் . ஞான செருக்கு / கலை செருக்கு இல்லாவிட்டால் சாமானியர்கள் அவனை இழுத்து இறக்கி பிச்சையெடுக்க வைப்பார்கள் .அதனை தவிர்க்க தான் அசாதாரணன் என்னும் எண்ணம் தேவை . ஆனால் கவசமே சுமையாகி விழ வைத்து விடக்கூடாதே . தான் அசாதாரணன் என்று எண்ணும் அதே நேரத்தில் தனது கலை அமானுஷ்யமானது என்று தெளிவும் வேண்டும் என்று ஹரி சங்கர் சொல்கிறார் . தான் இதை செய்கிறேன் என்ற எண்ணம் மாறி தனக்கு மீறிய ஒரு சக்தி தன் வழியாக இதை எல்லாம் செய்கிறது என்ற புரிதல் வரும் நொடியில் இருத்தலிய மூச்சுத்திணறல்கள் எல்லாம் குணமாகிவிடுகிறது .

கலை என்பது கழைக்கூத்து அல்ல ; அது உத்திகளை தெரிந்து கொள்வதாலோ பயிற்சியாலோ மட்டும் வருவதல்ல . தனது சகோதரனது வாசிப்பிற்கும் ஹிமான்ஷுவின் வாசிப்பிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை குறித்து கூறும் போது ஹரிசங்கர் இதனை விளக்குகிறார் . முன்னது அலங்காரங்கள் நிறைந்தது .பின்னது கலைஞனது உள்ளுக்குள் அடங்காமல் இருக்கும் கொந்தளிப்பின் விளைவாக ஏற்படுவது . முன்னதில் இருக்கும் கவனமும் புத்திசாலித்தனமும் எல்லாம் பின்னதில் இருப்பது இல்லை . எளிமையாக சொன்னால் முன்னது நிகழ்த்து கலை ; அதனை அரங்கில் பார்வையாளர்கள் முன்னால் அவர்களை வசப்படுத்தும் நோக்கில் தான் செய்ய முடியும். பின்னது ஆத்ம சஞ்சாரம் , அது எங்கு நிகழும் எவ்வாறு நிகழும் என்பது அந்த கலைஞனுக்கே தெரியாது . நல்லூழ் கொண்டவர்கள் சில நேரங்களில் கலை நிகழும் அத்தருணத்தில் அங்கிருந்து அதனை அனுபவிக்க முடியும் . புத்திசாலியான தொழில்நுட்ப வல்லுனருக்கும் கலைஞனுக்கும் இடையே உள்ள வேறுபாடு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்படுகிறது . ஹிமான்ஷு சிவசங்கரை குறித்து சொல்கிறார் :
” கைக்கு களிமண் கிடைத்தால் இஷ்டம் போல பொம்மை செய்ய கிளம்புகிறவன் தானே கலைஞன் ? சக்கரத்தையும் கழியையும் தேடிப் போகிற குயவன் – எத்தனை கச்சிதமாக செய்யட்டுமே , அது பானை தான் . பயன்பாட்டிற்கு அனுகூலமாக இருக்கும் ; ஒரு போதும் கலை பொருள் ஆகாது”

பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய வரிகள் இவை. இவ்வரிகளை இலக்கியத்துடனும் பொருத்தி பார்க்கலாம். எது இலக்கியம், யார் இலக்கியவாதி என்று புரிந்து கொள்ள முயலும் போது சில இடர்கள் வருவதுண்டு . மொழியாளுமையோ , கூர்மையான வாக்கிய அமைப்புகளோ , கச்சிதமான வடிவமோ மட்டும் இருப்பதாலேயே ஒரு படைப்பு இலக்கியம் ஆவதில்லை . இவற்றை செய்ய முடியும் என்பதாலேயே ஒருவர் இலக்கிய படைப்பாளி என்று எண்ணுவதும் தவறு . இஷ்டம் போல பொம்மை செய்யக் கிளம்பும் பித்தர்களால் தான் பேரிலிக்கியம் பிழைத்திருக்கிறது . இந்த படைப்பை வாசகர்கள் / பிற இலக்கியவாதிகள் எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்று எண்ணம் உதித்தால் பித்து நிலை நீங்கி கலைஞன் நிகழ்த்து கலைஞனாகிவிடுவான் . பிறகு நடப்பது எல்லாம் கைத்தட்டலுக்காக காட்டப்படும் வித்தைகளே .

கலைஞன் மீது செய்யப்படும் மிகப்பெரிய சித்ரவதைகளில் ஒன்று அவனை போராளியாக பரப்புரையாளனாக மாற்ற முயல்வது . சமூக அக்கரையுடன் இருக்கும் படைப்பு என்ற அளவுகோல் பயன்படுத்தப்பட தொடங்கி நூறு வருடங்களாவது ஆகியிருக்கிறது . ஆனால் தன்னை குறித்த பிரக்ஞையே இல்லாத கலைஞனிடம் சமூக பிரக்ஞையை கேட்டு உலுக்குவதில் உள்ள மூடத்தனத்தை ஹரிசங்கர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் நிகழ்த்து கலைஞனுக்கு இதில் எல்லாம் எந்த பிரச்சனையும் இருப்பது இல்லை. அவ்வப்போது நாடி பிடித்து அந்த அந்த காலக்கட்டத்திற்கு ஏற்ற அரசியல் சரிகளை கூவி பிழைப்பை நடத்திக்கொள்வது தனது திறமை என்றே எண்ணுவான்.

ஒரு கலைபடைப்பு என்பது எப்போதும் ராஜ வீதியில் நடமாடும் பட்டத்து யானையாக இருக்க வேண்டியதில்லை . அதற்கு நேர் மாறாக மிக மிக நுட்பமாகவும் இருக்கலாம் . “பூச்சி மிரளாத வண்ணம் மணியை அதிர்விக்க முடியுமா என்பது தான் இசைக்கலைஞன் முன்பு உள்ள பெரிய சவால் ” என்கிறார் ஹரிசங்கர். பூச்சி மிரளாத வண்ணம் எழுப்பட்ட மணியோசை என இந்த புதினத்தை சொல்வேன் .


கலை அந்தரங்கமானது என திடமாக நம்பும் கலைஞனால் எவ்வாறு அக்கலையுலகிற்குள் ரசிகர்களையோ / வாசகர்களையோ விட முடியும் என்ற கேள்வி எழுகிறது . ஹரி சங்கர் சொல்கிறார் : ” எதிர்பார்த்ததை விட வாசிப்பு பிரமாதமாக அமைந்துவிட்டது என்று நானே உணரும் நாட்களில் பொது மேடையில் அம்மணமாக நின்று திரும்பிய மாதிரி ஒரு கூச்சம் நிரம்பியிருக்கும் மனதில். அடுத்த நாலைந்து நாட்களுக்கு யாரும் வந்து சந்திக்காதிருந்தால் நன்றாய் இருக்குமே என்று தோன்றும் “. நல்ல கலைஞர்கள் / எழுத்தாளர்கள் தங்களது ரசிகர்களை எதிர்கொள்ளும் போது தப்பி ஓடத்தயாரான மானைப் போல நிற்பார்கள் . அதற்கு காரணம் இது தான் . தனது கலையுலகிற்குள் ஒருவரை விடுவது என்பது அவர் முன் நிர்வாணமாக நிற்பது போன்றது தான்.

நாவலின் நாயகனான ஹரிசங்கர் பல்வேறு துரோகங்களை சந்தித்தவர் . ஏராளமான மூடிய கதவுகளை பார்த்தவர் . அவரது திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை . சொந்த சகோதரனாலேயே அவரது வாய்ப்புகள் பறிபோயின . இத்தனையும் இருந்தும் அவருக்கு யார் மீதும் எந்த கோபமும் இல்லை . க்ரோதமும் இல்லை . எந்த புகார்களும் இல்லை. இது விரத்தியால் ஏற்பட்ட விட்டேத்தியான மனநிலை அல்ல . புரிதலால் ஏற்பட்ட பேரமைதி . இலங்கையில் வாழ்ந்த யோக சுவாமிகள் என்பவரது ஆப்த வாக்கியம் ஒன்று உண்டு . ” ஒரு பொல்லாப்பும் இல்லை “. இந்த வாக்கியத்தின் வெவ்வேறு வடிவங்களை இந்த நாவல் எங்கும் காண முடிகிறது . ” இசை கேட்பவருக்கு அமிர்தம் ; ஆனால் வழங்கிறவர்களுக்கு அமிலம் ” என்று வரி நினைவுதிர்காலத்தில் வருகிறது . இசை என்றல்ல ; எல்லா கலையும் அப்படித்தான். நமக்கு அமிர்தம். கலைஞனுக்கு அமிலம் . அமிலத்தை தினசரி கையாண்டாலும் ஆன்மா அரித்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான் சவால். ஹரிசங்கருக்கு அது கை கூடியிருக்கிறது . அமிர்தத்தை அளிப்பது தான் அல்ல என்று எணணத் தொடங்கினால் அமிலத்தை தேக்கிவைக்க வேண்டிய கட்டாயமும் வராது . இதைத் தாண்டி ” ஆமைகள் வெல்லும் பந்தயங்களும் உண்டு ” என்ற தெளிவு . இவையே கசப்பின்றி ஹரிசங்கரை வாழவைக்கிறது .

உ)

ஹரிசங்கரது தெளிவு ஒட்டுமொத்த படைப்பிற்கும் சாந்த ரசத்தை தருகிறது . சுக துக்கம் என்னும் இருமைகளைத் தாண்டி , காமக்ரோதங்களால் பாதிக்கப்படாமல் அதிருப்தியில்லாமல் கொந்தளிப்பு இல்லாமல் தத்துவ ஞானத்தால் ஏற்படும் பேரமைதியை ஒரு படைப்பில் பிரதிபலிக்க செய்வதே சாந்த ரசத்தை ப்ரதர்சிக்க வைக்கும் முறை என்பார்கள் . அது மிகவும் கடினமான விஷயம் .அது இந்த படைப்பில் நடந்திருக்கிறது,

இந்த இறுதி பத்தியில் ஹரிசங்களுக்கும் யுவன் சந்த்ரசேகருக்கும் இருக்கும் ஒற்றுமைகளை பட்டியலிட கை துறுதுறுக்கிறது . ஆனால் அதற்கான அவசியம் இல்லை என்றும் தோன்றுகிறது . யுவனால் “பூச்சி மிரளாத வண்ணம் ” மணியை அதிர்விக்க முடிகிறது. அமிலத்தை தேக்கிக் கொள்ளாமல் அமிர்த்தத்தை வழங்கும் ஆமையாக இருக்க முடிகிறது . அந்த வித்யையை சொல்லும் படைப்பு என்பதால் நினைவுதிர் காலம் யுவன் என்னும் பெருங்கலைஞனது உச்ச படைப்புகளில் ஒன்றாக சுடரென ஒளிர்கிறது .

Leave a comment